Thol Thirumaavalavan

  “அரசு தடயவியல் துறை ஊழியரான தொல்.திருமாவை முழு நேர அரசியல்வாதியாக மாற்றியது எது“?

  தடவியல் துறையில் அரசு அதிகாரியாகப் பணியில் சேர்ந்து சந்தர்ப்ப சூழலில் தலித் தலைவராகப் பதவி வகித்தவர் தான் தொல். திருமாவளவன். ஈழத்தமிழர்களுக்கானப் போராட்டத்தை ஒருங்கிணைக்கும் பணிகளில் ஈடுபட்டு பொது வாழ்க்கைத் தொடங்கிய இவர், தற்போது நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்து தன்னுடைய அரசியல் பயணத்தை மேற்கொள்கிறார்.

  விடுதலை சிறுத்தைக் கட்சியைப் பயன்படுத்தி சாதி அரசியல் செய்கிறார் என்ற குற்றச்சாட்டுகள் வந்தாலும் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் உரிமைகளுக்காக எதையும் பொறுத்துக் கொள்வேன் என்று தன்னுடைய வழியில் பயணிக்கும் திருமாவின் வாழ்க்கை குறித்த ஓர் பார்வை…

  அரியலூர் மாவட்டம் செந்துரை அருகிலுள்ள சிறிய கிராமமான அங்கனூரில் கடந்த 1962 ஆகஸ்ட் 17 ல் ராமசாமி- பெரியம்மாள் தம்பதியினருக்கு இரண்டாவது மகனாப் பிறந்தார் தொல் திருமாளவன். சொந்த கிராமத்தில் பள்ளிப்படிப்பை முடித்த இவர், விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கல்லூரியில் பி.யூ.சியும் சென்னை மாநிலக் கல்லூரியில் இளங்கலை வேதியியல், சென்னை பல்கலைக்கழகத்தில் முதுகலை குற்றவியல் பயின்றார். பின்னர் 1988ல் சென்னை சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்தார். இவர், மதுரையில் அரசு தடயவியல் துறையில் அறிவியல் உதவியாளராக 1999ல் பணியில் சேர்ந்தார். கடந்த 2019ல் திருநெல்வேலி முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.

  அரசியல் பயணம் ஆரம்பம்….

  தன்னுடைய இளம் வயதில் இருந்தே தன்னுடைய சமுகத்தின் முன்னேற்றத்திற்காக குரல் கொடுத்த தொல் .திருமாளவனுக்கு அம்பேத்காரின் மனைவி சவீதா ஆரம்பித்த பாரதீய தலித் பேந்தர் அமைப்பின் தமிழக அமைப்பாளரான மலைச்சாமியுடன் தொடர்பு ஏற்பட்டது. பின்னர் 1982ல் இந்த அமைப்பில் தன்னையும் இணைத்துக் கொண்டதோடு பல போராட்டங்களை முன்னெடுத்தார். குறிப்பாக 1983ல் நடந்த ஈழத் தமிழர்களுக்கான மாணவர் போராட்டங்களை ஒருங்கிணைக்கும் பணிகளில் ஈடுபட்டது தான் இவரின் முதல் அரசியல் நடவடிக்கை. இதோடு நின்றுவிடாமல் 1986ல் இலங்கைக்கே சென்று இங்கு தமிழ்க் கல்லூரி மாணவர்களின் போராட்டத்திலும் கலந்துக் கொண்டார்.

  இப்படி பொதுவாழ்வில் ஈடுபட்டிருந்த சமயத்தில் தான் 1990 ல் மதுரையில் அரசு தடயவியல் துறையில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. இதற்கு முன்னதாக பாரதீய தலித் பேந்தர் அமைப்பின் தலைவர் மலைச்சாமி உயிரிழந்து விட்டார். இதனால் அமைப்பை யார் நிர்வகிப்பார்கள் என்ற கேள்வி எழுந்த சமயத்தில் தான், அந்த அமைப்பின் மாநில அமைப்பாளராகத் தேர்வானர் திருமா. பின்னர் இந்த அமைப்பின் பெயரை இந்திய ஒடுக்கப்பட்ட சிறுத்தைகள் என மாற்றியதோடு மட்டுமின்றி புதிய கொடியையும் அறிமுகப்படுத்தினார். பின்னர் 1991 ஆம் ஆண்டு இதன் பெயரை விடுதலைச் சிறுத்தைகள் என மாற்றி தற்போது வரை அக்கட்சியின் தலைவராக உள்ளார்.

