‘இந்தியாவின் ரன் மெஷின்’ விராட் கோலி பற்றி சுவாரஸ்ய தகவல்கள்!
இந்தியா பல சிறந்த கிரிக்கெட் வீரர்களை உலகிற்கு அளித்துள்ளது, அந்த வரிசையில் தோல்விகளைக் கண்டு துவளாத விராட் கோலியும் முக்கியமானவர். சச்சின் டெண்டுல்கரின் விடாமுயற்சியையும், ஜாம்பவான் கிரிக்கெட் வீரர்களின் பிட்னஸையும் கலவையாக கொண்ட விராட் கோலியின் கடந்து வந்த சுவாரஸ்யமான விஷயங்கள் இதோ…
பிறப்பு:
விராட் கோலி, இந்தியாவின் தலைநகரான டெல்லியில் 1988ம் ஆண்டு நவம்பர் மாதம் 5ம் தேதி கிரிமினில் வழக்கறிஞரான பிரேம் கோலி – சரோஜ் கோலி தம்பதிக்கு மகனாக பிறந்தார். இவருக்கு விகாஷ் என்ற அண்ணனும், பாவ்னா என்ற அக்காவும் உள்ளனர். உத்தம்நகரில் வளர்ந்த விராட் கோலி, விசால் பாரதி பொதுப்பள்ளியில் 8ம் வகுப்பு வரை படித்தார். 3 வயது முதலே கிரிக்கெட் பேட்டை தூக்கிக்கொண்டு, அவர் அப்பாவை பந்து போடச் சொல்லி விளையாடுவாராம். எனவே விராட் கோலியை 9 வயதிலேயே டெல்லியில் வெஸ்ட் கிரிக்கெட் அகாடமியில் அவரது தந்தை சேர்த்துவிட்டுள்ளார்.
இதனையடுத்து கிரிக்கெட் பயிற்சிக்கு உதவும் வகையில், ஒன்பதாவது படிக்கும்போது பசிம் விகாரில் உள்ள சேவியர் மடப்பள்ளியில் சேர்க்கப்பட்டார். சின்ன வயதில் இருந்தே விராட் கோலி கிரிக்கெட் பயிற்சி பெற உந்துதலாக இருந்த அவரது தந்தை 2006ம் ஆண்டு காலமானார். இதனால் அவரது குடும்பம் மிகவும் வறுமையான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டது. இருப்பினும் விராட் கோலி அவருடையை லட்சியத்தை நோக்கி முன்னேற குடும்பத்தினர் ஒத்துழைத்துள்ளனர்.
இளம் பருவம்:
9 வயதில் இருந்தே துடிப்புடன் கிரிக்கெட் பயிற்சி பெற்று வந்த விராட் கோலி, முதன் முறையாக 15 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் டெல்லி அணி சார்பில் களமிறங்கினார். அதனைத் தொடர்ந்து 2008ம் நடந்த 19 வயதிற்குட்பட்டோருக்கான உலகப்கோப்பை தொடரில் இந்திய அணியை தலைமையேற்று நடத்திய விராட் கோலி, சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தினார்.
இந்த வெற்றி அவரை இந்திய சீனியர் அணிக்கு விளையாட வைத்தது. அதே 2008ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கினார். 2009ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒருநாள் சர்வதேச போட்டித் தொடரில் விராட் கோலி, ரிசர்வ் பேட்ஸ்மேனாக களமிறங்கினார்.
2009 டிசம்பரில் இலங்கைக்கு எதிராக இந்தியாவில் நடந்த ஒருநாள் சர்வதேச போட்டித் தொடரில் இடம் பெற்றார். கொல்கத்தாவில் நடந்த நான்காவது ஒருநாள் போட்டியில் களமிறங்கிய விராட் கோலி, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். அந்த போட்டியில் 114 பந்துகளில் 107 ரன்கள் எடுத்து சாதனை படைத்தார். இந்தியா ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 3-1 என கைப்பற்றியது. ஆனால் இந்த தொடரில் சதம் அடித்த மற்றொரு வீரரான கவுதம் கம்பீருக்கும் ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. அதனை பெற்ற கவுதம் கம்பீர் கோலியின் ஆட்டத்தை பாராட்டி அவருக்கு ஆட்ட நாயகன் விருதை வழங்கி கெளரவித்தார்.
