HOME » SUNDAR C

Sundar C (சுந்தர் சி)

    காமெடியில் கலக்கல், ஆக்ஷனில் அசத்தல்….டைரக்டர் மற்றும் நடிகராக ஜொலிக்கும் சுந்தர். சி!

    பன்முக திறமை கொண்ட கலைஞர்களை சினிமா ரசிகர்கள் என்றும் கொண்டாட தவறுவதில்லை. நடிகரிகள் எல்லாம் பாடகர்களாகவும், கவிஞர்களாகவும் மாறி தங்கள் திறமையை நிரூபித்து வரும் நிலையில், முன்னணி டைரக்டர்களில் ஒருவராக இருக்கும் போதே நடிகராக அறிமுகமாகி மக்கள் மனதில் தனி இடம் பிடித்தவர் சுந்தர் சி.

    சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித்குமார், சத்யராஜ், சரத்குமார், கார்த்திக் என பெரிய நடிகர்களை இயக்கி பல வெற்றிப் படங்களை கொடுத்த டைரக்டர் மற்றும் நடிகருமான சுந்தர் சி-யின் பிறப்பு, ஆரம்பகால வாழ்க்கை, தொழில் வாழ்க்கை மற்றும் திருமண வாழ்க்கை உள்ளிட்டவற்றை பற்றிய சுவாரசிய தகவல்களை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

    பிறப்பு:

    ஈரோடு மாவட்டத்தில் 1968-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 21-ஆம் தேதி பிறந்த சுந்தர் சி-யின் இயற்பெயர் விநாயகர் சுந்தர் வேல் என்பதாகும். இவரது பெற்றோர்கள் பெயர் சிதம்பரம் பிள்ளை மற்றும் தெய்வானை அம்மாள்.

    உதவி இயக்குநராக..

    பலரையும் போல சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சென்னை வந்த சுந்தர் சி, மறைந்த பிரபல இயக்குனர் மற்றும் நடிகருமான மணிவண்ணனிடம் உதவி இயக்குநராக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கினார். மணிவண்ணனின் பல சூப்பர் ஹிட் படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றிய அனுபவத்துடன் தானும் ஒரு டைரக்டராக வேண்டும் என்ற எண்ணத்தை செயல்படுத்த தீவிர முயற்சிகளை மேற்கொண்டார்.

    1995-ல் முதல் படம்..

    1995-ஆம் ஆண்டு முறை மாமன் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக கோலிவுட்டில் அறிமுகமானார் சுந்தர் சி. முதல் படத்திலேயே பிரபல மலையாள நடிகரான ஜெயராமை வைத்து காமெடி கலந்த ஆக்ஷன் படமாக விருந்து படைத்து தமிழ் ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்தார். உண்மையில் முறை மாமன் படத்தில் முதலில் சரத்குமாரை நடிக வைக்க அணுகியதாகவும், ஆனால் கால்ஷீட் சிக்கலால் பின்னர் ஜெயராமை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்ததாகவும் தகவல் உண்டு. ஜெயராம் – கவுண்டமணி இணை இந்த படத்தில் காமெடியில் செமையாக கலக்கி இருப்பார்கள். முதல் படத்திலேயே காமெடியில் முத்திரை பதித்த சுந்தர் சி, தொடர்ந்து காமெடி ஜர்னரிலேயே பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார்.

    முறை மாமன் பாக்ஸ் ஆபிஸில் சிறப்பான் ஹிட்டை பதிவு செய்ததையடுத்து நடிகர் அருண் விஜயை வைத்து முறை மாப்பிளை, கார்த்திக்கை உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி மற்றும் உனக்காக எல்லாம் உனக்காக போன்ற பல நகைச்சுவைத் திரைப்படங்களை இயக்கி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றார்.

