இளம் வயதிலேயே ஐ.நா வரை சென்று அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் தலைவர் சசி தரூர்!
தூதர், எழுத்தாளர், சர்வதேச சிவில் சர்வன்ட், அரசியல் வாதி என பன்முகத்திறனோடு வலம் வரும் சசி தரூரின் அரசியல் பயணம் மற்றும் அவருடைய வாழ்க்கை குறித்த சில சுவாரஸ்சிய பதிவுகள் குறித்த ஓர் பார்வை…
ஆரம்ப கால வாழ்க்கை:
கேரளத்தை பூர்வீகமாக கொண்டிருந்தாலும் சந்திரன் தரூர் மற்றும் லில்லி தரூர் தம்பினருக்கு கடந்த 1956 ஆம் ஆண்டு லண்டனில் பிறந்தார் சசி தரூர். டெல்லி செயின்ட் ஸ்டீஃபன்ஸ் கல்லூரியில் பட்டப்படிப்பும், அமெரிக்காவின் டஃப்ட்ஸ் பல்கலையில் சர்வதேச விவகாரங்கள் துறையில் மேல்படிப்பையும் முடித்த இவர், அந்த காலகட்டத்தில் 22 வயதில் இந்தத் துறையில் மேல்படிப்பை முடித்த இளம் நபராக அனைவரிடம் அறியப்பட்டார். படிப்பதில் ஆர்வம் காட்டுவதோடு எழுதுவதிலும் திறமையோடு இருந்த சசி தரூர், 10 வயதில் இருந்தே பல புத்தகங்களை எழுதத் தொடங்கியுள்ளார்.
தன்னுடைய இளம் வயதில் 1978ல் இ.நா அவையில் சேர்ந்த அவர், 2007 ஆம் ஆண்டு வரை சேவையாற்றினார். ஐ.நாவில் உதவிச்செயலாளர் பதவியில் மக்கள் தகவல் தொடர்புப் பணியைக் கவனித்த இவர், 2006 ஆம் ஆண்டில் ஐ.நாவில் பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட்டார். இதற்காக ஐ.நா பணியில் இருந்து விலகி சசி தரூக்கு இந்தியா ஆதரவு அளித்தாலும், போதிய ஆதரவு இல்லாததால் இந்த போட்டியில் வெற்றிப் பெற முடியவில்லை. இதிலிருந்து தன்னுடைய அரசியல் பயணத்தைத் தொடங்கினார் சசி தரூர்.
அரசியல் பயணம்:
இளம் வயதில் ஐ.நா பதவிக்குப் பின்னர் பல்வேறு வெளியீடுகளில் தொடர்ச்சியாக எழுதி வந்த நிலையில், இவரது சிந்தனைகள் அனைத்தும் காங்கிரஸ் கட்சியோடு ஒத்துப்போனதால், காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். கட்சியில் சேர்ந்தவுடனே சோனிய காந்தி பரிந்துரையின் பேரில், 2009ல் 15 வது லோக் சபா தேர்தலில் திருவனந்தபுரம் தொகுதியிலிருந்து போட்டியிட்டார் சசி தரூர். முதல் தேர்தல் என்ற அச்சமும் இன்றியும், தன்னிடம் இயல்பாகவே உள்ள பேசும் திறன் காரணமாக வெற்றி பெற்றார். இதனை தொடர்ந்து வெளியுறவுத்துறை இணை அமைச்சராக நியமிக்கப்பட்டார். பின்னர் 2012 மற்றும் 2014 என தொடர்ந்து மூன்று முறை திருவனந்தபுரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த வெற்றியைத் தொடர்ந்து மனித வளத்துறை இணை அமைச்சர் மற்றம் வர்த்தகத்துறை கமிட்டி உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
காங்கிரஸ் கட்சியில் தனக்கென ஒர் அங்கீகாரத்தைப் பெற்ற இவர், தன்னுடைய கருத்துகள் மற்றும் நடவடிக்கைகள் மூலம் எப்போதும் தனித்துவமாகத் தெரியக்கூடியவர். குறிப்பாக யாரிடம் பேசினாலும் முன்பு கேட்டறிந்திராத ஆங்கில வார்த்தைகளைக் கூறி அனைவரையும் ஆச்சரிப்படுத்தும் வல்லமைக் கொண்டவர் தான் சசி தரூர். கட்சியில் தனக்கென ஓர் அங்கீகாரத்தைப் பெற்ற இவர் எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பதோடு அனைவரையும் செயல்பாடுகளால் ஈர்க்கக்கூடியவர்.
குறிப்பாக காங்கிரஸ் கட்சி கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் நாடாளுமன்ற மற்றும் மாநிலத் தேர்தல்களில் தொடர்ச்சியாகத் தோல்வியைச் சந்தித்து வருவதால், 22 ஆண்டுகளுக்குப் பிறகு கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க முடிவெடுக்கப்பட்டு தேர்தல் நடைபெற்றது. இதில் காந்தி குடும்பத்திலிருந்து யாரும் போட்டியிடாத நிலையில், சசி தரூர் மற்றும் மல்லிகார்ஜுன கார்கே போட்டியிட்டனர். இத்தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் இருந்த சசி தரூர் தோல்வியை சந்தித்தார்.
திருமண வாழ்க்கை..
வெளியுறவு துறை இணையமைச்சராக்கப்பட்ட இவர், தன்னுடைய தோழியுமான சுனந்தா புஷ்கரைத் திருமணம் செய்துக்கொண்டார். இதுக்குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தாலும் இவர் கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் தான் 2014 ல் மர்மமான முறையில் சுனந்தா புஷ்கர் உயிரிழந்ததும் சசி தரூர் மீது எதிர்மறையான கவனம் திரும்பியதோடு, தற்கொலைக்குத் தூண்டியதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது. நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த நிலையில் போதிய குற்றச்சாட்டுகள் இல்லாததால் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
சசி தரூர் பற்றிய சுவாரஸ்சிய தகவல்கள்…
அரசியல் தலைவராக மக்களிடம் அறியப்பட்ட இவர், மற்றவர்களைப் போன்று எவ்வித அகங்காரம் அற்றவர். குறிப்பாக உலக தலைவர்கள், கார்ப்பரேட் நிறுவன முதலாளிகள் என ஆளுமைப்படைத்த தலைவர்களுடன் எப்படி பேசுவாரோ? அதேப் போன்று தான் கட்சியின் அடிமட்டத் தொண்டர்களுடன் பேசும் திறன் பெற்றவர் தான் சசி தரூர்.
அரசியலில் காட்டும் ஆர்வத்தை விட புத்தகம் எழுதுவதிலும் ஆர்வம் கொண்டவர் சசி தரூர். இந்திய தொடர்புடைய வரலாறு, கலாச்சாரம், வெளியுறவுக் கொள்கை போன்ற 19 புத்தகங்களை எழுதியிருக்கிறார். நியூயார்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட், கார்டின் போன்ற பல்வேறு வெளிநாட்டு நாளிதழ்களிலும் கட்டுரையாளராக தமது திறனை வெளிப்படுத்தி வருகிறார் சசி தரூர். நியூஸ் வீக் இன்டர்நேஷனல் இதழுக்கு கான்ட்ரிபியூட்டிங் எடிட்டராகப் பணியாற்றியுள்ளார். இதோடு பார்ப்பதற்கு அரசியல்வாதி போன்று இல்லை பாலிவுட் ஆக்டர் போன்று உள்ளவர் என்ற பெயரும் இவருக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.