தமிழ்நாடு அரசியலில் 2017ல் இருந்து இது வரை பல அரசியல் மாற்றங்களுக்கு முக்கிய காரணமாக இருப்பவர் முன்னாள் முதமைச்சர் ஓ.பன்னீர் செல்லம் என்றால் மிகையில்லை. 2017 ஆம் ஆண்டு சசிகலா மற்றும் அவரது குடும்பத்தை எதிர்த்து தர்மயுத்தத்தை மேற்கொண்டார் ஓபிஎஸ்., அப்போது அதிமுக மட்டுமில்லாமல் தமிழக அரசியல் களமே பரபரப்பானது.
அதற்கு பின்னர் சசிகலாவின் சிறைவாசம், எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பதவி ஏற்றது, டிடிவி தினகரனை அதிமுகவிலிருந்து வெளியேற்றியது என்று தமிழக அரசியல் களம் அனலாய் கொதித்தது. அதன் பின்னர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஒன்றாக இணைந்தனர். அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகள் உருவாக்கப்பட்டு கடந்த 6 ஆண்டுகளாக அதிமுகவை வழி நடத்தி வந்தனர்.
இந்த நிலை தொடர, கடந்த ஆண்டு ஜூன் மாதம், அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை பூதாகரமாக வெடித்தது. அதிமுக அலுவலக கலவரம், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் அதிமுகவில் இருந்து நீக்கம், அதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குகள், அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வானதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு, என்று கடந்த 11 மாத அதிமுகவின் பிரச்னைகள் மீண்டும் உச்சகட்டத்தை எட்டியுள்ளன. இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான், நேற்று ஓ.பன்னீர்செல்வம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனை சந்தித்து பேசியிருக்கிறார்.
இதையும் படிக்க : “அமைச்சரவை மாற்றமா..?” குறித்து துரைமுருகன் சொன்ன பதில்..!
இந்த சந்திப்புக்கு பிறகு ஓ.பன்னீர்செல்வம் என்ன செய்யப் போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. யாரை எதிர்த்து தர்ம யுத்தம் செய்தாரோ அவர்களுடனே தற்போது கைகோர்த்து இருக்கிறார் ஓபிஎஸ். அதற்கு மிக முக்கிய காரணம் அரசியலையும் தாண்டி ஓ.பன்னீர்செல்வத்திற்கும் டிடிவி.தினகரனுக்கும் இருக்கக்கூடிய நட்பு.
அதன் அடிப்படையில், கடந்த 6 மாதமாகவே இவர்கள் இருவரின் சந்திப்பு எதிர்ப்பார்த்த ஒன்றாகத்தான் இருந்தது. ஏற்கனவே திருச்சியில் மாநாடு நடத்திய ஓ.பன்னீர்செல்வம் தரப்பு, அடுத்தபடியாக கொங்கு மண்டலத்தில் மாநாட்டை நடத்த இருக்கிறது. கோவை அல்லது சேலத்தில் மாநாடு நடத்த வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் தினகரனும் பங்கேற்க வாய்ப்பு உள்ளதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் மதுரையில் வரும் ஆகஸ்ட் மாதம் நடத்தக்கூடிய மாநாட்டிற்கு முன்பு, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் இணைந்து மதுரையில் மாநாடு நடத்த வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனிடையே வெகு விரைவிலேயே சசிகலாவை ஓ.பன்னீர்செல்வம் சந்திக்கவிருப்பதாகவும் அந்த சந்திப்பும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது.
மாநாடுகளை முடித்துவிட்டு மாவட்டம் வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொள்ளவும் ஓ.பன்னீர் செல்வம் திட்டமிட்டுள்ளார். ஒருபுறத்தில் நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் இருந்தாலும் தேர்தல் ஆணையத்தின் முறையீடுகள் இருந்தாலும், மக்களை சந்திப்பதே பிரதான முயற்சியாகவும், இறுதி முயற்சியாகவும் கையில் எடுத்திருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். அதற்கு தினகரன் மற்றும் சசிகலாவின் சந்திப்பு மேலும் கூடுதல் பலத்தை தரும் என்று நம்புகிறார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: O Pannerselvam, Tamil Nadu, Tamil News, TTV Dhinakaran, V K Sasikala