    சூப்பர் ஸ்டார் & உலக நாயகன்:

    துவக்கத்தில் காமெடி படங்களை இயக்கிய போதே நடிகர் ரஜினியை வைத்து இவர் டைரக்ட் செய்த அருணாச்சலம் மாபெரும் வெற்றியை பெற்றது. இது காமெடி திரைப்பட டைரக்டர் என்ற இவர் மீதான இமேஜை முற்றிலும் மாற்றியது. அருணாச்சலத்தை தொடர்ந்து மீண்டும் காமெடி டிரக்கிற்கு திரும்பிய சுந்தர் சி, நாம் இருவர் நமக்கு இருவர் , சுயம்வரம், அழகர்சாமி, கண்ணன் வருவான், உள்ளம் கொள்ளை போகுதே உள்ளிட்ட பல ஹிட் படங்களை இயக்கினார். முதல் முறையாக வேறு ஒரு பரிமாணத்தில் தன்னை நிரூபித்து காட்டிய திரைப்படமாக சுந்தர் சி-க்கு அமைந்தது நடிகர் கமலை வைத்து இவர் இயக்கிய அன்பே சிவம். இந்த படம் வெளியான போது அவ்வளவாக வரவேற்பை பெறவில்லை என்றாலும், பல ஆண்டுகளுக்கு பிறகும் தற்போது வரை மக்கள் மத்தியில் பேசப்படும் தனித்துவமிக்க திரைப்படமாக இருந்து வருகிறது.

    மீண்டும் காமெடி:

    அன்பே சிவத்தை தொடர்ந்து மீண்டும் காமெடி டிரக்கிற்கு மாறிய சுந்தர் சி வடிவேலுவை வைத்து காலத்தால் அழியாத நகைச்சுவை திரைப்படங்களான வின்னர், லண்டன், கிரி, ரெண்டு உள்ளிட்ட படங்களை இயக்கி ரசிங்கர்களை குலுங்க குலுங்க சிரிக்க வைத்தார். இவை ஹீரோவிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்கள் என்றாலும் காமெடிக்காகவே ரசிகர்களால் மிகவும் விரும்பி பார்க்கப்பட படங்களாக அமைந்தன.

    நடிகராக மாறிய சுந்தர் சி:

    பன்முக திறமை கொண்ட சுந்தர் சி தான் இயக்கிய சில படங்களில் சிறு ரோல்களில் தலைகாட்டினாலும், முழு ஹீரோவாக களமிறங்கிய திரைப்படம் தான் 2006-ல் வெளியான தலைநகரம். வடிவேலுவை வைத்து இயக்கிய சுந்தர் சி, இதில் வடிவேலுவுடன் ஜோடி சேர்ந்து காமெடியில் பட்டையை கிளப்பி இருப்பார். சுந்தர் சி-யை நடிகராகவும் மக்கள் ஏற்று கொண்டதை அடுத்து வீராப்பு, சண்டை, ஆயுதம் செய்வோம், பெருமாள், தீ, ஐந்தாம் படை, குரு சிஷ்யன், வாடா, முத்தின கத்திரிக்காய் உள்ளிட்ட காமெடி பிளஸ் ஆக்ஷன் படங்களில் நடித்து ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றார். நடிகராக மாறினாலும் இடையில் இவர் இயக்கிய முழுநீள காமெடி படமான கலகலப்பு, அரண்மனை, அரண்மனை 2, அரண்மனை 3, ஆம்பள, தீயா வேலை செய்யணும் குமாரு, கலகலப்பு2 உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்கள் ரசிகர்களை மகிழ்வித்தன. காமெடி, ஹாரர், ஆக்ஷன் என டைரக்ஷன் மற்றும் நடிப்பில் வெரைட்டி காட்டி வரும் சுந்தர். சி சில படங்களுக்கு தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார்.

    காதல் & திருமணம்:

    தான் டைரக்ட் செய்த முதல் படமான முறை மாமன்-ல் ஹீரோயினாக நடித்த குஷ்பூவிடம் மனதை பறி கொடுத்த சுந்தர். சி, 1995-ஆம் ஆண்டே காதலை கூறியுள்ளார். இவரின் காதலை குஷ்பூ ஏற்று கொண்டதை தொடர்ந்து 5 ஆண்டுகள் காதலித்த பிறகு இருவரும் 9.3.2000 அன்று திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு தற்போது அவந்திகா, அனந்திதா என்ற 2 மகள்கள் இருக்கிறார்கள்.