HOME » SIVAKARTHIKEYAN

Sivakarthikeyan

  சின்னத்திரை டூ வெள்ளித்திரை; சினிமாவின் ‘டான்’ ஆக மாறிய சிவகார்த்திகேயன்!

  சின்னத்திரையில் 'கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சியின் ‘ முதல் டைட்டில் வின்னர் ஆன போது சிவகார்த்திகேயன் மீது விழுந்த லைம் லைட் வெளிச்சம் இன்று வரை அவரை தகதகவென மின்னவைத்துக் கொண்டிருக்கிறது. சூப்பர் ஸ்டாரின் தீவிர ரசிகராக இருந்தவர் அவர் மகள் இயக்கத்திலேயே நடிக்கும் அளவிற்கு வளர்ந்தது பற்றி பார்க்கலாம்…

  திரைப் பயணம்:

  மிமிக்ரி திறமை மூலமாக விஜய் தொலைக்காட்சியில் காலடி எடுத்து வைத்த சிவகார்த்திகேயன் ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியில் வெற்றி பெற்றதன் மூலமாக மக்கள் மனதில் இடம் பிடித்தார். அதன் பின்னர் விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த சிவகார்த்திகேயனுக்கு, சின்ன சின்ன குறும்புகளும்… சுளுக்கி சிரிக்க வைக்கும் நகைச்சுவையும் சினிமா வாய்ப்பை பெற்றுத் தந்தது.

  2012ஆம் ஆண்டு இயக்குநர் பாண்டிராஜ் இயக்கிய 'மெரினா' திரைப்படத்தின் மூலம் நாயகனாக வெள்ளித்திரைக்குள் காலடி எடுத்து வைத்தார். அதன்பின்னர் ‘மனங்கொத்திப் பறவை’, தனுஷ் உடன் ‘மூணு’, ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ ஆகிய படங்களில் தனது பாணியில் காமெடி மூலமாகவே கவனம் ஈர்த்தார். தனுஷ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்த ‘எதிர்நீச்சல்’ திரைப்படம் அவரை ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்க வைத்தது.

  அதன் பின்னர் ‘வருத்தபடாத வாலிபர் சங்கம்’, ‘மான் கராத்தே’ ஆகிய படங்களில் காமெடி ரூட்டில் பயணித்து கொண்டிருந்தவரை மீண்டும் காலரைப் பிடித்து ஆக்‌ஷன் ரூட்டுக்கு அழைத்து வந்தது ‘காக்கிச்சட்டை’ திரைப்படம். ஆக்‌ஷன் ப்ளஸ் காமெடி ஜனரில் வெளியான ‘ரஜினி முருகன்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து, முன்னணி நாயகளுடன் ஜோடி சேர்ந்து அசத்த ஆரம்பித்தார். கீர்த்தி சுரேஷ் உடன் ‘ரெமோ’, நயன்தாராவுடன் ‘வேலைக்காரன்’, சமந்தாவுடன் ‘சீமராஜா’ என ரசிகர்களின் கனவு கன்னிகளுடன் பட்டையைக் கிளப்பினார்.

  சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘மிஸ்டர் லோக்கல்’, ‘ஹீரோ’, ‘நம்ம வீட்டு பிள்ளை’ ஆகிய படங்கள் அடுத்தடுத்து வணிக ரீதியாக தோல்வியை தழுவியது. ஆனால் நெல்சன் இயக்கத்தில் 2021ம் ஆண்டு வெளியான ‘டாக்டர்’ திரைப்படமும், சமீபத்தில் வெளியான ‘டான்’ திரைப்படமும் மாஸ் ஹிட்டடித்து சிவகார்த்திகேயனின் மார்க்கெட்டை காப்பாற்றின.

  பன்முக திறமையாளராக வலம் வரும் சிவகார்த்திகேயன்:

  நடிகராக மட்டுமின்றி பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமை கொண்டவராக சிவகார்த்திகேயன் கலக்கி வருகிறார்.

  சிவகார்த்திகேயனுக்கு திருப்புமுனையாக அமைந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் இவர் பாடிய ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ இன்ட்ரோ சாங் பட்டி தொட்டி எல்லாம் ஹிட்டானது. அதன் பின்னர் ‘ராயபுரம் பீட்டரு’ (மான் கராத்தே), ‘ஐயம் சோ கூல்’ (காக்கிச்சட்டை), ‘கன்..கன்… கன்… ரஜினி முருகன்’ (ரஜினிமுருகன்), ‘எதுக்கு மச்சான்’ (மாப்ள சிங்கம்), வாயாடி பெத்த புள்ள (கனா), ‘என்ன மயிலு’ (லிப்ட்) என இவரது ஹிட் பாடல்களின் லிஸ்ட் நீண்டு கொண்டே செல்கிறது.

