அதிமுக பொதுக்குழு தீர்மானம் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த வழக்குகளின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இருதரப்பும் எழுத்துப்பூர்வமாக வாதங்களை வெள்ளிக்கிழமை காலைக்குள் தாக்கல் செய்ய நீதிபதி குமரேஷ் பாபு உத்தரவிட்டுள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை கோரி ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்கள், உயர்நீதிமன்றத்தில் நீதிபதி குமரேஷ் பாபு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் குரு கிருஷ்ணகுமார் வாதங்களை முன் வைத்தார். அப்போது அவர், தகுதி நீக்கம் செய்து விட்டு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதி ஆகிவிட்டதாக கூறுவதை சட்டப்படி ஏற்றுக்கொள்ள முடியாது என்று வாதிட்டார்.
இடைக்கால பொதுச் செயலாளரை பொதுக்குழு தேர்வு செய்தது செல்லாது எனவும் கட்சிக்குள் எடுக்கும் முடிவுகள் விதிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும் என்றும் ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் கூறினார்.உட்கட்சி விவகாரங்களில் தலையிட முடியாது எனக் கூறுவதற்கு, அரசியல் கட்சிகள் சங்கங்களோ, கிளப்களோ அல்ல என்றும் வாதிட்டார்.
எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளர் இருக்கையில் அமர்வதற்காக, தற்போது பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட கடும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதால் கட்சி அடிப்படை உறுப்பினர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளதாகவும் வாதிடப்பட்டது.
மேலும், பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிடுவதற்கான நிபந்தனைகளை நீக்கினால் பொதுச்செயலாளர் பதவிக்கு தாம் போட்டியிட தயார் எனவும், கட்சியின் உறுப்பினர்கள் பட்டியலை வெளியிட்டு பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட அனுமதித்தால், வழக்கை திரும்பப் பெற தயார் எனவும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வாதங்கள் முன் வைக்கப்பட்டன.
இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு நீதிமன்றம் தடை விதிக்க முடியாது என ஈபிஎஸ் தரப்பு நீதிமன்றத்தில் வாதங்களை முன்வைத்தனர். திமுகவை எதிர்கொள்ள வலிமையான ஒற்றைத் தலைமை வேண்டும் என்ற நோக்கத்தில் ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகள் ரத்து செய்யப்பட்டதாக தெரிவித்தார்.
மேலும், பதவிகள் ரத்து செய்யப்பட்டதே தவிர அவை காலாவதியாகவில்லை என்றும், ஓபிஎஸ் தான் தனக்கென தனி கட்சியை நடத்தி, நிர்வாகிகளை நியமித்திருக்கிறார் என்றும் வாதிடப்பட்டது. உயர்மட்ட அளவில் முடிவெடுக்கும் அதிகாரம் பொதுக்குழுவுக்கே உள்ளது என வாதிட்ட ஈபிஎஸ் தரப்பு,
பொதுக்குழு உறுப்பினர்களின் குரலை ஒடுக்கும் வகையில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தெரிவித்தது. மேலும் தன்னுடைய சொந்த தம்பியை எந்த விளக்கமும் கேட்காமல் கட்சியை விட்டு நீக்கியவர் தான் ஓ.பி.எஸ் என நீதிமன்றத்தில் ஈபிஎஸ் தரப்பு வாதம் செய்தனர்.
அதிமுக பொதுக்குழுவின் முடிவே இறுதியானது என்றும் இந்த முடிவுகளுக்கு கட்டுப்பட்டவர்களே கட்சியில் நீடிக்க முடியும் என்றும் ஈபிஎஸ் தரப்பு குறிப்பிட்டது. ஜூலை 11 அன்று நடைபெற்ற பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால் அன்று கொண்டு வரப்பட்ட தீர்மானங்களும் செல்லும் எனவும் ஈபிஎஸ் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அனைத்து தரப்பு வாதங்கள் நிறைவு பெற்றது.
இதையடுத்து நீதிபதி குமரேஷ் பாபு, இரு தரப்பும் எழுத்து பூர்வமான வாதங்களை வெள்ளிக்கிழமை காலைக்குள் தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: ADMK, Chennai High court, OPS - EPS