தந்தையின் ஊக்க சக்தியால் கிரிக்கெட்டரான சுப்மன் கில்!
குழந்தைகளின் கனவுகளுக்கு ஊக்கமளித்து முன்னெடுத்து செல்வதில் பெற்றோருக்கு மிக முக்கிய பங்கு உண்டு. ஆனால், குழந்தைகளின் கனவு என்பது விளையாட்டு போட்டிகளை சுற்றி உள்ளது என்றால் பெரும்பாலும் பெற்றோர் அதற்கு தடை போடவே முயற்சி செய்வார்கள்.
ஏனெனில் படித்தால் ஏதாவது ஒரு வகையில் முன்னேறி விடலாம் என்றும், விளையாட்டுப் போட்டி என்ற பெயரில் வாழ்க்கையில் தேக்கமடைந்து விடக் கூடாது என்றும் பெற்றோர் கருதுகின்றனர். விதிவிலக்காக சில பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் விளையாட்டுத் திறனை புரிந்து கொண்டு, அவர்களை வெற்றியை நோக்கி ஊக்குவிக்கின்றனர்.
இவ்வாறு தந்தையின் ஊக்கத்தால் இன்றைக்கு முன்னணி கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக உயர்ந்து நிற்பவர் தான் சுப்மன் கில். நடப்பாண்டில் ஐபிஎல் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியின் வீரர்களில் ஒருவர். விவசாயக் குடும்பத்தில் பிறந்தவரான சுப்மன் கில், எப்படி கிரிக்கெட் வீரராக உருவெடுத்தார், அவரது சாதனைகள் என்ன என்பது குறித்து இந்தக் கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
இளமையிலேயே கிரிக்கெட் மீது ஆர்வம்
பஞ்சாப் மாநிலம், ஜலதாபாத் அருகே உள்ள பசில்கா மாவட்டத்தில் கடந்த 1999ஆம் ஆண்டு செப்டம்பர் 8ஆம் தேதி பிறந்தவர் தான் சுப்மன் கில். இவரது தந்தை லக்வீந்தர் சிங் ஒரு விவசாயி ஆவார். லக்வீந்தருக்கு இளமைப் பருவத்தில் கிரிக்கெட் வீரராக வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால், அந்த ஆசை நிறைவேறவில்லை.
இந்நிலையில், தன்னுடைய மகன் சுப்மன் கில்லுக்கு சிறு வயதிலேயே கிரிக்கெட் மீது ஆர்வம் ஏற்படுவதை அவர் புரிந்து கொண்டார். தன்னைப் போலவே கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்டதால் மகனின் கனவுகளுக்கு அவர் எந்தவித தடையும் விதிக்கவில்லை. சொல்லப்போனால் முழு மனதோடு ஊக்கமளிக்க தொடங்கினார்.
கிரிக்கெட் மைதானமாக மாறிய விவசாய நிலம்
நகர்புறத்தில் செல்வ, செழிப்பான குடும்பத்தில் பிறந்திருந்தால் கிரிக்கெட் பயிற்சி மையத்திலேயே சேர்ந்திருக்கலாம். ஆனால், விவசாயக் குடும்பத்தில் பிறந்த சுப்மன் கில்லுக்கு அத்தகைய வாய்ப்பு கிடைக்க சாத்தியமில்லை. ஆனாலும், அவரது தந்தை லக்வீந்தர் சிங் சோர்ந்து விடவில்லை.
சொந்த விளை நிலத்தின் ஒரு பகுதியை மகனுக்காக கிரிக்கெட் மைதானமாக மாற்றினார் அவர். பேட்டிங் மீது ஆர்வம் கொண்ட மகனுக்கு பந்து வீச ஆள் வேண்டுமே? தோட்டத்தில் கூலி வேலைக்கு வருபவர்களையே பந்து வீச்சாளர்களாக மாற்றினார். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் சுப்மன் கில்-ஐ அவுட் ஆக்குபவர்களுக்கு 100 ரூபாய் பரிசுத்தொகை வழங்குவாராம்.
இதைத்தொடர்ந்து, மகனின் கிரிக்கெட் சிறகுகள் பெரிய அளவுக்கு விரிவடையக் காத்திருக்கிறது என்பதை லக்வீந்தர் புரிந்து கொண்டார். மொஹாலி கிரிக்கெட் ஸ்டேடியம் அருகே வீடு வாடகைக்கு எடுத்து குடிபெயர்ந்தார். இது மட்டுமல்லாமல் பெரு முயற்சி செய்து மகனை கிரிக்கெட் பயிற்சி மையத்தில் சேர்த்து விட்டார்.
உள்ளூர் அணிகளில் விளையாட்டு
பஞ்சாப் மாநிலத்தில் 16 வயதுக்கு உட்பட்டோருக்கான மாவட்ட அளவிலான கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிகளில் சுப்மன் கில் விளையாடத் தொடங்கினார். 2016 – 17 காலகட்டத்தில் பஞ்சாப் அணியின் சார்பில் விஜய் ஹசாரே டிராஃபி போட்டியில் கலந்து கொண்டார். 2017-18 காலகட்டத்தில் பஞ்சாப் பணிக்காக ரஞ்சி கோப்பை போட்டிகளில் விளையாடினார். பெரும்பாலும் போட்டிகளில் அதிக ரன் எடுத்து சாதிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.
ஐபிஎல் போட்டி
2018ஆம் ஆண்டு, ஐபிஎல் போட்டிகளுக்கான ஏலம் நடைபெற்றபோது, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ரூ.1.8 கோடி என்ற மதிப்பில் ஏலம் எடுக்கப்பட்டார் சுப்மன் கில். கொல்கத்தா அணிக்காக இதே ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் விளையாடினார். தொடர்ந்து அதே அணிக்காக விளையாடி வந்த இவர், 2022ஆம் ஆண்டில் அந்த அணியில் இருந்து விலகி, புதிதாக உதயமான குஜராத் டைட்டன்ஸ் அணியில் இணைந்தார். அந்த அணி சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.
சர்வதேசப் போட்டிகள்
2017ஆம் ஆண்டில் இங்கிலாந்துக்கு எதிரான 19 வயதுக்கு உட்பட்டோர் விளையாடிய இந்திய அணியில் சுப்மன் கில் இடம்பெற்றார். இதைத்தொடர்ந்து 2018ஆம் ஆண்டில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியில் விளையாடினார். இந்த தொடரில் மொத்தம் 372 ரன்களை எடுத்த அவர், சிறந்த வீரர் என்ற பட்டத்தை தட்டிச் சென்றார்.
2019ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி, முதன் முதலில் இந்திய அணி சார்பில் நியூஸிலாந்துக்கு எதிரான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடினார். இதே ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், இந்திய ஏ அணி சார்பில் மேற்கிந்திய தீவுகள் ஏ அணிக்கு எதிரான போட்டியில் விளையாடிய அவர் இரட்டை சதம் அடித்தார்.
2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதன் முதலாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சுப்மன் கில் விளையாடினார். 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22ஆம் தேதி, ஜிம்பாப்பே அணிக்கு எதிரான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதன் முதலாக சதம் அடித்தார். இளம் வயதிலேயே இந்திய அணி, ஐபிஎல் அணி என பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் விளையாடத் தொடங்கிவிட்ட சுப்மன் கில்லுக்கு, இன்னும் பெரும் சாதனைகளை படைப்பதற்கு தேவையான வயது, திறமை எல்லாமே இருக்கிறது.