HOME » VIJAYA DASAMI

Vijaya Dasami

    நவராத்திரியின் 9 நாட்களுக்கு பிறகு வெற்றி திருநாளாக விஜயதசமி கொண்டாடப்படுவது ஏன்? தெரிந்து கொள்ளுங்கள்!

    எண்ணற்ற கலாச்சாரங்கள் மற்றும் மொழிகள் நிறைந்த நம் நாட்டில் வேறு வேறு மாநிலங்களில் பொங்கல், தீபாவளி, ஹோலி, ஓணம் என பல சிறப்பான பண்டிகைகள் கொண்டாடப்பட்டு வருகின்றன. ஆனால் இந்தியா முழுவதும் ஒரே சமயத்தில் கொண்டாடப்படும் மிகப்பெரிய இந்து பண்டிகையாக இருக்கிறது தசரா.

    நாடு முழுவதும் தசரா பண்டிகை கொண்டாடப்படும் காலகட்டம் ஒன்று தான் என்றாலும் கூட, வேறு வேறு மாநிலங்களில் வேறு வேறு பெயர்களில் அனுசரிக்கப்பட்டு வருகிறது இந்த பண்டிகை. இடத்துக்கு இடம் நவராத்திரி, தசரா, துர்கா பூஜை என வேறு பெயர்களில் கொண்டாடப்பட்டாலும் இந்த பண்டிகையின் அடிப்படை அம்பிகை வழிபாடு ஆகும்.

    புரட்டாசியில் வரும் பெரிய பண்டிகை…

    இந்தியாவில் மிக பிரம்மாண்டமாகக் கொண்டாடப்படும் இந்து பண்டிகையில் மிக முக்கிய பண்டிகை நவராத்திரி. ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையில் தொடர்ந்து பல நாட்கள் கோலாகலமாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது இந்த நவராத்திரி திருவிழா. ஒவ்வொரு வருடமும் மொத்தம் 4 நவராத்திரிகள் வந்தாலும் புரட்டாசியில் வரும் பாத்ரபத அல்லது சாரதா நவராத்திரியே வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

    ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் கொண்டாடப்படும் 9 நாட்கள் விரதத்துடனான பண்டிகை இங்கே நாம் அனுசரிக்கும் நவராத்திரி ஆகும். ஒன்பது நாட்களும், நவராத்திரி விழாவாகக் கொண்டாடப்படுகிறது. நவம் என்பது 9-ஐ குறிக்கும். அந்த வகையில் அன்னை சக்தி தேவியை 9 நாட்களும் வெவ்வேறு ரூபங்களில் விரதமிருந்து மக்கள் வழிபடுகின்றனர். மகிஷாசுரன் என்னும் அரக்கனை அன்னை சக்தி தேவி 9 நாட்கள் போரிட்டு வெற்றி வாகை சூடியதாக ஐதீகம். 9 இரவுகள் மற்றும் 10 நாட்கள் என்று தொடர்ச்சியாக கொண்டாடப்படும் நவராத்திரியில், துர்கா தேவியின் 9 அவதாரங்களை பக்தர்கள் வழிபடுகிறார்கள்.

    இந்த நாட்களில் மகேஸ்வரி, கௌமாரி, வராகி, மகாலெட்சுமி, வைஷ்ணவி, இந்திராணி, சரஸ்வதி, நரசிம்ஹி, சாமுண்டி என சக்தியின் 9 வடிவங்களை பக்தர்கள் வழிபட்டு வணங்கி மகிழ்கிறார்கள். மகிஷாசூரனை அழித்து மகிஷாசூரமர்த்தினி அவதாரத்தில் வெற்றிவாகை சூடிய அம்பிகையை கொண்டாடுவதற்காகவே புரட்டாசி மாதத்தில் 9 நாட்கள் நவராத்திரி பண்டிகை கொண்டாடப்படுகிறது. மேலும் நவராத்திரி பண்டிகை கொண்டாடப்படுவதற்கான முக்கிய காரணம் நாம் அனைவரும் ஒன்றே, அனைத்தும் இறைசக்தியின் வடிவமே என்பதை இந்த உலகிற்கு உணர்த்துவது தான்.

    துர்க்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய மூன்று இறை சக்திகளும் ஒன்று சேர்ந்து மகிஷாசுர மர்த்தினியாக அவதாரம் எடுத்து, அரக்கன் மகிஷாசூரனை அழிப்பதே நவராத்திரி வரலாறு என்கிறார்கள். நவராத்திரியின் முதல் 3 நாட்கள் துர்க்கையாக, அடுத்த 3 நாட்கள் மகாலட்சுமியாகவும், இறுதி 3 நாட்கள் சரஸ்வதியாக நம்மை காத்து நிற்கிறாள் தேவி. முதல் நாளில் அன்னை மகேஸ்வரியாகவும், 2-ம் நாளில் கௌமாரி ரூபத்திலும், 3-ம் நாளில் வராகியாக, 4-ஆம் நாளில் மகாலட்சுமியாக, 5-ஆம் நாளில் வைஷ்ணவியாக, 6-ஆம் நாளில் இந்திராணியாக, 7-ஆம் நாளில் சரஸ்வதியாக, 8-ஆம் நாளில் நரசிம்ஹியாக, 9-ஆம் நாளில் சாமுண்டியாக காட்சி தருகிறாள் அம்பிகை என்று கூறுகிறார்கள்.

    பிரதமையில் துவங்கி நவமி வரை 9 நாட்கள் விரதமிருந்து வழிபடும் இந்த விழா தசமி திதியில் ‘விஜயதசமி’ என்ற பெயருடன் 9 இரவுகள் 10-வது பகலில் நிறைவடைகிறது. தசமி திதியில் தீமை அழிக்கப்பட்டு நன்மை வெற்றியடைந்த நாளாக விஜயதசமி கொண்டாடப்படுகிறது.

    9 நாட்களைத் தொடர்ந்து வரும் விஜயதசமியின் முக்கியத்துவம்

    அம்பிகை துர்க்கையாக வடிவம் எடுத்து மகிஷாசுரனை வதம் செய்து வெற்றி வாகை சூடியநாளே விஜயதசமி ஆகும். கடுமையான தவமிருந்து பிரம்மனிடமிருந்து சாகா வரம் பெற்றிருந்த மகிஷாசுரனை வரத்தின் படி எந்த ஒரு தேவரோ, மனிதரோ, கடவுளோ, அரக்கனோ அவனை கொல்ல முடியாது. கருவில் உருவாகாத பெண்ணை தவிர யாராலும் தனக்கு இறப்பு வர கூடாது என்று வரம் பெற்றான். எனவே இறுமாப்புடன் திரிந்து அகில உலகையும் ஆட்டி படைத்த இவனின் அட்டூழியம் எல்லை மீறவே தேவர்கள் மும்மூர்த்திகளிடம் முறையிட்டனர். சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மூவரும் தங்களது சக்தியை ஒன்றாக்கி ஒரு பெண்ணை படைத்தனர். பின் ஒரு சந்தர்ப்பத்தில் அம்பிகையை எதிர்த்து போரிட்டான் மகிஷாசுரன். பத்தாம் நாளில் மகிஷனை அடக்கி, காலில் போட்டு மிதித்தாள். அம்பிகையின் திருவடி தரிசனம் பெற்றுள்ளதை உணர்ந்த அவன் அவளுக்கு கட்டுப்பட்டு அப்படியே காலடியிலேயே கிடந்து விட்டான்.

    நவராத்திரி என்பது 9 இரவுகள் கொண்டாடப்பட்டாலும் 10-ஆம் நாள் பகல் மகிஷாசுரனை தேவியானவள் 9 நாட்கள் போரிட்டு வெற்றி வாகை சூடியநாள் “விஜயதசமி”-யாக கொண்டாடப்படுகிறது. விஜய் – என்றால் வெற்றி, தசம் என்றால் – பத்து. இதனையே விஜய தசமி என நாம் கொண்டாடுகிறோம். எருமை தலை மற்றும் மனித உடல் கொண்ட மகிஷாசுரனை தேவி துர்க்கை போரில் வீழ்த்தி வெற்றி பெற்ற நாள் தான் விஜயதசமியாக நாடும் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. நவராத்திரியின் 9 நாட்களும் விரதமிருந்து வழிபடும் பக்தர்கள், 10-ஆம் நாள் அன்னையின் வெற்றியை கொண்டாடி விரதத்தை முடித்து கொள்வதை வழக்கமாக கொண்டிருகிறார்கள். இந்த புனித நாளை பக்தர்கள் மிகவும் உற்சாகத்துடன், மகிழ்ச்சியுடன் கொண்டாடுவார்கள்.

    வெற்றி..

    விஜயதசமி என்பது வெற்றி தரும் நாளாக பார்க்கப்படுவதால் சிறு குழந்தைகளுக்கு முதன் முதலாக சோறு ஊட்டுவது, விஜயதசமி அன்று கல்வி கற்க துவக்கி வைப்பது உள்ளிட்ட பழக்கங்கள் தொன்றுதொட்டு இருந்து வருகிறது. மேலும் விஜயதசமி அன்று தொடங்கும் அனைத்து நல்ல காரியங்களும் வெற்றி பெறும் என்பது ஐதீகமாக இருக்கிறது. மொத்தத்தில் தீமைகள் அழிந்து நன்மைகள் வெற்றி பெறும் நாளாக விஜயதசமி கொண்டாடப்படுகிறது.