HOME » VAIKO

Vaiko

  ஊராட்சி தலைவர் டூ மதிமுக பொதுச்செயலாளர் வரை… வைகோ அரசியலில் வளர்ந்த கதை!

  ஊராட்சி அமைப்புகளுக்கு தலைவராக தேர்வான பல அரசியல் பிரமுகர்களும் பின்னாளில் மிகப்பெரிய பதவிகளில் அமர்ந்துள்ளனர். அப்படி ஊராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு, சிறந்த நாடாளுமன்ற உறுப்பினராகவும், மதிமுக பொதுச்செயலாளராகவும் வலம் வருகிறார் வைகோ.

  வெள்ளை வேட்டி, சட்டை, தோளில் கறுப்புத்துண்டு, நிமிர்ந்த தொனியில் தெளிவான தமிழ் பேச்சு…. இவையே வைகோவின் அடையாளங்கள். கலிங்கம்பட்டியில் பிறந்து திமுகவில் வளர்ந்து தற்போது மதிமுகவின் தனிப்பெரும் அடையாளமாக விளங்கும் வைகோ அரசியலில் கடந்து வந்த போராட்டங்கள்… பிரச்சனைகள்… சர்ச்சைகள்… பற்றி விரிவாக அறிந்துகொள்ளலாம்.

  பிறப்பும், கல்வியும்:

  வைகோ, திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள கலிங்கப்பட்டி என்ற கிராமத்தில் வையாபுரி-மாரியம்மாள் தம்பதியருக்கு 1944 ஆம் ஆண்டு மே 22ம் தேதி மகனாக பிறந்தார். வை.கோபால்சாமி என்ற பெயர் சுருக்கமே வைகோ என அழைக்கப்படுகிறார். இவருக்கு மூன்று சகோதரிகள், ரவிச்சந்திரன் என்ற இளைய சகோதரரும் உள்ளனர்.

  1960 ஆம் ஆண்டு கலிங்கப்பட்டியில் உள்ள அரசு பள்ளி உயர் நிலைப்படிப்பையும், 1961ம் ஆண்டு பியூசி படிப்பையும் முடித்தார். 1964 ஆம் ஆண்டு பாளையங்கோட்டையிலுள்ள புனித சேவியர் கல்லூரியில் பி.ஏ பட்டப்படிப்பை முடித்தார். அதன் பிறகு, 1966 ஆம் ஆண்டு சென்னை மாநிலக் கல்லூரியில் தனது எம்.ஏ பட்டப்படிப்பையும், 1969 ஆம் ஆண்டு சென்னை சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பில் பட்டம் பெற்றார்.

  ரேணுகாதேவி என்பவரை, 1971ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு துரை வையாபுரி என்ற மகனும், ராஜலட்சுமி, கண்ணகி என்ற இரண்டு மகள்களும் உள்ளனர்.

  அரசியல் வாழ்க்கை:

  பேரறிஞர் அண்ணா முன்னிலையில் 1964ம் ஆண்டு சென்னையிலுள்ள கோகலே மன்றத்தில் நடந்த இந்தி எதிர்ப்பு கருத்தரங்கில் பேசி தனது அரசியல் பிரவேசத்தை தொடங்கினார். இந்தி எதிர்ப்பு போராட்டம் தீவிரமாக இருந்த காலத்தில் திமுகவின் மாணவர் அணியில் இணைந்து செயலாற்றத் தொடங்கினார். சட்டக்கல்லூரி மாணவராக இருக்கும் போதே கட்சியில் இணைந்த வைகோவின் பேச்சு அண்ணா முதல் திமுகவின் கடைநிலை தொண்டர்கள் வரை அனைவரையும் கவர்ந்திழுத்தது. இதனால் திமுக மாணவரணி இணைச் செயலாளர், இளைஞரணி அமைப்புச் செயலாளர், தேர்தல் பணிக்குழுச் செயலாளர் என திமுகவில் அடுத்தடுத்து பதவிகள் கிடைக்க ஆரம்பித்தன.

