Union
Budget 2023

Highlights

HOME » VANATHI SRINIVASAN

Vanathi Srinivasan

  வழக்கறிஞர் டூ தமிழக சட்டமன்ற உறுப்பினர்….அரசியலில் அசுர வளர்ச்சி கண்ட வானதி சீனிவாசன்!

   

  தமிழக அரசியலில் பல ஆண்டுகளாக திராவிட கட்சிகளின் ஆதிக்கமே காணப்படும் நிலையில் காங்கிரஸ், பாரதிய ஜனதா உள்ளிட்ட தேசிய கட்சிகள் இவற்றின் துணையோடு தான் தமிழகத்தில் காலூன்றி வருகின்றன.  இந்நிலையில் தெற்கில் குறிப்பாக தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி மெதுவாக வேரூன்றி வருகிறது.  

   

  தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி பெரிய அளவில் பிரபலமாகாமல் இருந்த நேரத்தில், தமிழிசை சௌந்தரராஜன் கட்சியின் மாநில தலைவராக நியமிக்கப்பட்டார். அது முதல் தமிழகத்தில் பாரதிய ஜனதா முன் எப்போதும் இல்லாத அளவு பிரபலமானது. இதற்கு மற்றொரு முக்கிய காரணமாக இருந்தவர் தற்போதைய கோயம்புத்தூர் தெற்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் திருமதி வானதி சீனிவாசன்.

   

  தமிழகத்தில் பாரதிய ஜனதாவை வளர்த்ததில் இவருக்கு முக்கிய பங்கு உண்டு. டிவி விவாதங்களில் பங்கேற்று கட்சிக்கு ஆதரவாக குரல் கொடுத்து பேசுவதில் துவங்கி சாலையில் இறங்கி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டது வரை தனெக்கென தனி அரசியல் பாதையில் பயணித்து மக்கள் மத்தியில் கட்சிக்கும் தனக்கும் செல்வாக்கு சேர்த்தவர் வானதி சீனிவாசன். மேலும் தற்போது பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் பிரிவின் தேசிய தலைவராகவும் பணியாற்றி வருகிறார். இவரது ஆரம்ப கால வாழ்க்கை, கல்வி, தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் அரசியல் பயணம் பற்றி பார்க்கலாம்.

   

  பிறப்பு:

   

  கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் அருகே உள்ள உளியம்பாளையம் என்ற கிராமத்தில் கடந்த 1970-ல் ஜூன்  மாதம் 6-ஆம் தேதி பிறந்தவர் வானதி. பாரம்பரியமாக விவசாயம் செய்யும் குடும்பத்தில் கந்தசாமி மற்றும் பூவத்தாள் தம்பதிக்கு மகளாக பிறந்தார் வானதி. இவருக்கு சிவகுமார் என்ற இளைய சகோதரர் இருக்கிறார்.  ABVP-யின் மாநில செயலாளர் மற்றும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞராக இருந்த சீனிவாசனை திருமணம் செய்து கொண்டார் அவர். இந்த தம்பதியருக்கு ஆதர்ஷ் , கைலாஷ் என்கிற 2 மகன்கள் உள்ளனர்.

   

  படிப்பு:

   

  தொண்டாமுத்தூர் மேல்நிலைப் பள்ளியில் தனது பள்ளி படிப்பை முடித்தார். சிறு வயது முதலே படிப்பில் மட்டுமல்ல பேச்சுப்போட்டி , நாடகம் , கட்டுரைப்போட்டி என பலவற்றில் திறமையாக செயல்பட்டு கெட்டிக்கார மாணவியாக திகழ்ந்தார். 10-ஆம் வகுப்பு பொது தேர்வில் பள்ளியின் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றார். தவிர பள்ளியின் வாலிபால் மற்றும் கோ-கோ டீம்களுக்கு கேப்டனாகவும் செயல்பட்டுள்ளார். பள்ளி படிப்பிற்கு பிறகு கோவையிலே இருக்கும் பிரபல கல்லூரியான PSG கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வேதியியல் படிப்பில் இளங்கலை பட்டம் பெற்றார். பின் 1993-ல் சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் பட்டம் பெற்றார்.  முதுகலை பட்டத்தை சென்னை பல்கலைகழகத்தில் சர்வதேச அரசியலமைப்பு என்னும் தலைப்பில் பெற்றார்.