  இதனையடுத்து 1997 ல் அரசியல் செயல்பாடுகளில் அதிகளவில் ஈடுபட்டதால், அரசு பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். பின்னர் தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணியுடன் சேர்ந்து பெரம்பலூர் தொகுதியில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது அரசுப் பணியை ராஜினாமா செய்தார். முதல் தேர்தல் களம் என்பதால் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்ற எண்ணத்தில் தேர்தல் பிரச்சாரத்தை உற்சாகத்துடன் மேற்கொண்ட இவர் அத்தேர்தலில் தோல்வியைச் சந்தித்தார். அதே சமயம் 1 லட்சத்துக்கு மேற்பட்ட வாக்குகளை முதல் தேர்தலிலேயே பெற்றார். இதேப் போன்று 2004 ல் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவிய திருமா, 2009 ல் திமுக கூட்டணியில் சிதம்பரம் தொகுதியில் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார் .

  பின்னர் 2014 ல் நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியைச் சந்தித்த இவர் 2019 தேர்தலில் மீண்டும் சிதம்பரம் தொகுதியில் திமுக கூட்டணியில் தனிச்சின்னத்தில் வெற்றி பெற்று தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக வலம் வருகிறார்.. இப்படி தன்னுடைய அரசியல் பயணத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டதால் தமிழக சட்டமன்றத் தேர்தலிலும் தைரியமாக களமிறங்கியது விடுதலை சிறுத்தை கட்சி. 2001ல் தமிழக சட்டமன்ற உறுப்பினராக தேர்வான திருமா 2016 ல் மக்கள் நலக்கூட்டணியில் காட்டுமன்னார் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைச் சந்தித்தார்.

  திருமா குறித்த சுவாரஸ்சிய தகவல்கள்..

  சாதி,மத அடையாளமற்ற மற்றும் தமிழ் மொழியைத் தவிர்த்து சமஸ்கிருதம் போன்ற எந்த மொழியும் தமிழகத்தில் இருக்கக்கூடாது என்பதற்காக தமிழ்ப் பெயரிடலை அனைவரையும் வலியுறுத்தி சென்றார். குறிப்பாக விடுதலை சிறுத்தைக் கட்சி தொண்டர்கள் உள்பட தனது தந்தையின் பெயரான ராமசாமி என்பதை தொல்காப்பியன் என பெயர் மாற்றம் செய்தார். மேலும் தமிழகத்தின் மரமான பனைமரத்தின் நன்மைகளை உலகறிய செய்யும் விதமாக பதை விதை நடுதலையும் தன்னுடைய பொதுவாழ்வில் ஒரு பணியாக மேற்கொள்கிறார்.

  அரசியலில் தன்னை முழு நேரம் ஈடுபடுத்திக் கொள்வதோடு மக்களின் நலன்களுக்காக எப்போது உறுதுணையாக இருக்க வேண்டும் என வாழ்க்கைத்துணையைக்கூட அதவாது இதுவரை திருமணம் கூட இவர் செய்துக் கொள்ளவில்லை… அரசியல், சமூக மக்களின் நலன் என பொது வாழ்வில் ஈடுபட்டு வந்ததோடு இலக்கியம் மற்றும் திரைத்துறையில் தன்னுடைய ஆர்வத்தைக் காட்டியுள்ளார். அத்துமீறு, தமிழர்கள் இந்துக்களா? போன்ற புத்தகங்களை எழுதியுள்ளார். மேலும் அன்புத்தோழி, கலகம்., மின்சாரம் போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  என்னதான் பல விமர்சனங்கள் வந்தாலும் விளிம்பு நிலை மக்களுக்களின் அரசியல் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் தலைவராக உள்ளார் தொல். திருமாவளவன்.