  தனது 25வது வயதில் சொந்த ஊரான கலிங்கம்பட்டியில் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு ஊராட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அத்துடன் குருவிக்குளம் ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவியையும் வகித்துள்ளார். மூன்று முறை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும், இரண்டு முறை  மக்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளார். 1978ம் ஆண்டு முதன்முதலாக மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட வைகோ, 1984 மற்றும் 1990 என அடுத்தடுத்து மூன்று முறை மாநிலங்களவை உறுப்பினராக திமுக சார்பில் 18 ஆண்டுகள் பொறுப்பு வகித்துள்ளார்.

  தீவிர ஈழத் தமிழர் ஆதரவாளராக விளங்கிய வைகோ 1989ஆம் ஆண்டு எம்.பி. பதவியில் இருக்கும் போதே யாருக்கும் தெரியாமல் ரகசியமாக ஈழத்துக்குச் சென்று பிரபாகரனை சந்தித்தார். இதனால் திமுகவின் ஒட்டுமொத்த வெறுப்புக்கும் ஆளானார். அதனையடுத்து இரண்டு ஆண்டுகளிலேயே திமுக ஆட்சி கவிழ்ப்பு, இந்திரா காந்தி மரணம் போன்ற சம்பவங்கள் அரங்கேறின. இதனால் வைகோ மீதான கருணாநிதியின் வெறுப்பு அதிகரித்தது. இதனால் வைகோ கட்சியிலிருந்து விலக்கி வைக்கப்பட்டது போல் நடத்தப்பட்டார்.

  தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசியதற்காக 2001ம் ஆண்டு பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 19 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். 1993 ஆம் ஆண்டு தலைமைச் செயலாளர் கருணாநிதிக்கு எழுதிய கடிதத்தில் “வைகோ அரசியல் ஆதாயத்திற்காக விடுதலை புலிகளுடன் இணைந்து உங்களை கொல்ல திட்டமிடுகிறார்” என்ற தகவலை வைத்து வைகோ மீது கொலைப்பழி சுமத்தி திமுகவை விட்டு வெளியேறினார். பதிலுக்கு வைகோவும் கருணாநிதி குடும்ப அரசியலுக்காக தன்னை கட்சியை விட்டு வெளியேற்றியதாக குற்றச்சாட்டினார்.

  மதிமுக தொடக்கமும், கூட்டணி அரசியலும்:

  திமுகவில் இருந்து வெளியேறிய வைகோ தனது ஆதரவாளர்களுடன் இணைந்து 1994 ஆம் ஆண்டு, மே 6-ம் நாள் சென்னை தியாகராயநகரிலுள்ள தென்னிந்திய நடிகர் சங்கக் கட்டடத்தில்  `மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்’ என்ற கட்சியைத் தொடங்கியதோடு, கட்சிக்கொடியையும் அறிமுகப்படுத்தினார். 1991 முதல் 1996ம் ஆண்டு வரையிலான ஜெயலலிதா ஆட்சியில் ஜெயலலிதா மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் குவிந்தன. 

  இதனால் வைகோவின் கவனம் திமுகவில் இருந்து அதிமுக மீது திரும்பியது. 1996ம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டது. திமுக – அதிமுகவுக்கு மாற்று மதிமுக தான் என்பதை நிரூபிக்க முயன்றார். எனவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தார். 177 தொகுதிகளில் போட்டியிட்ட மதிமுக அனைத்து தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது.

  1998ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜக, அதிமுக கூட்டணியில் இணைந்தார். இந்த தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றது. சிவகாசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற வைகோ, முதன்முறையாக நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

  1999ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், திமுக, பாஜக கூட்டணியில் மதிமுக இணைந்தது. மீண்டும் சிவகாசி தொகுதியில் போட்டியிட்ட வைகோ, வெற்றிபெற்று இரண்டாவது முறையாக மக்களவை உறுப்பினரானார்.