  நெல்சன் திலீப்குமார் டைரக்டராக அறிமுகமான ‘கோலமாவு கோகிலா’ படத்தில் அனிருத் இசையில், ‘கல்யாண வயசு தான்’ பாடல் மூலமாக சிவகார்த்திகேயன் முதல் முறையாக பாடலாசிரியராக அறிமுகமானார். மீண்டும் யோகிபாபு நடிப்பில் வெளியான ‘கூர்கா’ படத்தில் ‘ஹே போயா’ என்ற பாடலை எழுதினார். ‘நம்ம வீட்டு பிள்ளை’ படத்திற்காக ‘காந்த கண்ணழகி’ பாடலையும், ஆதித்யா வர்மா படத்தில் ‘இது என்ன மாயமோ’ என்ற பாடலையும் சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார். மீண்டும் நெல்சன் திலீப்குமார், அனிருத், சிவகார்த்திகேயன் காம்போவில் உருவான ‘டாக்டர்’ படத்தில் வரும் ‘செல்லம்மா.. செல்லம்மா…’ பாடலை எழுதினார். இந்த பாடல் சோசியல் மீடியாவில் செம்ம ஹிட்டானது.

  சதீஷ் ஹீரோவாக அறிமுகமான ‘நாய் சேகர்’ படத்தில் ‘எடக்கு மொடக்கு’ என்ற பாடலை சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார். முதன் முறையாக சூர்யா – சிவகார்த்திகேயன் கூட்டணி சேர்ந்த ‘எதற்கும் துணிந்தவன்’ படத்திற்காக எஸ்கே எழுதிய ‘சும்மா சுர்ருன்னு’ பாடல் பட்டி, தொட்டி எல்லாம் பட்டையைக் கிளப்பியது.

  விஜய்யின் பீஸ்ட் படத்தின் ஃபஸ்ட் சிங்கிளாக வெளியிடப்பட்டுள்ள ‘அரபிக்குத்து’ பாடல் உலக அளவில் பேமஸ் ஆனது. நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையமைத்த இந்த பாடலுக்கு மிகவும் வித்தியாசமான வரிகளை சிவகார்த்திகேயன் எழுதியிருந்தது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. பாடல் வரிகள் புரியாதது போல் இருந்தாலும் தமிழ்நாட்டை தாண்டி உலகின் பல்வேறு நாடுகளிலும் கூட இந்த பாடல் மாஸ் ஹிட்டடித்தது.

  “எஸ் கே புரொடக்‌ஷன்ஸ்” என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் சிவகார்த்திகேயன், இதுவரை ‘கனா’, ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’, ‘வாழ்’ ஆகிய படங்களை தயாரித்துள்ளார். சமீபத்தில் வெளியான டான் படத்தை லைகா நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ளது.

  குடும்ப வாழ்க்கை:

  சிவகங்கையில் பிறந்த சிவகார்த்திகேயன், தனது தந்தை திருச்சியில் நீண்ட காலம் போலீஸாக பணியாற்றி வந்ததால் அங்கு தன் வளர்ந்தார். சிவகார்த்திகேயனின் தந்தை பெயர் தாஸ், காவல்துறையில் எஸ்.பி.யாக இருந்தவர். 2003ம் வருடம் பணியில் இருக்கும் போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அப்போது சிவகார்த்திகேயனுக்கு 16 வயது. தந்தையின் மறைவுக்கு பிறகு தனியொரு நபராக நின்று அம்மா ராஜி தான் மகள் கவுரியை மருத்துவராகவும், சிவகார்த்திகேயனை இன்ஜினியரிங் வரையிலும் படிக்க வைத்துள்ளார்.

  சிவகார்த்திகேயனுக்கு கவுரிமனோகரி என்ற அக்கா உள்ளார். அவர் மருத்துவராக பணியாற்றி வருகிறார். சிவகார்த்திகேயனை அவரது அம்மா ‘கார்த்தி’ என்று தான் அழைப்பாராம். சிவகார்த்திகேயன் சினிமாவிற்கு வரும் முன்பே திருமணம் ஆகிவிட்டது. தனது மாமா மகளான ஆர்த்தியைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆராதனா என்ற மகள் உள்ள நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இரண்டாவதாக மகன் பிறந்தார். சின்ன வயதிலேயே அப்பாவை இழந்த சிவகார்த்திகேயன் தனது தந்தையின் நினைவாக மகனுக்கு ‘குகன் தாஸ்’ என பெயர் சூட்டியுள்ளார்.

  திருச்சியில் உள்ள ஜெஜெ பொறியியல் கல்லூரியில் பட்டம் வென்ற சிவகார்த்திகேயன் பின்னாளில் விஜய் தொலைக்காட்சியில் ஸ்டார் ஆங்கராக மாறி வெள்ளித்திரையில் கால் பதித்தது அனைவரும் அறிந்த விஷயம்.