Vijay Antony (விஜய் ஆண்டனி)

  சவுண்ட் இன்ஜினியர், இசையமைப்பாளர், நடிகர் என பன்முகம் கொண்ட விஜய் ஆண்டனி!

  திரைத்துறையில் மற்ற இசையமைப்பாளர்களின் எந்த சாயமும் இல்லாமல் தனித்துவமான இசையை வழங்குவதில் கில்லாடியான விஜய் ஆண்டனி, நடிப்பிலும் தனித்துவமாகவே இருந்து வருகிறார்.

  “மாக்கயலா, மாக்கயலா.. நாக்கு முக்க நாக்கு முக்க“ என புரியாத வார்த்தைகளில் பாடல்களை இசையமைத்தாலும் மக்களிடம் நல்ல ரீச் அடைந்தார் விஜய் ஆண்டனி. குத்து பாடல்கள் மட்டுமில்லாமல் மெலோடிஸ், வாழ்க்கைக்கானப் பாடல்கள் என எதையெடுத்தாலும் ஹிட் கொடுக்கும் விஜய் ஆண்டனியின் இசைப்பயணத்தையும், சுவாரஸ்சியமான காதல் வாழ்க்கைக் குறித்து இங்கே தெரிந்துக்கொள்வோம்..

  விஜய் ஆண்டனியின் குடும்ப வாழ்க்கை:

  கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பிறந்த விஜய் ஆண்டனி பிரபல நாவல் ஆசிரியர், கர்நாடக இசை ஆர்வலர் என அறியப்படும் மாயவரம் சாமுவேல் வேதநாயகம் பிள்ளையின் குடும்பப் பின்புலத்தைச் சேர்ந்தவர். இவர் பிறந்தது கன்னியாகுமரியாக இருந்தாலும் வளர்ந்தது எல்லாம் திருச்சி. விஜய் ஆண்டனி 7 வயதாக இருக்கும் போது எதிர்பாராத விதமாக இவரது தந்தை இறந்துவிட்டாார். இதனால் மொத்தக் குடும்பமே நிர்கதியாக நின்ற நிலையில், தந்தையின் அரசு வேலை விஜய் ஆண்டனியின் தாய்க்கு கிடைக்க அனைவரும் திருநெல்வேலிக்கு சென்றனர். பள்ளிப்படிப்பை திருநெல்வேலியின் மேற்கொண்ட போது இசை ஆர்வத்தில் புதிய மெட்டுக்கள் மற்றும் வரிகளைப்போட்டு பாடும் திறமையுடன் இருந்தார்.

  கல்லூரி வாழ்க்கை மற்றும் இசைப்பயணம்:

  பள்ளிப்படிப்பை முடித்த பின்னதாக திருச்சி மற்றும் சென்னை லயோலாக கல்லூரியில் கல்லூரிப்படிப்பை முடித்தார். லயோலாவில் படிக்கும் போதே நண்பர் மூலம் சவுண்ட் இன்ஜினியராக பணியில் சேர்ந்தார். இந்த வேலையில் கிடைக்கும் குறைவான சம்பளத்தைக்கொண்டு தனக்கு தேவையான இசைக்கருவிகளை வாங்கி வீட்டிலேயே மினி ஸ்டூடியோவை அமைத்து இசையின் நுட்பங்களைக் கற்றுக்கொள்ள ஆரம்பித்தார்..

  இசையின் மீது அளப்பெரிய காதல் கொண்டிருந்த விஜய் ஆண்டனி, கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியாக சுக்ரன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். ஆனால் ஜீவா மற்றும் காதல் சந்தியா நடிந்த டிஸ்யூம் படத்தில் நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்.. என்ற பாடல் தான் திரைத்திறையில் இவரைப் பிரபலமாக்கியது. தொடர்ந்து காதலில் விழுந்தேன், உத்தமபுத்திரன், எமன், பிச்சைக்காரன் போன்ற வெற்றிப்படங்களில் இசையமைத்து உச்சத்திற்கு சென்றார் விஜய் ஆண்டனி.. இசைத்துறையில் கொடிக்கட்ட பறந்த இவர் நடிப்பதிலும் ஆர்வம் காட்டினார்.

  கடந்த 2012 ஆம் ஆண்டு வித்தியாசமானக் கதைக்களத்துடன் வெளியான நான் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். பின்னர் இயக்குனர் சசியின் பிச்சைக்காரன் படம் புதிய அவதாரத்தை அவருக்கு கொடுத்தது. தன்னுடைய உடல் பாவனைகளுக்கு ஏற்ற கதாபாத்திரத்தைத் தேர்வு செய்த இவர் சலீம். இந்தியா பாகிஸ்தான், சைத்தான், எமன், அண்ணாதுரை, காளி, திமிரு பிடிச்சவன், கொலைக்காரன் போன்ற படங்களில் நடித்தார்.. இந்த படங்களின் மூலம் தனக்கென ஒரு இடத்தை தமிழ் சினிமாவில் தக்க வைத்தார் விஜய் ஆண்டனி.

  விஜய் ஆண்டனியின் காதல் வாழ்க்கை:

  இசை மற்றும் நடிப்பைப்போன்று இவரின் திருமண வாழ்க்கையும் மிகவும் சுவாரஸ்சியமானது. சுக்ரன் திரைப்படத்திற்கு பிறகு பல பாடல்களை ஆண்டனி இசையமைத்திருந்தாலும், நெஞ்சாஞ்கூட்டில் நீயே நிற்கிறாய் பாடல் மற்றும் சப்போஸ் உன்ன காதலிச்சு, சப்போஸ் நானும் எனை மறந்து பாடலைக்கேட்டதும், விஜய் ஆண்டனியின் மனைவி பாத்திமா திருமணத்திற்கு முன்னதாக இரவு 12 மணிக்கு விஜய் ஆண்டனி வீட்டிற்கு வந்து உங்களைக் காதலிப்பதாக தெரிவித்துள்ளார். அப்ப பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருப்பதால் அம்மாகிட்ட ரொம்ப கெஞ்சி பாத்திமாவைத் திருமணம் செய்துக்கொண்டார் விஜய் ஆண்டனி.

  இவ்வாறு காதலித்து திருமணம் செய்துக்கொண்ட இவர், தன்னுடைய மனைவியை மிகவும் அன்போடு பார்த்துக்கொள்வார். செல்லமாக பட்டு என்று தான் அழைப்பார். மேலும் இவர் எந்த படத்தைத் தேர்வு செய்ய வேண்டும் என்ற அறிவுரைகளையும் ஆண்டனின் மனைவி தான் வழங்குவார்.. அம்மாவிற்கு பிறகு என்னுடைய வாழ்க்கையை வழிநடத்தி செல்பவர் தன்னுடைய மனைவி தான் என பல போட்டிகளில் பெருமையுடன் பல இடங்களில் கூறி இருக்கிறார் விஜய் ஆண்டனி.

  இசை, நடிப்பு என எந்தத்துறையை தேர்வு செய்தாலும், அதில் உள்ள தொழில்நுட்பங்களை முழுமையாக அறிந்துக்கொண்ட பின்னர் தான் களத்தில் இறங்குவார் விஜய் ஆண்டனி. கொஞ்சம் கொஞ்சமாக தன்னை செதுக்கிக்கொண்டதோடு சினிமா துறையில் யாருடைய பின்புலம் இல்லாமல் கொடிகட்டு பறக்கும் திரையுலக பிரபலங்களில் ஒருவராக வலம் வருகிறார் விஜய் ஆண்டனி..