   

  வழக்கறிஞராக..

   

  வானதி வழக்கறிஞராக தனது பணி வாழ்க்கையை 1993-ல் துவக்கினார். முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரான மறைந்த  பி.எஸ்.ஞானதேசிகனிடம் ஜூனியராக சேர்ந்தார்.  சிறிது காலம் உச்ச நீதிமன்ற பயிற்சிக்கு பின், சென்னை உயர் நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக வழக்கறிஞராக பணியாற்றிய அனுபவத்தை கொண்டுள்ளார். சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி இக்பால், கடந்த 2012-ஆம் ஆண்டு சிறந்த பெண் வழக்கறிஞருக்கான விருதை வானதிக்கு வழங்கி கெளரவித்து உள்ளார்.

   

  அரசியல் பயணம்:

   

  வானதி படிப்பில் மட்டுமல்ல அரசியலிலும் பேரார்வம் கொண்டிருந்தார். இவர் 1993 முதல் பாரதிய ஜனதாவில் உறுப்பினராக இருந்து வருகிறார் மற்றும் 1999 முதல் கட்சியில் பல பதவிகளை வகித்து தற்போது கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். 1988-ல் RSS மாணவர் அமைப்பான அகில பாரதீய வித்யார்தி பரிஷத்தின் (ABVP) செயல் உறுப்பினராகி தனது அரசியல் வாழ்வை துவக்கியவர் வானதி சீனிவாசன். PSG கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ABVP பிரிவு செயலாளர், பின் ABVP-ன் கோவை மாநகர இணை செயலாளர் பதவியில் இருந்த இவர் ஒரு கட்டத்தில் ABVP-ன் மாநில இணை செயலாளராக நியமிக்கப்பட்டார். திறம்பட பணியாற்றியதை தொடர்ந்து ஒரே ஆண்டில் ABVP-ன் தேசிய செயல் உறுப்பினரானார்.

   

  இவரது நேரடி அரசியல் பயணம் பாஜக-வில் 1993-ல் துவங்கியது. பாஜக சார்பில் இவர் ஏராளமான போராட்டங்களில் ஈடுபட்டிருந்தாலும் தமிழகத்தில் மது கடைகளை முற்றிலும் ஒழிக்க வேண்டுமென வலியுறுத்தி இவர் நடத்திய போராட்டங்கள் குறிப்பிடத்தக்கவை. கடந்த 2013-ல் பாஜக மாநில செயலாளர், 2014-ஆம் ஆண்டில் தமிழக பாஜக மாநில பொது செயலாளர் என்று இவரது அரசியல் வாழ்க்கையில் தொடர்ந்து ஏற்றத்தை கண்டார். 2020-ஆம் ஆண்டு வரை வரை தமிழக பாஜக மாநில பொது செயலாளராக இருந்த இவர், 2021 முதல் பாஜக மகளிரணியின் தேசிய தலைவராக பதவி வகித்து வருகிறார்.

   

  MLA-வான வானதி..

   

  தமிழக அரசியலில் மக்கள் மத்தியில் இவர் பிரபலமடைய முக்கிய காரணம் பாஜக சார்பில் சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிட்டது தான்.  தமிழகத்தில் 2011 சட்டமன்ற தேர்தலில் மயிலாப்பூர் தொகுதியிலும், 2016 சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்கு தொகுதியிலும் பாஜக சார்பில் போட்டியிட்டுத் தோற்றாலும்  2021-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், கோயம்புத்தூர் தெற்கு தொகுதியில் இருந்து பாஜக வேட்பாளராக போட்டியிட்டு மக்கள் நீதி மய்யம் தலைவரான நடிகர் கமல்ஹாசனை தோற்கடித்து, தமிழக பாஜக MLA ஆனார். இதனிடையே பாஜக மத்திய தேர்தல் குழு உறுப்பினராக வானதி சீனிவாசன் சமீபத்தில் நியமனம் செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.