தனது ரஃபேல் கைகடிகாரத்தின் ரசீது விவரங்களை தெரிவித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, திமுகவினரின் சொத்துப்பட்டியலையும் வெளியிட்டார். திமுக-வின் சொத்துக்கள் குறித்த ஆவணங்களை 15 நாட்களில் அண்ணாமலை வழங்காவிட்டால் அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியும், நீதிமன்றத்தை நாட உள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜியும் தெரிவித்துள்ளனர்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அணிந்துள்ள ரஃபேல் கைகடிகாரம் குறித்து அரசியல் ரீதியாக சர்ச்சைகள் வெடித்த நிலையில், அவர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். தான் அணிந்திருக்கும் ரஃபேல் கைகடிகாரம் பெல் அண்ட் ரோஸ் நிறுவனம் மூலம் உருவாக்கப்பட்டதாகவும், ரஃபேல் கைகடிகாரம் வரிசையில் 147-வது கடிகாரத்தை தான் வாங்கியதாகவும் கூறினார். ரஃபேல் கைகடிகாரம் வாங்கியதற்கான ரசீதையும், யாரிடம் இருந்து அதனை வாங்கினேன் என்ற விவரத்தையும் அண்ணாமலை வெளியிட்டார்.
மாதம் 8 லட்சம் ரூபாய் செலவு செய்து வரும் நிலையில், வீட்டு வாடகை, காருக்கு பெட்ரோல் என எல்லாவற்றுக்கும் தனது நண்பர்கள்தான் உதவி வருவதாகவும் அண்ணாமலை கூறினார். அதைத்தொடர்ந்து ஏற்கனவே அறிவித்ததைப் போன்று திமுக அமைச்சர்கள், நிர்வாகிகளின் சொத்து பட்டியலை அண்ணாமலை வெளியிட்டார். அப்போது பேசிய அவர், வரும் மக்களவை தேர்தலுக்கு முன்பாக தமிழ்நாட்டில் இதுவரை ஆட்சி செய்த அனைத்து கட்சிகளின் ஊழல் பட்டியல்களும் வெளியிடப்படும் என்று திட்டவட்டமாகக் கூறினார்.தொடர்ந்து பேசிய அண்ணாமலை, யாருடைய தயவாலும் தான் எம்.பி ஆக வேண்டிய அவசியம் இல்லை என்று கூறினார்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள பட்டியல் என்பது, அரசியல் ஸ்டண்ட் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். திமுகவின் சொத்து என அண்ணாமலை வெளியிட்டுள்ள பட்டியல் தொடர்பான ஆவணங்களை 15 நாட்களுக்குள் ஒப்படைக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எச்சரித்துள்ளார்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, ஒரு அரசின்மீது, அமைச்சர்கள்மீது சொல்லப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளில் என்ன முகாந்தரம் இருந்தது? ஏதாவது ஒரு ஆதாரம், ஒரு அடையாளம் என்று குறிப்பிட்டு சொல்லுங்கள். அதை ஏற்றுக்கொள்கிறேன். அந்த நபர் குடியிருக்கும் வீட்டின் வாடகை 3.75 லட்சம் ரூபாய். இந்த வாடகை யார் கொடுக்கிறார்கள்? காருக்கு யார் டீசல் அடிக்கிறார்கள்? சம்பளம் யார் கொடுக்கிறார்? 3.75 லட்சம் வாடகை கொடுக்கும் வீட்டுக்கு 3 உதவியாளர் இருந்தால் போதுமா? அந்த வீட்டை பராமரிக்கு எவ்வளவு பேர் வேலைக்கு தேவைப்படுவர்? அவர்களுக்கு யார் சம்பளம் கொடுக்கிறார்கள்? அப்படியென்றால் 4 ஆடு மேய்த்தால் 3.75 லட்சம் வாடகை கொடுத்து குடியிருக்க முடியும். அப்படித்தானே? அவர் சொல்லக்கூடிய கருத்துகள் அப்படித்தான் இருக்கின்றன. தூய்மையானவராக இருந்தால் ஏன் அடுத்தவர் சொத்தில் வாழ்கிறார்? ரபேல் வாட்ச் விவகாரத்தில் அண்ணாமலை தமக்கு அளிக்கப்பட்ட வெகுமதியை மறைப்பதற்காக ஆயிரம் பொய்களை சொல்கிறார் என அமைச்சர் செந்தில் பாலாஜி விமர்சித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Annamalai, BJP, DMK, Senthil Balaji