முகப்பு /செய்தி /தமிழ்நாடு / விசாரணைக் கைதிகள் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம் - சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றம்

விசாரணைக் கைதிகள் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம் - சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றம்

பல்வீர் சிங்

பல்வீர் சிங்

விசாரணைக் கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம் சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் விசாரணைக் கைதிகளின் பற்களைப் பிடுங்கி கொடூரமாக துன்புறுத்தியதாக உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் மீது குற்றச்சாட்டு எழுந்தது. அவர் மீது பாதிக்கப்பட்ட 8-க்கும் மேற்பட்டவர்கள் புகார் அளித்தனர். இந்த விவகாரம் மாநில அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் ஏ.எஸ்.பி-யாக இருந்த பல்வீர் சிங், விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய குற்றச்சாட்டில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து, இந்தப் புகார் தொடர்பாக உதவி ஆட்சியர் விசாரணை நடத்தினர். அவருடைய விசாரணையில் பாதிக்கப்பட்டவர்கள் பாதிப்புகள் குறித்து நேரில் ஆஜராகி விளக்கமளித்தனர். அதனைத் தொடர்ந்து, இந்தப் புகார் தொடர்பாக மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியான அமுதா விசாரணை நடத்தி வந்தார்.

அம்பாசமுத்திரம் அலுவலகத்தில் கடந்த 10-ம் தேதி அமுதா தனது விசாரணையைத் தொடங்கினார். ஆனால், விசாரணைக்கு யாரும் ஆஜராகவில்லை. பின்னர், பாதிக்கப்பட்டவர்கள் ஒவ்வொருவராக வந்து தங்களுக்கு ஏற்பட்ட துன்புறுத்தல்கள் குறித்து விவரித்தனர். அமுதாவின் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் பல்வீர் சிங் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்தநிலையில், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி பிரிவு காவல்துறைக்கு மாற்றப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘அம்பாசமுத்திரம் காவல் உதவி கண்காணிப்பாளர் பல்வீர் சிங் மற்றும் காவல் அலுவலர்கள், சிலர் மீது தாக்குதல் நடத்தியதாக கூறிய புகார், மாவட்ட குற்றப் பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு மேற்படி வழக்கு தற்போது திருநெல்வேலி மாவட்ட குற்றப் பிரிவு காவல் துணைக் காண்காணிப்பாளர் புலன் விசாரணையில் உள்ளது.

Exclusive | காவலர்கள் மிரட்டி பொய் சொல்லவைத்தனர்- பல் பிடுங்கிய விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர் குற்றச்சாட்டு

மேலும், அமுதாவின் தலைமையில் அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவின் இடைக்கால அறிக்கையில், இந்த விசாரணை இனி சி.பி.சி.ஐ.டி பிரிவால் நடத்தப்பட வேண்டுமென்று பரிந்துரை செய்துள்ளது.

First published: