தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் ஆதரவோடு தான் விஷச் சாராய விற்பனை நடைபெறுவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம் குற்றச்சாட்டியுள்ளார்.
விழுப்புரத்தில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனைகள் ஈடுபட்டார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சிவி சண்முகம், ’கள்ளச்சாராயத்தை கூலிக்கு விற்பனை செய்வரைத் தான் கைது செய்துள்ளனர். கள்ளச்சாராயத்தை தயாரித்து, விற்பனை செய்பவர்களை இதுவரை கைது செய்யவில்லை. கள்ளச்சாராய விற்பனையில் திண்டிவனம் திமுக கவுன்சிலர் கணவர் மற்றும் புதுச்சேரியில் உள்ள திமுக பிரமுகரிடம் வேலை செய்பவர் இருவர் சம்பந்தப்பட்டுள்ளனர்.
மேலும் திண்டிவனத்தைச் சேர்ந்த சாராய வியாபாரி அமைச்சர் மஸ்தானுக்கு மிகவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. ஏற்கனவே இரண்டு முறை குண்டர் சட்டத்தில் கைதாகி உள்ளவர்களை அழைத்து அவரின் மனைவிக்கு கவுன்சிலர் பதவி கொடுத்தது யார் என கேள்வி எழுப்பியுள்ளார்.
விழுப்புரம் அடுத்த மேல் பாதி திரௌபதி அம்மன் கோயில் பிரச்சனை தொடர்பாக கடந்த ஒரு மாதமாக பொன்முடி அமைதியாக இருந்தார். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. விஷச் சாராய விவகாரத்தில் 22 பேர் மரணம் அடைந்த பிறகு திமுக மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்த நிலையில் அதனை திசை திருப்புவதற்காக திட்டமிட்டு கலவரத்தை உருவாக்கும் விதமாக பொன்முடி பேசியுள்ளார். இது கடுமையான கண்டனத்திற்கு உரியது. திமுக தலைமை இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். திட்டமிட்டு சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பொன்முடி செயல்பட்டு வருகிறார்.
திமுக அரசு ஒரு நாடக அரசு. முதல்வர் ஒரு நடிகர். 22 பேர் மரணம் அடைந்த பிறகும் அரசும் காவல்துறையும் இன்னும் விழித்துக் கொள்ளவில்லை. காவல்துறையினர் அரசுக்கு தவறான தகவல்களை கொடுத்து வருகிறார்கள். மீனவர்கள் கடந்த எட்டு நாட்களாக கடலுக்கு செல்லாமல் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளனர். திமுக அரசு ஒரு பித்தலாட்ட அரசு ஏமாற்று அரசு. பிரச்சனைகளுக்கு தீர்வு காணாமல் திசை திருப்பவே இந்த அரசு செயல்பட்டு வருகிறது.
இதையும் வாசிக்க: விஷச்சாராயம், கஞ்சா புழக்கத்தை முதலமைச்சர் இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் - திருமாவளவன் கோரிக்கை
22 பேர் மரணம் தொடர்பாக என்ன நடந்தது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என ஆளுநர் அறிக்கை கேட்டுள்ளார். ஆனால் அரசு இதுவரை பதில் சொல்லவில்லை. இந்த இரண்டு ஆண்டு கால திமுக ஆட்சியில் அரசின் அனுமதியோடு சாராயம் விற்பவர்கள் திமுக காரர்களும், திமுகவை சார்ந்த சாராய வியாபாரிகள் தான். அதனால்தான் சாராயம், கஞ்சா விற்பனைகள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறை மறுக்கிறது.
இதனை கண்டித்து அதிமுக சார்பில் வரும் திங்கட்கிழமை காலை பேரணியாக சென்று ஆளுநரை சந்தித்து குற்றச்சாட்டுகள் தொடர்பாக மனு அளிக்க உள்ளோம் என்று தெரிவித்தார்.
ஜல்லிக்கட்டு தொடர்பான தீர்ப்பு ஒரு நல்ல தீர்ப்பு. வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு. நம்முடைய பாரம்பரிய கலாச்சாரத்தை காக்கும் விதமாக இந்த தீர்ப்பு அமைந்துள்ளது. இது எல்லோருடைய ஒத்துழைப்பாலும் கிடைத்த மகிழ்ச்சியான நல்ல தீர்ப்பு. ஜல்லிக்கட்டு தீர்ப்பு எங்களால்தான் கிடைத்தது என ஸ்டாலின் கூறுகிறார்.
ஆனால் அதிமுக ஆட்சி காலத்தில் இதற்காக சட்டம் இயற்றப்பட்டது. இதற்கு குடியரசுத் தலைவர் கொடுத்தது மத்திய அரசு. இதில் திமுகவின் பங்கு எங்கு உள்ளது என கேள்வி எழுப்பினார் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலவரத்தை உருவாக்கிய திமுக என குற்றம்சாட்டினார்.
செய்தியாளர்: ஆ.குணாநிதி, விழுப்புரம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CV Shanmugam