உள்நாட்டு நிலக்கரி உற்பத்தியை அதிகரிப்பதில் மத்திய அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. 6வது நிலக்கரி சுரங்க ஏலத்தில் தேர்வான 29 நிறுவனங்களுடன் மத்திய அரசு கையெழுத்திட்டுள்ள நிலையில், சுரங்கங்களின் நிலக்கரி விற்பனை தொடர்பான 7வது சுற்று ஏலம் கடந்த மார்ச் 29ஆம் தேதி தொடங்கியது. அதன்படி, ஜார்கண்ட், சத்தீஸ்கர், ஒடிசா, ஆந்திரா, தெலங்கானா, தமிழ்நாடு, பீகார் உள்ளிட்ட 11 மாநிலங்களில் 106 நிலக்கரி சுரங்கங்கள் அமைக்க ஏலம் கோரப்பட்டுள்ளது.
குறிப்பாக, தமிழ்நாட்டில் தஞ்சாவூர், அரியலூர், கடலூர் மாவட்டங்களில் புதிதாக நிலக்கரி சுரங்கங்கள் அமைக்க ஏலம் கோரப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் வடசேரி பழுப்பு நிலக்கரி திட்டம் என்ற பெயரில் வடசேரி, மகாதேவபட்டணம், உள்ளிகோட்டை, கூப்பாச்சிகோட்டை, பரவன்கோட்டை, கீழ் குறிச்சி, அண்டமி, கருப்பூர், பரவத்தூர், கொடியாளம், நெம்மேரி ஆகிய 11 கிராமங்களில் நிலக்கரி வெட்டி எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல, கடலூர், அரியலூர் மாவட்டங்களிலும் நிலக்கரிச் சுரங்கம் அமைக்க மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது.
மத்திய அரசின் இந்த அறிவிப்பு தமிழ்நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு டெல்டா பகுதி விவசாயிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். அதேபோல, தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இன்று நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தில் இந்த விவகாரம் குறித்து அனைத்து கட்சி உறுப்பினர்களும் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தனர்.
கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்து பேசிய காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வப் பெருந்தகை, ‘மாநில அரசை கலந்தாலோசிக்காமல் டெல்டா மாவட்டத்தில் நிலக்கரி எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்திருப்பது மாநில சுயாட்சிக்கும் ஜனநாயகத்திற்கும் எதிரானது. மாநில சுயாட்சிக்கு எதிராக தொடர்ந்து மத்திய பாஜக செயல்பட்டு வருகிறது. 33 லட்சம் மெட்ரிக் டன் நெல் உற்பத்தி மற்றும் தானியங்களை உற்பத்தி செய்கிற இடமாக டெல்டா இயங்கிக் கொண்டிருக்கிறது.
சூரிய ஒளியிலோ, கடல் அலையிலோ மின்சாரம் தயாரிக்க முயற்சிகளை செய்யாமல் கடலூர் மாவட்டம், டெல்டா மாவட்டங்கள் பாதிக்கக்கூடிய அளவில் இந்தத் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. நிலக்கரி துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி எந்த வகையில் இந்த திட்டத்தை அனுமதித்தார் என தெரியவில்லை.
எனவே ஜனநாயகத்தை காக்கும் வகையில் தமிழக அரசிடம் கலந்து ஆலோசித்து இந்த திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்’ என்று தெரிவித்தார்.
நிலக்கரிச் சுரங்க விவகாரம்- நாடாளுமன்றத்தில் தி.மு.க கவன ஈர்ப்பு தீர்மானம்
தொடர்ந்து பேசிய அ.தி.மு.க எம்.எல்.ஏ காமராஜ், ‘பொன் விளையும் பகுதியான டெல்டா பகுதியில் நிலக்கரி எடுப்பது தொடர்பான அறிவிப்பு மற்றும் டெண்டரை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். கடந்த ஆட்சியில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது.
டெண்டர் கோருவதற்கான நடைமுறை ஓராண்டாக நடைபெற்று வரும் நிலையில் அரசுக்கு எப்படி தெரியாமல் போனது? பல சூழ்நிலைகளால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் கோரப்பட்டுள்ள டெண்டரை நிறுத்துவதற்கு மத்திய அரசுக்கு கடுமையான அழுத்தத்தை கொடுக்க வேண்டும்’ என்று தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.