காஞ்சிபுரம் அடுத்த பொன்னேரிக்கரை பகுதியில் சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில், அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான உறுப்பு கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரியில், நான்கு துறைகளில் சுமார் 1,000 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். நிரந்தர பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் இதர பணியாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் இக்கல்லூரியில் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், இந்தக் கல்லூரியில், வங்கி கணக்குகளை நிர்வகித்து வந்த பிரபு என்பவர் செய்த முறைகேடு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பிரபு , இக்கல்லூரியில் கணக்காளராக பணியாற்றி வந்தார். கல்லூரி கணக்கு வழக்குகளை நிர்வகித்து வந்த இவர், மாணவ மாணவிகளிடம் டெபாசிட் பணம் பெறுவது வழக்கம். அவ்வாறு வசூலிக்கப்படும் பணம் வங்கியில் கல்லூரியின் நிரந்தர வைப்பு நிதி கணக்கில் செலுத்தப்படும். நான்கு வருட படிப்பை படித்து முடித்த பிறகு மாணவ மாணவிகளுக்கு அந்த பணம் மீண்டும் வழங்கப்படும்.
இந்நிலையில், கடந்த ஃபிப்ரவரி மாதமே, செலுத்த வேண்டிய மாணவர்களின் டெபாசிட் தொகை கடந்த மாதம் வரை செலுத்தப்படாமல் இருந்து வந்துள்ளது. இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்திடம் மாணவ, மாணவிகள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர். புகார் குறித்து கல்லூரி முதல்வர் கவிதா, வங்கி கிளைக்கு சென்று விசாரித்த பொழுது அதிர்ச்சி காத்திருந்தது.
இதையும் படிக்க : இன்ஸ்டாவில் மாணவிக்கு ஆபாச புகைப்படங்கள்... ஆசைக்கு இணங்க மிரட்டல்.. வசமாய் சிக்கிய வாலிபன்..!
வங்கி கணக்கில் வெறும் 401 ரூபாய் மட்டுமே இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். ஆனால் வங்கி கணக்கில் சுமார் ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் மாணவர்களின் டெபாசிட் பணம் இருப்பதாக பிரபு தெரிவித்துள்ளார். இதேபோல் பிற வங்கி கணக்குகளிலும் முறைகேடு நடந்திருக்கலாம் என சந்தேகப்பட்டு அவற்றையும் விசாரிக்க துவங்கி உள்ளனர்.
கல்லூரிக்கு சொந்தமாக உள்ள 9 வங்கி கணக்குகள் மற்றும் 7 நிரந்தர வைப்பு கணக்குகளை ஆய்வு மேற்கொண்ட பொழுது, அவற்றிலும் கோடிக்கணக்கான ரூபாய் முறைகேடு செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. நிரந்தர வைப்பு கணக்கிலிருந்து கிடைக்கும் வட்டிப் பணத்தில் தான் விடுதி மற்றும் கல்லூரி செலவுகளை மேற்கொள்வது வழக்கம். ஆனால் 7 நிரந்தர வைப்பு கணக்குகளிலும், முதிர்வு தேதிக்கு முன்னதாகவே முதல்வரின் போலி கையெழுத்து மற்றும் போலி லெட்டர் பேட் மூலம் பிரபு பணத்தை எடுத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுவரை பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்பட்ட விசாரணையில் 3 கோடியே 80 லட்சம் ரூபாய் பல்வேறு வகைகளில் பிரபுவால் முறைகேடு செய்யப்பட்டிருப்பது அம்பலமாகியுள்ளது. இதுகுறித்து கல்லூரி முதல்வர் கவிதா காஞ்சிபுரம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். புகார் அளித்த சில நாட்களில், பிரபு தலைமறைவானதாக கூறப்படுகிறது.
போலீசார் நடத்திய விசாரணையில் விடுதி வங்கி கணக்கை கவனித்து வந்த ரோஸி என்பவருக்கும் இந்த மோசடியில் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். ரோஸி பல்கலைக்கழகத்தில் ஒப்பந்த பணியாளராக பணியாற்றி வந்தார். அவர் கொரோனா தொற்றுக்குப் பிறகு பணியில் இருந்து விடுபட்டுள்ளார். ரோசியின் கணவர் ஞானசேகரன், காஞ்சிபுரத்தில் ஐ.எஃப். எஸ் நிதி நிறுவன மோசடி வழக்கில் சிக்கி கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ரோஸி மற்றும் பிரபு ஆகியோர் இணைந்து கல்லூரி வங்கி கணக்கில் இருந்து பணத்தை முறைகேடாக திருடி ஐ.எப்.எஸ் நிதிநிறுவனத்தில் முதலீடு செய்திருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர். கல்லூரி வங்கி கணக்கில் பணம் இல்லாததால், வைஃபை கட்டணம் கூட செலுத்த முடியாமல் கல்லூரி நிர்வாகம் தவித்து வருகிறது.
அதேபோல், 13 லட்சம் ரூபாய் வரை, மின்வாரியத்திற்கு செலுத்த வேண்டிய தொகை கூட செலுத்தப்படாமல் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், உடனடியாக அரசு மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Anna University, Bank fraud, Crime News, Fixed Deposit, Tamil News