தமிழ்நாட்டை அதிக முறை ஆட்சி செய்த கட்சியான அதிமுக தற்போது பிரதான எதிர்க்கட்சியாக உள்ளது. பல்வேறு பிரச்னைகளுக்குப் பிறகு கடந்த மார்ச் 28 ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி ஒருமனதாகத் தேர்வு செய்து பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்டார். அதிமுகவின் சட்டதிட்ட விதிகள் படி ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை பழைய உறுப்பினர்களின் அடையாள அட்டை புதுப்பிப்பதும் அந்த நேரத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப் படுத்துவதும் வழக்கமான நடைமுறை.
1972 ஆம் ஆண்டு மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆர்-ஆல் தொடங்கப்பட்ட அதிமுக, அவருடைய மறைவுக்குப் பிறகு ஜெயலலிதாவால் வழிநடத்தப்பட்டு வந்தது. 1987 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை அக்கட்சியின் பொதுச் செயலாளராகப் பதவி வகித்து வந்தார். தொடர்ந்து ஏழு முறை கட்சியின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்த அவர் கட்சியின் தொண்டர்களின் எண்ணிக்கையை 1.5 கோடியாக உயர்த்தினார்.
கடந்த 2014 அதிமுகவின் உட்கட்சி தேர்தலுக்குப் பிறகு கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை 1.5 கோடியாக உள்ளது. அப்போதைய முதலமைச்சரும் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா இதனைத் தெரிவித்தார்.
இந்நிலையில் உடல்நலக் குறைவால் 2016 ஆம் ஆண்டு ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுகவின் உட்கட்சி பிரச்சனை காரணமாக பல்வேறு பிளவுகள் ஏற்பட்டது. டிடிவி தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தனியே சென்று புதிய கட்சியைத் தொடங்கி நடத்தி வருகின்றனர். திருமதி சசிகலா மற்றும் அவரது ஆதரவாளர்கள் தனியாக உள்ள நிலையில் தற்போது ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தனி அணியாகச் செயல்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், அதிமுகவில் மீண்டும் பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு எடப்பாடி பழனிசாமியைத் தவிர வேறு யாரும் போட்டியிடாததால், அவர் கட்சியின் பொதுச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளார். எனவே அவர் தலைமையிலான அதிமுகவை மீண்டும் பலப்படுத்த வேண்டிய கட்டாயம் அவருக்கு உள்ளது. இதன் காரணமாக, தொண்டர்களின் உறுப்பினர் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
அதிமுகவில் 1.5 கோடி தொண்டர்கள் உள்ளதாகத் தெரிவித்தாலும் கூட, ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் மற்றும் சசிகலா ஆகிய தரப்பினர் ஆதரவாளர்கள் தனியாகச் செயல்பட்டு வருவதால் உறுப்பினர் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. மேலும் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மாநிலத்தின் பல்வேறு நிர்வாகிகள் கட்சியில் இருந்து வெளியேறி இதர கட்சிகளில் இணைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இதனால் தற்போது அதிமுக உடைய உறுப்பினர் எண்ணிக்கை சுமார் 80 லட்சம் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், உறுப்பினர் சேர்க்கையை அதிமுக தலைமை மீண்டும் தீவிரப் படுத்தி உள்ளது.
திராவிட கட்சிகளின் பிரதான கட்சிகளில் ஒன்று அதிமுக. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு தமிழ்நாட்டில் பல்வேறு புதிய கட்சிகள் உதயமானது. மேலும் அடுத்த தலைமுறை இளைஞர்களை தங்கள் கட்சிக்கு இருக்க வைக்க வேண்டிய கட்டாயத்திலும் அதிமுக தலைமை உள்ளது. இதை உணர்ந்த தேசிய கட்சியான பாஜக, தமிழ்நாட்டில் தொடர்ந்து உறுப்பினர் எண்ணிக்கையைத் தீவிரப் படுத்தி வரும் நிலையில், அதிமுகவின் மூன்றாவது அத்தியாயம் எனக் கூறப்படும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சியின் உறுப்பினர் சேர்க்கையை இரண்டு கோடி என இலக்கு வைத்து உறுப்பினர் சேர்க்கை தீவிரப் படுத்திய வருகிறது.
அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கான ஆண்டு. இதில் அதிமுக தமிழ்நாட்டில் மிக முக்கியமான கட்சி என மீண்டும் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதனால் உட்கட்சி பிரச்னைகளால் சோர்ந்துள்ள தொண்டர்களை உற்சாகப்படுத்தி கட்சியை அடுத்த தலைமுறை இளைஞர்களிடம் எடுத்துச் செல்லும் நோக்கில் அதிமுக செயல்படவுள்ளது. இம்முறை உறுப்பினர் சேர்க்கை, தகவல் தொழில்நுட்பத்தின் மூலமும் இளைஞர்களை தங்கள் பக்கம் இழுக்கும் நோக்கில் முயற்சித்து வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.