Udhayanidhi Stalin (உதயநிதி ஸ்டாலின்)

    அரசியல் குடும்பத்து வாரிசாக தொடங்கி தமிழ்நாடு சட்ட மன்ற உறுப்பினர் வரை….உதயநிதி ஸ்டாலின் கடந்து வந்த பாதை!

    பக்கத்து வீட்டு பையன் போன்ற தோற்றம் கொண்டவர்தான் தற்போதைய சென்னை கீழ்பாக்கம் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக பதவிவகிக்கும் உதயநிதி ஸ்டாலின். தமிழகத்தில் நீண்ட கால அரசியல் வரலாறு கொண்ட, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரான மறைந்த கலைஞர் கருணாநிதி அவர்களின் குடும்ப வாரிசுகளில் ஒருவர் உதயநிதி ஸ்டாலின். இவர் தமிழ்நாட்டின் தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் மகன் ஆவார்.

    தாத்தா, அப்பா என்று அனைவருமே பல ஆண்டுகளாக அரசியலில் வேரூன்றிக் கிடந்திருந்தாலும், அரசியல் குடும்பத்தின் சாயல் எதுவும் இல்லாத ஒரு இளைஞனாக வளர்ந்தார். திரைத்துறையில் வினியோகஸ்தராக கால் பதித்து, நடிகராகவும் வளர்ந்துள்ளார். அரசியலில் ஈடுபாடு இல்லை, அரசியல் குடும்பத்தில் இருந்தால் கட்டாயம் அரசியலுக்கு வர வேண்டுமா என்ன என்று பல இடங்களில் பேசி வந்தவர், தற்போது தீவிரமாக அரசியலில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. உதயநிதி ஸ்டாலின் அரசியல் வாழ்க்கைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

    திரைப்படத்தில் இருந்து அரசியல்

    உதயநிதி ஸ்டாலின் திரு ஸ்டாலின் மற்றும் திருமதி துர்கா ஸ்டாலின் தம்பதியின் மூத்த மகன். இவருக்கு செந்தாமரை என்று ஒரு சகோதரி இருக்கிறார். தன்னுடன் கல்லூரியில் படித்த கிருத்திகா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு, இன்பநிதி என்ற ஒரு மகனும், தன்மயா என்ற மகளும் இருக்கின்றனர். திரைத்துறையில் முழு மூச்சாக பணியாற்றி வந்தாலும், மறைமுகமாக பல்வேறு அரசியல் பணிகளில் தந்தைக்கு உதவியாக இருந்துள்ளார்.

    ரெட் ஜெயண்ட் என்ற நிறுவனத்தின் மூலம் தமிழகத்தின் முன்னணி திரைப்பட விநியோகஸ்தராக செயல்பட்டு வந்தார். திரைப்படங்களில் அறிமுகமாகி நடித்து வந்த நேரத்தில், 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம், திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞர் அணி செயலாளராக சேர்ந்தார். மாநிலம் முழுவதும் நடந்த பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு, திமுக சார்பாக கலந்து கொண்டு உரையாற்றினார்.

    உதயநிதி ஸ்டாலினின் அரசியல் பிரசாரம்

    2019 ஆம் ஆண்டில் இருந்து அரசியலில் முழுமூச்சாக ஈடுபடத் தொடங்கினார். திராவிட முன்னேற்றல் கழகம் சார்பாக கிட்டத்தட்ட எல்லா பொதுக்குழுவிலும் கலந்து கொண்டு பேசினார். உதயநிதியின் தீவிரமான பிரசாரம் தமிழ்நாடு முழுவதும் திமுகவுக்கு சாதகமாகவும், அதையடுத்து திமுக பெரிய அளவில் வெற்றி பெறுவதற்கும் உதவியாக இருந்தது. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், உதயநிதி ஸ்டாலின் அவர்கள் AIIMS செங்கல் பற்றி குறிப்பிட்ட ஒரு கருத்து தமிழ்நாடு தேர்தல் பிரசாரத்தின் போக்கையே மாற்றியது என்று கூறலாம்.

    2019 நாடாளுமன்ற தேர்தலில், திமுகவின் இளைஞரணி செயலாளராக, கட்சியின் ஒரு அங்கத்தினராக பொதுக்கூட்டங்களில் பிரசாரங்களில் கலந்து கொண்டார் உதயநிதி. ஆனால் சில வாரங்களிலேயே திமுகவின் நட்சத்திர பேச்சாளராக, நட்சத்திர உறுப்பினராக மாறினார். தமிழ்நாட்டில் திமுக மீண்டும் விஸ்வரூபம் பெற்று ஆட்சியில் அமர்ந்திருபதற்கு உதயநிதி ஸ்டாலின் பங்களிப்பு மிகவும் இன்றியமையாதது.

    2021 சட்டசபை தேர்தல் வெற்றி

    2021 ஆம் ஆண்டு நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், திமுக சார்பாக சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட்டார். பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று, அந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.

    சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்ட சில நாட்களிலேயே உதயநிதி ஸ்டாலின் மக்களை கவரும் வகையில் மிகப்பெரிய மாற்றம் ஒன்றை கொண்டு வந்தார் ஜே பக்கம் திருவல்லிக்கேணி தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதியில், பாதாள சாக்கடை, கழிவு நீரை அகற்ற சுத்தம் செய்ய, ரோபோட்டிக் கழிவு நீக்கும் கருவியை அறிமுகம் செய்தார்.

    2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுகவின் மாபெரும் வெற்றிக்கு முந்தைய இரண்டு தேர்தல்களிலும் திமுக வெற்றி பெறவில்லை. அதைத் தொடர்ந்து 2021 ஆம் ஆண்டில் திமுக இமாலய வெற்றி பெற்றது மட்டுமல்லாமல், திமுகவில் உதயநிதி ஸ்டாலினின் வளர்ச்சியும் குறிப்பிடத்தக்கது.

    2021 சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியை கைப்பற்றிய பிறகு, கட்சியில் உதயநிதியின் வளர்ச்சிகண்டு, அவருக்கு வழங்கப்படும் பொறுப்புகளும் பதவிகளும் கண்டு சில அதிருப்திகள் வெளிப்பட்டன. ஆனால், கடந்த ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடரில் தற்போதைய முதலமைச்சர் திரு ஸ்டாலினின் பேச்சு, கட்சியின் அடுத்த வாரிசு உதயநிதி ஸ்டாலின் தான் என்பது தெளிவாகத் தெரிந்தது.

    சமீபத்தில், அண்ணா பல்கலைகழகத்தின் மூன்று ஆண்டு காலத்துக்கு ஆட்சி மன்றக் குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த செப்டம்பர் 13, 2021 அன்று, சட்டசபை சபாநாயகர், திரு எம். அப்பாவு இந்த அறிவிப்பை மேற்கொண்டார்.