நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், அனைத்து மாநில அரசுகளும் உரிய தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியா, அனைத்து மாநில மருத்துவத்துறை அமைச்சர்களுடன் ஏற்கனவே காணொலி மூலம் ஆலோசனை நடத்தி இருந்தார். மாநிலங்கள் விழிப்புடன் இருக்கவும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தயார் நிலையையும் வைத்திருக்கவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அறிவுறுத்தினார். மேலும், இன்றும், நாளையும் (ஏபரல் 10, 11ஆம் தேதிகளில்) அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை ஒத்திகை மேற்கொள்ளும்படி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது.
அதன் அடிப்படையில் நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டமைப்புகள் குறித்து ஒத்திகை நடத்தப்பட்டது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சிவில் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை ஒத்திகையின் போது மருத்துவர்கள் எண்ணிக்கை, ஆக்சிஜன் வசதி உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள காந்தி மருத்துவமனையில் மருத்துவ ஆக்ஸிஜன் கையிருப்பு, நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள மருத்துவமனையில் கொரோனா தொற்றாளருக்கு அவசர சிகிச்சை அளிப்பது குறித்து மருத்துவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. பிகார் மாநிலம் பாட்னாவில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிக்கு ஆக்ஸிஜன் உதவியுடன் சிகிச்சை அளிப்பது குறித்து ஒத்திகை நடத்தப்பட்டது.
இதையும் வாசிக்க: தமிழகத்தில் 2 ஆயிரத்தை நெருங்குகிறது கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை - இன்றைய பாதிப்பு நிலவரம்?
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தயார் நிலையில் வைத்திருக்கும் வகையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கொரோனா தடுப்பு ஒத்திகை நடைபெற்றது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவருக்கு சிகிச்சை அளிப்பது குறித்து அப்போது பயிற்சி அளிக்கப்பட்டது. சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் நடைபெற்ற கொரோனா தடுப்பு தயார் நிலை குறித்த ஒத்திகையை மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் ஆய்வு செய்தார்.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், அரசு சார்பில் 78 இடங்களில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை மையங்கள் தயார் நிலையில் இருப்பதாகத் தெரிவித்தார். சுமார் 64 ஆயிரத்து 281 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளதாகவும், தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட யாருக்கும் ஆக்சிஜன் வசதி தேவை என்ற அவசியம் ஏற்படவில்லை என்றும் அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Corona