TTV Dhinakaran (டிடிவி தினகரன்)

  அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனின் வாழ்க்கை கதை!

  தமிழ்நாட்டில் தற்சமயம் உள்ள பெரும் அரசியல் கட்சிகளில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகமும் ஒன்று. குறைந்த காலத்தில் அந்த கட்சியை வலுப்படுத்திய பெருமைக்குச் சொந்தக்காரர் டி.டி.வி.தினகரன்.

  குடும்பப் பின்னணியும் கல்வியும்

  திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் 1963ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி பிறந்தார் டி.டி.வி.தினகரன். அவரது தாயார் வணிதாமணி, வி.கே.சசிகலாவின் உடன்பிறந்த சகோதரியாவார். தினகரனுக்கு பாஸ்கரன், சுதாகரன் என இரண்டு இளைய சகோதரர்கள் உள்ளனர். அதில் சுகாகரன், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனாக சொல்லப்பட்டவர். தினகரன் தனது மாமா மகளை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார். 1980ஆம் ஆண்டு மன்னார்குடியில் தனது பள்ளிப்படிப்பை நிறைவு செய்த தினகரன் பிறகு கர்நாடகா மாநிலம், மைசூர் பல்கலைக்கழகத்தின் சிக்மகளூர் ஏ.ஐ.டி கல்லூரியில் சிவில் இன்ஜினியரிங் படிக்க சேர்ந்தார். ஆனால் கல்லூரி படிப்பை பாதியிலேயே கைவிட்டார்.

  தொழிலால் சந்தித்த வழக்குகள்

  1990களின் ஆரம்ப காலத்தில் தொழில்முனைவோராக வலம் வந்தார் தினகரன். தனது சகோதரர்களோட இணைந்து ‘சூப்பர் டூப்பர் டிவி’ என்ற நிறுவனத்தை நடத்தி வந்தார். ஆனால் அதன்மூலம் அவருக்கு வந்த பிரச்னைகளே அதிகம் என சொல்லலாம். 1996ஆம் ஆண்டு அந்நிய செலாவணி மோசடி, வரி ஏய்ப்பு, முறைகேடாக பணம் முதலீடு, சட்டவிரோத பரிவர்த்தனை என அந்நிய செலாவணி ஒழுங்குமுறை சட்டமாக ஃபெராவின் கீழ் தினகரன் மீது இந்திய அமலாக்கத்துறை இரண்டு வழக்குகளை பதிவு செய்தது. இந்த வழக்கு விசாரணை சுமார் 20 ஆண்டுகள் நடைபெற்றது. இறுதியாக கடந்த 2016ஆம் ஆண்டு தினகரனுக்கு 28 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

  தினகரனின் அரசியல் வருகை

  வி.கே.சசிகலாவின் மூலமாக ஜெயலலிதாவிடம் அறிமுகம் ஆனார் தினகரன். அதன்பிறகு ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராக போயஸ்கார்டனில் அவர் உருவெடுத்தார். இதனால் 1998ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் தேனி தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு தினகரனுக்கு கொடுக்கப்பட்டது. அதில் வெற்றிபெற்று நாடாளுமன்ற உறுப்பினரானார். இதன்பிறகு 2004ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மீண்டும் தேனி தொகுதியில் போட்டியிட்ட தினகரனுக்கு வெற்றி கிடைக்கவில்லை. இருந்தபோதிலும் அவரை மாநிலங்களவை உறுப்பினராக்கினார் ஜெயலலிதா. தொடர்ந்து 2010ஆம் ஆண்டு வரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த தினகரன், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறையின் மாநில செயலாளராகவும், கழகப் பொருளாராகவும் இருந்தார். மேலும், பாதுகாப்புக்குழு உறுப்பினர், மனிதவள மேம்பாட்டுக்குழு உறுப்பினர் என பல்வேறு பொறுப்புகளையும் வகித்தார்.

  ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவின் நிலை

  2011ஆம் ஆண்டு பல்வேறு காரணங்களுக்காக சசிகலா, தினகரன் மற்றும் அவர்களது மொத்த குடும்ப உறுப்பினர்களையும் ஜெயலலிதா கட்சியில் இருந்து நீக்கினார். அதன்பிறகு பல ஆண்டுகள் நேரடி அரசியலில் இருந்து விலகி இருந்தார் தினகரன். இந்த நிலையில் கடந்த 2016ஆம் ஆண்டு ஜெயலலிதா உயிரிழந்த பிறகு அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார் சசிகலா. அவர் தினகரனை மீண்டும் கட்சியில் இணைத்ததோடு, அவருக்கு துணைப் பொதுச்செயலாலர் பதவியையும் வழங்கினார். இந்த சூழலில் சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதன்பிறகு கட்சிக்குள் ஏகப்பட்ட பிரச்னைகளும் குளறுபடிகளும் நடந்தன. இறுதியில் கட்சி அதிகாரத்தை எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தன்வசப்படுத்தினர். இதனால், சசிகலா மற்றும் தினகரன் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக மீண்டும் அறிவிக்கப்பட்டது.

  தினகரனும் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகமும்

  அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிறகே தினகரனின் அரசியல் ஈடுபாடுகள் மேலும் தீவிரமாகியது. 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக குக்கர் சின்னத்தில் தினகரன் போட்டியிட்டார். தேர்தல் முடிவில் அதிமுக வேட்பாளரை விட சுமார் 40,000 வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானார் தினகரன். பிறகு 2018ஆம் ஆண்டு ’அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்’ என்ற புதிய கட்சியை தொடங்கினார். அதிமுக மற்றும் இரட்டை இலைச் சின்னத்தை மீட்கும் வரை தனக்கென ஒரு அடையாளம் வேண்டும் என்பதால் புதிய கட்சியை தொடங்குவதாக தினகரன் கூறினார்.

  பிறகு, 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அக்கட்சி முதன்முறையாக போட்டியிட்டது. தேர்தல் ஆணையத்தில் அமமுக பதிவு செய்யப்படாத காரணத்தால் அக்கட்சியின் அனைத்து வேட்பாளர்களும் சுயேச்சைகளாக போட்டியிட்டனர். முடிவில் அனைத்து தொகுதிகளிலும் தோல்வியே மிஞ்சினாலும் 21 தொகுதிகளில் அமமுக மூன்றாவது இடம்பிடித்தது. இதன்பிறகு, அமமுகவை பதிவு செய்யப்பட்ட கட்சியாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

  தொடர்ந்து நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிட்ட தினகரனின் அமமுக மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்தது. கடந்த 2021ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் தேமுதிக, எஸ்.டி.பி.ஐ உள்ளிட்ட கட்களோடு கூட்டணி அமைத்து அமமுக போட்டியிட்டது. அத்தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் அதிமுகவின் கடம்பூர் ராஜுவுக்கும் டி.டி.வி.தினகரனுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. முடிவில் தினகரன் தோல்வியடைந்து இரண்டாவது இடத்தை பிடித்திருந்தாலும் கடம்பூர் ராஜுவை விட சுமார் 6 சதவிகித வாக்குகளே குறைவாக பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.