தமிழகத்தின் பல பகுதிகளிலும் இடி மின்னலுடன் நேற்று பரவலாக மழை பெய்தது. மழை தொடர்பான விபத்துகளில் சிக்கி பிளஸ் 1 மாணவி உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.
வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுவதால் அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் நேற்று இரவு, திருவண்ணாமலை, திருவள்ளூர், வேலூர், தருமபுரி, விழுப்புரம், மதுரைபெரம்பலூர், கடலூர், சிதம்பரம் ஆகிய மாவட்டங்களில் இரவு நேரத்தில் பரவலாக மழை பெய்தது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி மற்றும் அதனை சுற்றியுள்ள ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு, கே.ஜி.கண்டிகை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. காலை வேளையில் வெயில் வாட்டி வதைத்த நிலையில், மாலை நேரத்தில் கனமழை பெய்தது. இதில், தென்னை மரம் சாய்ந்து விழுந்ததில் முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையும் படிக்க : அடுத்த 48 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு - வானிலை அப்டேட்
மேலும் கீழ்பெண்ணாத்தூர் அடுத்த அண்டம்பள்ளம் கிராமத்தில் மணிலா பயிருக்கு நீர் பாய்ச்சிக் கொண்டிருந்த பிளஸ் 1 மாணவி வினோஷா, மின்னல் தாக்கியதில் உயிரிழந்தார். அரியலூர் மாவட்டத்தில் நள்ளிரவு இடியுடன் கூடிய கனமழை பெய்தது. பகலில் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் மாலையில் மழை துவங்கியது. ஜெயங்கொண்டம் ஆண்டிமடம், உடையார்பாளையம், செந்துறை உள்ளிட்ட பகுதிகளில் நள்ளிரவில் இடியுடன் கூடிய கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. அரூர்,பாப்பிரெட்டிப்பட்டி, தருமபுரி நகர் பகுதி, அன்னசாகரம், நெசவாளர் காலனி மற்றும் நல்லம்பள்ளி, அதியமான் கோட்டை அதன் சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக மழை பொழிந்தது. நெசவாளர் காலனியில் சாலையோரம் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த காய்கறிகள் முழுவதும், கழிவுநீருடன் கலந்து மழை நீரில் அடித்துச் செல்லப்பட்டன. இதனால், அந்த வழியாக சென்ற பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகினர்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் சுமார் ஒரு மணி நேரம் பரவலாக மழை பெய்தது. ஒலக்கூர், ஜக்காம்பேட்டை, சிங்கனூர், கீழ் எடையாளம், சலாவதி, எறையானூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெய்த மழையால் வெப்பம் தணிந்தது. திண்டிவனம் அடுத்த வரகப்பட்டு கிராமத்தில் வயல் வேலையை முடித்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த அஞ்சலை என்ற பெண் மின்னல் தாக்கி உயிரிழந்தார். செஞ்சி கோட்டை அருகே மின்னல் தாக்கியதில் காயமடைந்த 2 பெண்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். மேலும் மதுரை, பெரம்பலூர், கடலூர், சிதமபரம், ஆகிய பகுதிகளில் நேற்று கனமழை பெய்ததால் குளிர்ச்சியான சூழல் நிலவியது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Rain Forecast, Rain Update, Tamil Nadu, Weather News in Tamil