HOME » THAIPUSAM

Thaipusam

  தைப்பூசத் திருநாளின் சிறப்புகளை அறிவோம்!

  தைப்பூசத் திருநாள் பெரும்பாலும் முருகக் கடவுளுக்கு உகந்த நாள் என்று பரவலான நம்பிக்கை நிலவுகின்ற அதே சமயத்தில், இது சிவபெருமானுக்கும் உகந்த தினமாக கருதப்படுகிறது. இதை உறுதி செய்யும் வகையிலான கல்வெட்டுகள் மற்றும் சங்க கால இலக்கியங்கள் உள்ளன.

  மொத்தமுள்ள 27 நட்சத்திர மண்டலங்களில் 8ஆவதாக பூசம் நட்சத்திரம் வருகிறது. தமிழர்களின் புனித மாதமான தை மாதத்தில், இந்தப் பூச நட்சத்திரமும், பௌர்ணமி திதியும் சேர்ந்து வரும் நன்நாளே தைப்பூசத் திருநாள் என்று கொண்டாடப்படுகிறது.

  எங்கெங்கு தைப்பூசம் கொண்டாடப்படுகிறது?

  தைப்பூச திருநாள் இந்தியா மட்டுமல்லாமல், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா உள்பட தமிழர்கள் வசிக்கும் பல்வேறு நாடுகளில் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. தைப்பூச திருநாளன்று பக்தர்கள் விருதம் இருந்து முருகன், சிவபெருமான் உள்ளிட்ட கடவுள்களை வழிபடுகின்றனர்.

  குறிப்பாக, முருகன் கோவிலுக்கு பால்குடம் எடுப்பது, காவடி எடுப்பது போன்ற நேர்த்திக்கடன்களை செலுத்துகின்றனர். இது மட்டுமல்லாமல் குழந்தைகளுக்கு காது குத்துவது, ஏடு தொடங்குவது போன்ற மரபுகளை கடைப்பிடிக்கின்றனர்.

  தைப்பூசத்தை முன்னிட்டு முருக பக்தர்கள், மார்கழி மாத ஆரம்பத்தில் துளசி மாலை அணிந்து விரதத்தை தொடங்குகின்றனர். இதைத் தொடர்ந்து, சஷ்டி கவசம், சண்முக கவசம்,திருப்புகழ் போன்ற பாடல்களை அன்றாடம் பாராயணம் செய்து தைப்பூசத்தன்று பழனி முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்து விரதத்தை முடிப்பார்கள்.

  அறுபடை வீடுகளில் திருவிழா

  தமிழகத்தில் முருகனின் அறுபடை வீடுகளாக கருதப்படும் பழனி, திருச்செந்தூர், திருத்தனி, திருப்பரங்குன்றம் உள்பட அனைத்து இடங்களில் வெகுவிமரிசையாக தைப்பூச திருவிழா கொண்டாடப்படுகிறது. இருப்பினும் பழனி தண்டாயுதபாணி கோவிலில் நடைபெறும் திருவிழாவே மிக பிரம்மாண்டமானதாகவும், பெருவாரியான பக்தர்கள் ஒன்றுகூடும் இடமாகவும் இருக்கிறது.

  பழனியில் அன்றைய தினம், முருகப் பெருமான் தன்னுடைய இரு மனைவிகளான வள்ளி, தெய்வாணையுடன் திருமணக் கோலத்தில் தேர்பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

  தைப்பூசம் உருவான வரலாறு

  விண்ணுலகில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே போர் ஏற்பட்டது. இந்தப் போரில் தேவர்களால் அசுரர்களை வீழ்த்த முடியவில்லை. எனவே பல்வேறு தொல்லைகளை கொடுத்து வந்த அசுரர்களை அழிக்க வேண்டி சிவபெருமானிடம் தேவர்கள் முறையிட்டனர். தங்களால் அசுரர்களை அழிக்க முடியவில்லை. எனவே தங்களுக்கு தலைமை தாங்கிச் செல்லக்கூடிய ஆற்றல் வாய்ந்த, சக்தி மிகுந்த ஒரு தலைவனை உருவாக்க வேண்டும் என்று சிவபெருமானிடம் தேவர்கள் வேண்டிக் கொண்டனர்.