துணை கேப்டன் டூ கேப்டன்:
2010ம் ஆண்டு மே மாதம், இலங்கை மற்றும் ஜிம்பாப்வேக்கு எதிரான முத்தரப்பு தொடரில் விராட் கோலி இந்திய அணியின் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இந்த தொடரில் இரண்டு அரைச்சதங்களுடன், 168 ரன்களைக் குவித்தார். மேலும் இந்த தொடர் மூலமாக ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 1,000 ரன்களை கடந்த இந்திய வீரர் என்ற சாதனையை கோஹ்லி படைத்தார்.
ஜனவரி 2011ம் ஆண் டு தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தின் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் கோலி, இரண்டு அரைசதங்கள் உட்பட 193 ரன்களை குவித்தார். இந்த போட்டியில் இந்தியா தோல்வியை தழுவி இருந்தாலும், அதிக ரன்களைக் குவித்த இந்திய வீரர் என்ற பெருமை பெற்றார். இந்த தொடர் மூலமாக ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடி சிறந்த பேட்ஸ்மேன்களுக்கான ICC தரவரிசையில் பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்ததோடு, உலகக் கோப்பைக்கான இந்தியாவின் 15 பேர் கொண்ட அணியிலும் இடம் பிடித்தார்.
2011ம் ஆண்டு நடந்த உலகக்கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்காக களமிறங்கினார். அன்றிலிருந்து கிரிக்கெட்டில் தனது சதங்களையும், சாதனைகளையும் அடுக்கத் தொடங்கிய விராட் கோலி, இந்திய கிரிக்கெட் வாரியம் 2013ம் ஆண்டு வெளியிட்ட பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலில் முதலிடம் பிடித்தார்.
2014ம் ஆண்டின் இறுதியில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணிக்காக கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகியதை அடுத்து, அந்த பொறுப்பு விராட் கோலிக்கு வழங்கப்பட்டது. விராட் தலைமையில் இந்திய அணி வெளிநாடுகளில் பங்கேற்ற அனைத்து டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றிவாகை சூடியது. தொடர்ந்து 8 முறை அந்நிய தேசத்தில் இந்திய அணியை தலைநிமிர வைத்த பெருமை விராட் கோலியையேச் சேரும். இதன் மூலமாக இந்திய அணி டெஸ்ட் போட்டிக்கான தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தது.
2017ம் ஆண்டு இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலி அறிவிக்கப்பட்டார். தோனியைப் போலவே சிறப்பாக அணியை வழிநடத்தியதாக விராட் கோலியை கிரிக்கெட் ரசிகர்கள் புகழ்ந்தனர்.
விராட் கோலி படைத்த சாதனைகள்:
‘இந்தியாவின் ரன் மெஷின்’ விராட் கோலி சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 4 முறை 150 ரன்கள் எடுத்துள்ளார். விராட்கோலி சர்வதேச போட்டிகளில் 15 ஆயிரம் ரன்னை வேகமாக கடந்து புதிய சாதனை படைத்துள்ளார். இதன் மூலமாக சர்வதேச போட்டியில் 15 ஆயிரம் ரன்னை தொட்ட 7வது இந்தியர் என்ற பெருமையையும், சர்வதேச அளவில் 33வது வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
டி20 போட்டிகளில் 1000 ரன்களைக் குவித்தவர், ஒரே ஆண்டில் அதிக 50 ரன்கள் மற்றும் அதிக ரன்களை குவித்த கிரிக்கெட் வீரர் என பல சாதனைகளைச் செய்துள்ளார்.
97 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள கோலி பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். டெஸ்ட் கேப்டனாக கோலி அந்நிய மண்ணில் நடைபெற்ற 34 டெஸ்ட் போட்டிகளில் 47.22 சராசரியுடன் 2,739 ரன்கள் குவித்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக விராட் கோலி 5,703 ரன்களை குவித்துள்ளார்.
இந்திய கேப்டனாக இருந்த போது விராட் கோலி தனது கடைசி சதத்தை நவம்பர் 2019 இல் வங்கதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் 136 ரன்களுடன் நிறைவு செய்தார். ஏறாக்குறைய 3 வருட காத்திருப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தனது 71வது சதத்தை பதிவு செய்துள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதம் 8 ஆம் தேதி அன்று நடந்த சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில், ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 61 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 122 ரன்கள் குவித்து தனது 71 ஆவது சர்வதேச சதத்தை பதிவு செய்துள்ளார். இதன் மூலமாக டி20 போட்டிகளில் தனது முதலாவது சதத்தையும் விராட் கோலி நிறைவு செய்துள்ளார்.
விராட் பெற்ற விருதுகள்:
2012 ஆம் ஆண்டின் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் சிறப்பாக விளையாடியதற்காக சிறந்த பேட்ஸ்மேன் விருதை பெற்றார்.
சர்வதேச கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை படைத்ததற்காக விராட்டிற்கு 2013ம் ஆண்டு அர்ஜுனா விருது வழங்கப்பட்டது.
கிரிக்கெட் விளையாட்டின் பைபிள் என்று அழைக்கப்படும் விஸ்டன் புத்தகம் சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் விஸ்டன் விருது, 2017ம் ஆண்டு விராட் கோலிக்கு வழங்கப்பட்டுள்ளது.
2017ம் ஆண்டு விளையாட்டு பிரிவுக்கான பத்மஸ்ரீ விருது வழங்கி, விராட் கோலியை மத்திய அரசு கெளரவித்தது. அதே ஆண்டு சோபர்ஸ் விருது பெற்றார்.
ஐபிஎல் போட்டிகளில் கோலியின் பங்களிப்பு:
ஐபிஎல் தொடங்கப்பட்ட 2008ம் ஆண்டிலிருந்து ஆர்சிபி அணிக்காக ஆடிவரும் விராட் கோலி, ஐபிஎல்லில் 223 போட்டிகளில் 6624 ரன்களை குவித்துள்ளார். ஐபிஎல்லில் ஒரே அணிக்காக மட்டுமே ஆடிய ஒரே வீரர் என்ற சாதனைக்குரியவர் விராட் கோலி.
2016 ஐபிஎல்லில் 4 சதங்களுடன் 973 ரன்களை குவித்ததன் மூலம், ஒரு சீசனில் அதிக ரன்கள் மற்றும் அதிக சதங்கள் விளாசிய வீரர் என்ற சாதனையை தன்னகத்தே கொண்டுள்ளார். 2013ம் ஆண்டிலிருந்து 2021ம் ஆண்டு வரை ஆர்சிபி அணியின் கேப்டனாக இருந்து வழிநடத்திய விராட் கோலியால், அந்த அணிக்கு ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வென்று கொடுக்க முடியவில்லை என்பதுதான் பெரிய குறை. 2021 ஐபிஎல்லுடன் ஆர்சிபி அணியின் கேப்டன்சியிலிருந்து விலகி, அந்த அணியில் ஒரு வீரராக ஆடிவருகிறார் கோலி.
திருமண வாழ்க்கை:
2013ம் ஆண்டு விளம்பர படம் ஒன்றில் நடிக்கும் போது பாலிவுட் நடிகையான அனுஷ்கா சர்மாவிற்கும், விராட் கோலிக்கும் இடையே காதல் மலர்ந்தது. 2017ம் ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் இத்தாலியின் மிலன் நகரில் உள்ள தனியார் ரிசார்ட்டில் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் மும்பையில் உள்ள மருத்துவமனையில் இந்த தம்பதிக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. இந்த நட்சத்திர தம்பதி தனது மகளுக்கு வாமிகா என பெயர் சூட்டியுள்ளனர்.