முகப்பு /செய்தி /தமிழ்நாடு / அதிமுக யாருக்கு? பொதுக்குழு தீர்மானங்கள் வழக்கில் இன்று தீர்ப்பு - எகிறும் எதிர்பார்ப்பு..!

அதிமுக யாருக்கு? பொதுக்குழு தீர்மானங்கள் வழக்கில் இன்று தீர்ப்பு - எகிறும் எதிர்பார்ப்பு..!

இபிஎஸ் - ஓ.பி.எஸ்

இபிஎஸ் - ஓ.பி.எஸ்

பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிடுவதற்கான நிபந்தனைகளை நீக்கினால், பொதுச் செயலாளர் பதவிக்கு தான் போட்டியிடத் தயார் - ஓ.பன்னீர்செல்வம்

  • Last Updated :
  • Chennai, India

அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடைவிதிக்கக் கோரியும், பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்துசெய்யக் கோரியும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.

சென்னையில் கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில், ஒற்றைத்தலைமையை கொண்டுவருவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ஜூலை 11-ல் நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டம் செல்லும் என்று உத்தரவிட்டது. அதேநேரம், அந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லுமா என்பதை உயர்நீதிமன்றம் தான் முடிவுசெய்ய வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதனடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் மனுக்களை தாக்கல் செய்தனர். இந்நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் அறிவிக்கப்பட்டு, அதில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் மட்டுமே மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து, பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடைவிதிக்கக் கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இதனை கடந்த 19-ம் தேதி விசாரித்த நீதிபதி குமரேஷ் பாபு, பொதுச் செயலாளர் தேர்தல் நடவடிக்கைகளை தொடர அனுமதித்தார். ஆனால், தேர்தல் முடிவுகளை வெளியிட தடை விதித்தார். இதனைத் தொடர்ந்து, இரு வழக்குகளையும் ஒன்றாக இணைத்து கடந்த 22-ம் தேதி நீதிபதி விசாரித்தார். அப்போது, அனைத்து தரப்பினரும் 7 மணிநேரங்களுக்கு வாதங்களை முன்வைத்தனர்.

ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார், 2026-ம் ஆண்டுவரையான காலத்துக்கு ஒருங்கிணைப்பாளர் பதவி உள்ள நிலையில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதாக பொய் செய்தி பரப்பி வருகிறார்கள் என்று கூறினார்.கட்சியின் எதிர்கால நலன் கருதியே இரட்டைத் தலைமை அவசியம் என முடிவெடுக்கப்பட்டதாகவும், இதனை தேர்தல் ஆணையமும் அங்கீகரித்ததாகவும் ஓ.பிஎஸ் தரப்பு வழக்கறிஞர் குறிப்பிட்டார்.

Also Read: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 முறைகேடு..? சட்டப்பேரவையில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்த இபிஎஸ்

ஒருங்கிணைப்பாளரை நீக்குவதற்கு கட்சியில் எந்த விதியும் இல்லாத நிலையில், சாதாரண உறுப்பினர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கான விதிகளின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் எடுத்துரைக்கப்பட்டது.

இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட வேண்டும் என்றும், தீர்மானங்களுக்கு தடைவிதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. பொதுச் செயலாளர் இருக்கையில் எடப்பாடி பழனிசாமி அமர்வதற்காகவே தற்போது பொதுச் செயலாளர் தேர்தலுக்கு கடும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிடுவதற்கான நிபந்தனைகளை நீக்கினால், பொதுச் செயலாளர் பதவிக்கு தான் போட்டியிடத் தயார் என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் தங்களிடம் விளக்கம் கேட்காமல் கட்சியை விட்டு நீக்கியிருப்பதாக வாதிட்டனர்.

பின்னர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், உயர்மட்ட அளவில் முடிவெடுக்கும் அதிகாரம் பொதுக்குழுவுக்கு இருப்பதாகவும், இதன் முடிவுகளுக்கு கட்டுப்பட்டவர்களே கட்சியில் நீடிக்க முடியும் என்றும் எடுத்துரைத்தார். ஜூலை 11-ல் நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால், அன்றைய தினம் கொண்டு வரப்பட்ட தீர்மானங்களும் செல்லும் என்று தெரிவிக்கப்பட்டது.

top videos

    மீண்டும் ஜெயலலிதா ஆட்சி ஏற்பட வேண்டுமானால், வலிமையான ஒற்றைத்தலைமை வேண்டும் என்று பொதுக்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் ரத்துசெய்யப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.இதனைத் தொடர்ந்து, தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இன்று காலை 10.30 மணிக்கு நீதிபதி குமரேஷ் பாபு தீர்ப்பு அளிக்க உள்ளார். இது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    First published:

    Tags: ADMK, Chennai High court, Edappadi Palanisami, Tamil News