  2001ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்ட மதிமுக மீண்டும் அனைத்து தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது. எனவே 2006ம் ஆண்டு அதிமுகவுடன் கூட்டணி வைப்பது என முடிவெடுத்தார். அந்த தேர்தலில் மதிமுக,  35 தொகுதிகளில் போட்டியிட்டு ஆறு தொகுதிகளில் வென்று முதன் முறையாக தமிழக சட்டமன்றத்துக்குள் நுழைந்தது.

  2009ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்த வைகோ, விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். 2014ம் ஆண்டு பாஜகவுடன் கூட்டணி அமைத்து விருதுநகர் மக்களவை தொகுதியில் போட்டியிட்ட வைகோ மீண்டும் தோல்வியை தழுவினார். அதன் பின்னர் 2011ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலை மதிமுக புறக்கணிப்பதாக வைகோ அறிவித்தார்.

  2016 சட்டமன்றத் தேர்தலில் வைகோ அவர்கள் தலைமையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் மக்கள் நலக்கூட்டணி அமைக்கப்பட்டது.  தேசிய முற்போக்கு திராவிட கழகம் தனது மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என 6 கட்சிகள் அடங்கிய இந்த கூட்டணிக்கு வைகோ ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டார். ஆனால் தேர்தலில் எதிர்பார்த்த அளவு வெற்றி கிடைக்காமல், மக்கள் நல கூட்டணியைச் சேர்ந்த கட்சிகள் படுதோல்வியை சந்தித்தன. இதனால் மக்கள் நல கூட்டணியும் முடிவுக்கு வந்தது.

  2019ம் ஆண்டு திமுக – காங்கிரஸ் தலைமையில் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொண்ட வைகோ தேர்தலில் வெற்றி பெற்று, 30 ஆண்டுகளுக்குப் பிறகு 4வது முறையாக மாநிலங்களவை உறுப்பினராக தேர்வானார்.

  2021ம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுகவின் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் மதிமுக இடம் பிடித்தது. உதயசூரியன் சின்னத்தில் 6 தொகுதிகளில் போட்டியிட்ட மதிமுக, அரியலூர், மதுரை, சாத்தூர், வாசுதேவநல்லூர் ஆகிய 4 தொகுதிகளில் வெற்றி வாகை சூடியது.

  அரசியல் 50 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் பிரதிநிதியாக செயல்பட்டு வரும் வைகோ முல்லைப் பெரியாறு, ஈழத் தமிழர் பிரச்சனை, தமிழக மீனவர்கள் பிரச்சனை, மதுவிலக்கு போராட்டம், சீமை கருவேல மரங்கள் ஒழிப்பு, மீத்தேன் ௭திர்ப்பு போராட்டம், காவிரி பிரச்சனை போன்ற பல விஷயங்களிலும் மக்களுடன் இணைந்து போராடி வருகிறார்.

  மகனால் வெடித்த சர்ச்சை:

  திமுக குடும்ப அரசியல் செய்வதாக குற்றச்சாட்டி, தனிக்கட்சி தொடங்கிய வைகோ தனது மகனுக்கு மதிமுகவில் பதவி வழங்கியது பெரும் புயலைக் கிளப்பியது. 2021ம் ஆண்டு சென்னை எழும்பூரில் உள்ள ம.தி.மு.கவின் தலைமைக் கழகமான தாயகத்தில் மாவட்ட செயலாளர்கள், உயர்நிலைக் குழு உறுப்பினர்கள், அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் வைகோவின் மகனான துரை வைகோ மதிமுகவின் தலைமைக் கழக செயலாளராக நியமிக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சியைச் சேர்ந்த மூத்த நிர்வாகிகள் பலரும் பதவி விலகினர்.

  தற்போது வைகோ உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால், மதிமுகவின் அடுத்த பொதுச்செயலாளராக துரை வையாபுரி வர உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கட்சியில் வைகோ மீது கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.