ராகுல் காந்தியின் எம்.பி பதவி தகுதி நீக்கத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருநாவுக்கரசர், கார்த்திக் சிதம்பரம் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் பலர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரியில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் 100க்கும் மேற்பட்டோர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். பேரணியில் ஈடுபட்ட காங்கிரஸ் நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர். ஹிட்லர், முசோலினி போல பிரதமர் நரேந்திர மோடி நடந்து கொள்வதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
சிதம்பரத்தில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்றபோது, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், பாஜக தன்னுடைய புதைக்குழியை தோண்டிக்கொள்வதில் ஆர்வமாக இருப்பதாக தெரிவித்தார்.
திருவள்ளூர் ரயில் நிலையத்தில் ராகுல் காந்திக்கு இழைக்கப்பட்டது அநீதி என கூறி மாவட்டத் தலைவர் ஏ. ஜி சிதம்பரம் தலைமையில் சத்யாகிரக போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சி மாநில செயல் தலைவர், திருவள்ளூர் எம்பி ஜெயகுமார், பொன்னேரி எம் எல் ஏ துரை சந்திரசேகர், நகர்மன்ற காங்கிரஸ் கவுன்சிலர் ஜான் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்றனர்.
சேலத்தில் மேற்கு மாவட்டத் தலைவர் ஜெயக்குமார் தலைமையில் 200 க்கும் மேற்பட்டோர் இந்த அறவழி போராட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த அறவழிப் போராட்டத்தில் மாவட்டப் பொருளாளர் எம்.எம்.ரத்தினம், எடப்பாடி நகர தலைவர் நாகராஜன், உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பழைய பெங்களூர் சாலையில் ராம் நகர் அண்ணா சிலை முன்பு, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் எஸ் ஏ முரளிதரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், ஓசூர் மாநகர தலைவர் தியாகராஜன் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் கண்டன உரையாற்றினார்கள்.
இந்நிலையில் இன்று திருச்சி மாவட்ட காங்கிரஸ் சார்பில் திருச்சி மெயின் கார்டுகேட் பகுதியில் உள்ள காந்தி சிலை முன்பு மாநகர் மாவட்டத் தலைவர் ஜவகர் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் புறநகர் மாவட்டச் செயலாளர்கள் கலை, கோவிந்த ராஜ், மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். அதேபோல, தமிழகத்தின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடைபெற்றது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Congress