ஆணவக் கொலைகளை தடுக்க கடுமையான சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது- "கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகில் உள்ள அருணபதி கிராமத்தைச் சேர்ந்த தண்டபாணி (50) அவரது மகன் சுபாஷ் (25) சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டதால், அவரையும், அவரது மருமகள் அனுசூயா ஆகியோரையும், தண்டபாணியின் தாயார் கண்ணம்மாள் (70) வீட்டுக்கு வஞ்சகமாக வரவழைத்து, அவர்களிடம் பாசம் காட்டி ஏமாற்றி, அவர்கள் அசந்து தூங்கும் நேரத்தில் வெட்டிப் படுகொலை செய்துள்ளார்.
தண்டபாணியின் கொலை வெறித் தாக்குதலை தடுத்த அவரது தாயாரையும் வெட்டியுள்ளார். இந்த சாதி வெறித் தாக்குதலில் கண்ணம்மாள், சுபாஷ் இருவரும் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துவிட்டனர். மருமகள் அனுசூயா வெட்டுப்பட்ட படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார் என்கிற செய்தி மிகுந்த கவலையளிக்கிறது.
சாதி வேற்றுமைகள் களையவும், தீண்டாமை முறையை தடுக்கவும் சான்றோர்களும், சீர்திருத்த இயக்கத் தலைவர்களும் கடுமையாக போராடி, தமிழகத்தின் சமூக வாழ்வில் முன்னேற்றம் கண்டுள்ளனர். பகுத்தறிவுக்கு ஒவ்வாத சாதி, மதவெறி கருத்துக்களும், வெறுப்பு அரசியலும் பரப்பப்படுவதால் ஆணவப் படுகொலைகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. சில நாட்களுக்கு முன்பு கிருஷ்ணகிரியில் காதல் தம்பதிகள் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து சாதி மறுத்து இல்லறம் ஏற்ற இளைஞர், 20 நாளில் கொடூரமாக கொல்லப்பட்டிருப்பது சட்டத்தின் ஆட்சிக்கு சவாலாகும். மூடப்பழக்க வழக்கங்களை அழித்து, அறிவியல் கண்ணோட்டம் வளர்க்கும் சமூக சீர்திருத்தப் பணிகளுடன், ஆணவப் படுகொலைகளை தடுக்கும் வலுவான தனி சட்டம் ஒன்றை தமிழக அரசு நடப்புக் கூட்டத் தொடரில் நிறைவேற்ற வேண்டும்". இவ்வாறு அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CPI