செங்கல்பட்டு மாவட்டத்தில் எரிசாராயம் கலந்த மதுபானத்தை குடித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த நிலையில், மூன்று காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அருகே உள்ள பெருக்கரணை இருளர் பகுதியைச் சேர்ந்த சின்னதம்பி. அவரது மனைவி அஞ்சலி மற்றும் சின்னதம்பியின் மாமியார் வசந்தா ஆகிய 3 பேர், வழக்கம் போல் சாராயம் அருந்தியதாக கூறப்படுகிறது.
அதன்பிறகு சனிக்கிழமை மதியம் வரையில் அவர்கள் வீட்டை விட்டு வெளியே வராத காரணத்தால் அக்கம்பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்தபோது சின்னத்தம்பியும், வசந்தாவும் சடலமாக கிடந்தனர். அஞ்சலி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்ததையடுத்து அவரை மீட்ட காவல்துறையினர் மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதனிடையே பேரம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட இருளர் பகுதியில் வசிக்கும் வென்னியப்பனும் அவரது மனைவி சந்திராவும் சாராயம் குடித்ததில், ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர்.
இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அதே பகுதியைச் சேர்ந்த அமாவாசை என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து மது தயாரிப்பிற்கான ரசாயன பவுடரை பறிமுதல் செய்தனர். விசாரணையில் டாஸ்மாக்கில் மதுபானம் வாங்கி வந்து அதில் சரிபாதி எரி சாராயத்தை கலந்து விற்பனை செய்தது தெரியவந்தது.
கைதான அமாவாசையும் எரிசாராயம் கலந்த மதுபானத்தை அருந்தியதால் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்தநிலையில் மேல்மருவத்தூர் காவல் ஆய்வாளர் பிரேம் ஆனந்த், சித்தாமூர் உதவி ஆய்வாளர் மோகனசுந்தரம், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு உதவி ஆய்வாளர் ரமேஷ் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
முன்னதாக, விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே எக்கியார் குப்பத்தில் கள்ளச்சாராயம் அருந்தியதால் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 6 பேர் உயிரிழந்த நிலையில் , தற்போது செங்கல்பட்டு மாவட்டத்தில் எரிசாராயம் அருந்தியதால் 4 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொடிய விஷம் கொண்ட ரசாயனம்:
விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் சாராயம் குடித்து 10 பேர் உயிரிழந்த நிலையில், தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தப்படும் கொடிய விஷம் கொண்ட ரசாயனம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக வடக்கு மண்டல காவல்துறை தலைவர் கண்ணன் தெரிவித்தார்.
விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘மரக்காணம் சம்பவத்தின் முதற்கட்ட விசாரணையில் மதுபானத்தில் மெத்தனால் கலக்கப்பட்டதாக கூறினார்.
இதையும் வாசிக்க: கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
இதேபோல் செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் உயிரிழப்பு சம்பவத்தில் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக கூறினார். இந்த இரண்டு சம்பவங்களையும் விசாரிக்க ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறினார். டாஸ்மாக் கடையில் இருந்து வாங்கப்பட்ட மதுவை குடித்ததால் தான் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவல் உண்மையில்லை என்றும் கண்ணன் தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.