  கருணைக்கடலாக உள்ள எம்பெருமான், தேவர்களின் முறையீட்டை ஏற்று தனது தனிப்பட்ட சக்தியால் உருவாக்கிய அவதாரமே கந்தன் என்னும் முருகப் பெருமான் ஆகும். சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து வெளியான 6 தீப்பொறிகள் 6 அழகான குழந்தைகளாயின. கார்த்திகைப் பெண்களால், அக்குழந்தைகள் வளர்க்கப்பட்டு பின்னர் ஆறுமுகங்களுடன் அவதரித்தது. அப்படி அவதரித்தவரே கந்தன் எனப்படும் முருகனாவார்.

  சிவபெருமானின் தேவியான அன்னை பார்வதி தேவியானவள், ஆண்டி கோலத்தில் பழனி மலையில் வீற்றிருக்கும் முருகப்பெருமானுக்கு தைப்பூச நாளில் ஞானவேல் வழங்கியதாக நம்பப்படுகிறது. அதனால் தான் பழனி மலையில் தைப்பூசத் திருவிழா மற்ற முருகன் கோவில்களைக் காட்டிலும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

  அன்னை பார்வதியால் அளிக்கப்பட்ட வேலினை ஆயுதமாகக் கொண்டே முருகன் அசுர குலத்தை அழித்து தேவர்களைக் காப்பாற்றினான். தேவர்களுக்குத் தொல்லை கொடுத்த அரக்கர்களை திருச்செந்தூர் எனப்படும் திருச்சீரலைவாயில் வதம் செய்து தேவர்கள் நிம்மதி அடையச் செய்தவர் முருக கடவுள். எனவே தான் அசுரர்களை வதம் செய்ய முருகப்பெருமான் பயன்படுத்திய வேலினை வழிபட்டால், தீய சக்திகள் நம்மைத் தாக்காமல் இருப்பதுடன், அந்த சக்திகள் நமக்கு அடி பணிந்து நல்லருளை நல்கும் என்பது ஐதீகம்.

  சிவாலயங்களிலும் தைப்பூசத் திருநாள் கொண்டாட்டம்

  சிவன் நடராஜராக நடனமாடிய நாள் மார்கழி திருவாதிரை ஆகும். சிவனும் அம்பிகையும் இணைந்து ஆடிய நாள் தைப்பூசம் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் தைப்பூசம் சிவசக்திக்கு உரிய நாளாகவும் கருதப்படுகிறது. இதனால்தான் சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், திருவிடைமருதூர், திருப்புடைமருதூர் போன்ற சிவாலயங்களில் இந்த விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தைப்பூச நாளில் சென்னை கபாலீஸ்வரருக்கு தேன் அபிஷேகம் நடைபெறும். இந்த அபிஷேகத்தைக் காண்பவர்களுக்குப் பிறவிப்பிணி அகலும் என்பது நம்பிக்கை.

  தைப்பூச நாளில்தான் சப்த கன்னியருக்கு ஈசன் காட்சி அளித்து வரங்கள் அளித்தார் எனக் குளித்தலை கடம்பவன நாதர் தலவரலாறு கூறுகிறது. சோழர்கள் காலத்தில் தைப்பூச விழா, கூத்துகள் நடைபெற்ற ஒரு கேளிக்கை விழாவாக இருந்துள்ளது. திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில் கல்வெட்டுகள் மூலமாக இந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

  வள்ளலார் ராமலிங்க சுவாமிகள் ஒளி ரூபமாக இறைவனோடு கலந்த வடலூர் மேட்டுக்குப்பத்தில், தைப்பூச நாளில் லட்சக்கணக்கானோர் கூடி வள்ளலார் விழாவை கொண்டாடுகின்றனர்.