முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ஆருத்ரா மோசடி வழக்கு... ஆர்.கே.சுரேஷுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பு

ஆருத்ரா மோசடி வழக்கு... ஆர்.கே.சுரேஷுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பு

ஆர்கே சுரேஷ்

ஆர்கே சுரேஷ்

நடிகர் ஆர்.கே.சுரேஷுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆருத்ரா மோசடி வழக்கில் ஆர்.கே.சுரேஷுக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது என்று பொருளாதாரக் குற்றப் பிரிவு ஐ.ஜி ஆசியம்மாள் தெரிவித்துள்ளார்.

ஒரு லட்ச ரூபாய் பணம் கட்டினால் மாதம் ஒன்றுக்கு 30,000 ரூபாய் வட்டி தருவதாக கூறி கவர்ச்சிகரமான விளம்பரங்களை செய்து பொதுமக்களிடம் பல கோடி மோசடி செய்ததாக ஆருத்ரா நிதி நிறுவனத்தின் மீது கடந்தாண்டு புகார் எழுந்தது.

இதைத் தொடர்ந்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தமிழ்நாடு முழுவதும் கடந்தாண்டு ஜூலை மாதம் அதிரடி சோதனை நடத்தினர். தொடர்ந்து நடந்த விசாரணையில் ஆருத்ரா நிதி நிறுவனம் 98,000 பேரிடம் இரண்டாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை தெரிவித்தது.

இந்த மோசடி விவகாரத்தில் பல முக்கிய புள்ளிகளிடம் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் பாஜக நிர்வாகியும் ஆருத்ரா நிறுவனத்தின் இயக்குநருமான ஹரிஷை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்திவருகிறது. விசாரணையில் ஹரிஷ் பாஜகவில் பொறுப்பு வாங்க முதலீட்டாளர்களிடம் மோசடி செய்த பணத்தை பயன்படுத்தி இருப்பதும், அந்த பணத்தை பாஜகவில் சிலருக்கு வழங்கி இருப்பதும் தெரியவந்துள்ளது.

பாஜக வழக்கறிஞர் பிரிவை சேர்ந்த அலெக்ஸ் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த பாஜக நிர்வாகி சுதாகர் ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. மேலும், பா.ஜ.க நிர்வாகியும், நடிகருமான ஆர்.கே.சுரேஷிடம் விசாரணை நடத்த பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் திட்டமிட்டனர். அதன்படி, ஆர்.கே.சுரேஷுக்கு காவல்துறை சம்மன் அனுப்பியது.

ஆருத்ரா நிதி நிறுவனத்திற்கும் தனக்கும் சம்பந்தமில்லை - பாஜக நிர்வாகி அலெக்ஸ்

ஆனால், விசாரணைக்கு ஆஜராகாத ஆர்.கே.சுரேஷ், போலீசாரின் சம்மனைத் தள்ளுபடி செய்யவேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதனை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. போலீசாரிடம் ஆஜராகாமல் ஆர்.கே.சுரேஷ் தலைமறைவாக உள்ள நிலையில் அவருக்கு எதிராக பொருளாதாரக் குற்றப்பிரிவு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர். அதன்மூலம், அவர் வெளிநாடு தப்பிச் செல்ல முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published: