முகப்பு /செய்தி /தமிழ்நாடு / மணப்பாறை முறுக்கு, ஊட்டி வர்க்கி உள்ளிட்ட 11 பொருட்களுக்கு ஒரே நேரத்தில் புவிசார் குறியீடு

மணப்பாறை முறுக்கு, ஊட்டி வர்க்கி உள்ளிட்ட 11 பொருட்களுக்கு ஒரே நேரத்தில் புவிசார் குறியீடு

மணப்பாறை முறுக்கு மற்றும் ஊட்டி வர்க்கி

மணப்பாறை முறுக்கு மற்றும் ஊட்டி வர்க்கி

இந்தியாவிலேயே அதிக பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற்ற மாநிலம் என்ற பெருமையை தமிழ்நாடு பெற்றுள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

மணப்பாறை முறுக்கு, ஊட்டி வர்க்கி உள்ளிட்ட 11 பொருட்களுக்கு, ஒரே நேரத்தில் புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. 

ஒரு குறிப்பிட்ட இடத்தைச் சேர்ந்த, தனித்தன்மை வாய்ந்த பொருட்களுக்கு மத்திய அரசு சார்பில் வழங்கப்படும் அங்கீகாரமே புவிசார் குறியீடு. உணவுப் பொருட்கள், விவசாயப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் மற்றும் தொழில்துறை தயாரிப்புகளுக்கு இந்த புவிசார் குறியீடு வழங்கப்படுகிறது.

ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, கோவில்பட்டி கடலைமிட்டாய், பழனி பஞ்சாமிர்தம், காஞ்சிப் பட்டு, மதுரை மல்லிகை, தஞ்சாவூர் கலைத்தட்டு, திண்டுக்கல் பூட்டு என இதுவரை தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் 45 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாட்டிற்கு கூடுதல் சிறப்பாக மேலும் 11 பொருட்களுக்கு ஒரே நேரத்தில் இந்த சிறப்பு அங்கீகாரம் கிடைத்துள்ளது. அதன்படி, மணப்பாறை முறுக்கு, தூத்துக்குடி ஆத்தூர் வெற்றிலை, சோழவந்தான் வெற்றிலை, கம்பம் பன்னீர் திராட்சை, நெகமம் பருத்தி, மயிலாடி கல்சிற்பம் உள்ளிட்ட பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.

தங்களது நீண்டகால கோரிக்கையை ஏற்று புவிசார் குறியீடு வழங்கிய மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் மணப்பாறை முறுக்கு தொழிலில் ஈடுபடும் குடிசை தொழிலாளர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். இதேபோன்று, சேலம் ஜவ்வரிசி, மயிலாடுதுறை தைக்கால்புரம் பிரம்பு பொருட்கள், மார்த்தாண்டம் தேன், மானாமதுரை மண்பாண்டம், ஊட்டி வர்க்கி உள்ளிட்ட பொருட்களும் அங்கீகாரம் பெற்றுள்ளன.

புவிசார் குறியீடு பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்திற்கு முன்னேறியுள்ள நிலையில், மேலும் 15-க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு இந்த சிறப்பு அங்கீகாரம் விரைவில் கிடைக்கும் என்கிறார் அரசு வழக்கறிஞர் சஞ்சய் காந்தி.

வளம் மிகுந்த மாநிலமான தமிழ்நாட்டில் விளையும் வேளாண் பொருட்களும், பாரம்பரியமாக தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களும், கைவினைப் பொருட்களும் தனி சிறப்பு வாய்ந்தவை என்பது அனைவரும் அறிந்ததே. அதற்கு ஒரு முத்தாய்ப்பாக, மேலும் 11 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்திருப்பது அதனைச் சார்ந்த விவசாயிகளுக்கும், உற்பத்தியாளர்களுக்கும் வர்த்தக ரீதியாக பெரும் பயனளிக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

First published: