தாத்தா, அப்பாவின் வழியில் சினிமாவில் களமிறங்கி சாதித்து கொண்டிருக்கும் விக்ரம் பிரபு!
தமிழ் சினிமாவில் நடிகர், நடிகைகள் வாரிசு அடிப்படையில் களமிறங்குவது ஒன்றும் புதிதல்ல. வாரிசு என்ற பெயரில் உள்ளே நுழைந்தாலும், பிற்காலங்களில் தன்னுடைய தாய், தந்தையரின் பெயர், புகழை மிஞ்சி தனக்கென தனித்துவமான இடத்தை உருவாக்கிக் கொண்டவர்கள் நிறைய பேர் உள்ளனர்.
உதாரணத்திற்கு நடிகர் விஜய், நடிகர் சூர்யா போன்றோரை குறிப்பிடலாம். அதே சமயம், வேறு சில நடிகர்கள் வாரிசு என்ற பெயரில் களத்திற்கு வந்த வேகத்தில் சினிமா துறையை விட்டு ஒதுங்கியிருப்பதையும் நாம் பார்த்திருக்கிறோம்.
வெறுமனே தனக்கிருக்கும் குடும்ப செல்வாக்கை கடந்து, தனித்துவமான நடிப்பை பதிவு செய்தால்தான் தமிழ் சினிமாவில் வெற்றிக் கொடி கட்ட முடியும் என்பது வரலாறு சொல்லி வரும் பாடமாகும். அந்த வகையில், தாத்தா, அப்பா வழியில் சினிமா துறைக்கு வந்தாலும் முதல் படத்திலேயே, தான் ஒரு அற்புதமான திறமைசாலி என்பதை நிரூபித்தவர் தான் விக்ரம் பிரபு.
கும்கியாக களமிறங்கிய விக்ரம் பிரபு
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன், நடிகர் பிரபுவின் மகன் என்ற அடையாளத்தோடு சினிமாவுக்குள் நுழைந்தார் விக்ரம் பிரபு. முன்னதாக, அமெரிக்காவில் எம்பிஏ படிப்பை முடித்த அவர், சென்னை வந்ததும் திரைத்துறையில் கவனம் செலுத்த தொடங்கினார்.
கடந்த 2012ஆம் ஆண்டில், இயக்குநர் பிரபு சாலமனின் இயக்கத்தில் வெளிவந்த கும்கி திரைப்படத்தை நாம் யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியாது. காட்டு யானையை அடக்குவதற்கு கும்கி யானை கிடைக்காத சூழலில், சாதாரண வளர்ப்பு யானையை அழைத்துக் கொண்டு கிராமத்திற்குள் அடியெடுத்து வைப்பார் விக்ரம் பிரபு.
ஒருப்பக்கம் வளர்ப்பு யானையை கொண்டு காட்டு யானையை விரட்டியடிக்க வேண்டிய நிர்பந்தம், இன்னொரு பக்கம் வந்த இடத்தில் காதல் வயப்பட்ட நாயகியை கரம் பிடிக்க வேண்டிய ஆசை என இருவேறு போராட்டங்களை நடத்திக் கொண்டிருப்பார். இறுதியாக எதில் வெற்றி அடைந்தார், எதில் தோல்வி அடைந்தார் என்பதுதான் மீதிக் கதை.
இந்த படத்தில் வெறுமனே ஹீரோ என்பதைத் தாண்டி, ஒரு யானை பாகனாக வாழ்ந்து காட்டியிருப்பார் விக்ரம் பிரபு. இதனால், அனைத்து தரப்பு ரசிகர்களின் அபிமானத்தை பெற்றார்.
யானைக்கும் அடி சருக்கும்
கும்கி வெற்றியைத் தொடர்ந்து இவன் வேற மாதிரி, அரிமா நம்பி என அடுத்தடுத்து ஓரிரு படங்களில் கமர்ஷியல் வெற்றியை விக்ரம் பிரபு பதிவு செய்தார். என்னதான், நடிகர் திலக பரம்பரையில் வந்திருந்தாலும், முதல் படத்திலேயே வெற்றியை பதிவு செய்திருந்தாலும் ஏதோ ஒரு இடத்தில் சிக்கலை எதிர்கொள்ள வேண்டியிருந்தது அவருக்கு.
கடந்த 2016ஆம் ஆண்டில் வாகா, வீர சிவாஜி போன்ற படங்களில் சிறப்பான நடிப்பை விக்ரம் பிரபு பதிவு செய்திருந்த போதிலும், மோசமான திரைக்கதை, வசனம் போன்ற பல்வேறு காரணங்களால் அந்தப் படங்கள் தோல்வியைத் தழுவின.
பெருமளவில் ரீச் ஆன டானாக்காரன்
ஒருசில சறுக்கல்களைத் தொடர்ந்து, அடுத்தடுத்து கமர்ஷியல் ரீதியாக பல படங்களில் வெற்றி பெற்றாலும், பெரிய மாஸ் வெற்றி என்பது இல்லாமல் பயணம் தொடர்ந்து வந்தது. இந்தநிலையில் தான், விக்ரம் பிரபு நடித்த டானாக்கரன் திரைப்படம் இந்த ஆண்டில் வெளிவந்தது.
காவலர் தேர்வில் தேர்வாகி, பயிற்சி பள்ளியில் பயிற்சி பெறுபவராக வந்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்திருந்தார் விக்ரம் பிரபு. குறிப்பாக, காவலர் பயிற்சி பள்ளிகளில் நடக்கும் கொடுமைகளை இந்தப் படம் விவரித்திருந்தது. இன்னும் சொல்லப் போனால், காவலர் பயிற்சி பள்ளியை, நடிப்பின் மூலம் நம் கண் முன்னால் விக்ரம் பிரபு நிறுத்தியிருந்தார்.
பொன்னியின் செல்வனில்…
இதுவரையிலும் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள விக்ரம் பிரபு, இயக்குநர் மணி ரத்னத்தின் இயக்கத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பார்திபேந்திர பல்லவனாக நடித்துள்ளார். படத்தின் முதன்மை கதாநாயகர்களாக ஜெயம் ரவி, கார்த்தி உள்ளிட்டோர் நடித்துள்ளனர் என்ற போதிலும், விக்ரம் பிரபு தனக்கான தனி முத்திரையை பதிவு செய்திருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குடும்ப வாழ்க்கை
தொழிலதிபர் ஆர்.மதிவாணனின் மகள் லெட்சுமி உஜ்ஜைனியை கடந்த 2007ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26ஆம் தேதியன்று விக்ரம் பிரபு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.
கடந்த 1986ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15ஆம் தேதி பிறந்த விக்ரம் பிரபுவுக்கு தற்போது 36 வயது ஆகிறது.