தனித்துவத்துமான கதை களத்துடன் வலம் வரும் சமுத்திரக்கனியின் சுவாரஸ்யமான திரை வாழ்க்கை பயணம்!
தொலைக்காட்சி சீரியலில் வாழ்க்கையை தொடங்கி சினிமா துறையில் இயக்குனர், நடிகர், குணச்சித்திர நடிகர் என பல்வேறு கதாபாத்திரத்தில் தனக்கே உரிய பாணியில் நடித்து வெற்றி வாகை சூடிவருகிறார் சமுத்திரக்கனி.
தமிழ் சினிமாவில் கால்பதித்த நாள் முதல் தற்போது வரை தனக்கே உரிய பாணியை சற்றும் மாற்றாமல் இயக்கியும், நடித்தும் வருகிறார் சமுத்திரக்கனி. இவருடைய தனித்துவமான கதைக்களத்தில் வரக்கூடிய திரைப்படங்களை பார்ப்பதற்கே தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இப்படி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துவரும் இயக்குநரும், நடிகருமான சமுத்திரக்கனியை திரையுலகிற்கு அறிமுகம் செய்தது நம்
கே. பாலச்சந்திரர் தான்… எப்படி தொடங்கியது இவரின் திரையுலகப் பயணம்..? என்னென்ன விஷயங்களையெல்லாம் கடந்து வந்தார்? என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்வோம்…
சமுத்திரக்கனியின் திரையுலகப் பயணம் :
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தைச் சேரந்த சமுத்திரக்கனி, சினிமா வாழ்க்கையில் அடியெடுத்து வைப்பதற்கு முன்னதாக தொலைக்காட்சி சீரியல்களில் தன்னுடையப் பயணத்தைத் தொடங்கினார். பாலச்சந்தர் இயக்கிய ஜன்னல், சில நிஜங்கள் சில நியாயங்கள், பொதிகை டிவியில் ஒளிப்பரப்பான கடவுளுக்கு கோபம் வந்தது முதல் ராஜ்டிவியில் ஒளிப்பரப்பான மர்ம தேசம், ரமணி Vs ரமணி பார்ட் 2 போன்ற டிவி சீரியல்களில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்தார் சமுத்திரக்கனி.
இதனைத்தொடர்ந்து கே. பாலச்சந்தர் இயக்கத்தில் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான பார்த்தாலே பரவசம் படத்தில் நடிகர் விவேக்கிடம் இடுப்பு வலிக்கு சிகிச்சை பெற வருவது போன்ற சிறிய காட்சிகளில் தோன்றினார். பின்னர் தமிழில் 2003 ஆம் ஆண்டு உன்னை சரணடைந்தேன் திரைப்படத்தை இயக்கியதோடு திரைப்படத்திற்காக தமிழக அரசின் சிறந்த கதையாசிரியருக்கான விருதையும் பெற்றார்.
பின்னர் 2004-ம் ஆண்டு நடிகர் விஜயகாந்த் நடித்த நெறஞ்ச மனசு திரைப்படத்திலும் கதையாசிரியராக பணியாற்றியுள்ளார். தொடர்ந்து 2009-ம் ஆண்டு நாடோடிகள் திரைப்படத்தினை இயக்கியதற்காக ரபிலிம்பேர்-ன் சிறந்த இயக்குனர் மற்றும் விஜய் தொலைக்காட்சியில் சிறந்த இயக்குனர், மற்றும் சிறந்த கதை, திரைக்கதை எழுத்தாளருகான விருதுகளில் பரிந்துரைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர் இத்திரைப்படத்தினை கடந்த 2010-ம் ஆண்டு “ஷம்போ சிவ ஷன்போ“ என்று தெலுங்கில் இவரே ரீமேக் செய்து தெலுங்கு திரைத்துறையில் அறிமுகமானார். கடந்த 2011-ம் ஆண்டு இவர் இயக்கிய போராளி திரைப்படத்தினை கன்னடத்தில் யாரே கூகடலி என்ற தலைப்பில் ரீமேக் செய்துள்ளார். இப்படி தமிழ் மட்டுமில்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் இயக்குநராக பயணித்த இவர், அடுத்தப்படியாக வில்லன் கதாபாத்திரத்தில் சுப்ரமணியம் படத்திலிருந்து நடிக்க ஆரம்பித்தார். அதன்பிறகு சமூகத்திற்கு நல்ல கருத்துகளையும் நடைமுறையில் உள்ள விஷயங்களை வெளிப்படுத்தும் விதமாக ஈசன், சாட்டை, நீர்ப்பறவை, வேலையில்லா பட்டதாரி போன்ற பல்வேறு படங்களில் நடித்தார் சமுத்திரக்கனி.
மேலும் தன்னுடைய திரைப்பயணத்தில் பல வெற்றிகளைக்குவித்த சமுத்திரகனி தனுஷின மாறன், சிவகார்த்திகேயனின் டான். ஐயப்பனும் கோஷியும் படத்தின் தெலுங்கு ரீமேக்கான பிம்லா நாயக் மகேஷ்பாபுவின் சர்க்காரு வாரி பாட்டா மற்றும் அந்தாதுன் படத்தின் தமிழ் ரீமேக்காக பிரசாந்த் நடித்துள்ள அந்தகன் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசனின் இந்தியன் 2 உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இதோடு சமீபத்தில் பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன், கோல்டன் ரேஷியா ஃபிலிம்ஸ், லிட்டில் ரெட் கார் ஃபிலிம்ஸ் மற்றும் ஜெட்டி புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்து வழங்கிய ரைட்டர் திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக தன்னுடைய எதார்த்த நடிப்பில் சிறந்து நடித்திருப்பார்.
இவ்வாறு தன்னுடைய தோற்றத்திற்கு ஏற்ற கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடிப்பதில் வல்லமைப்பெற்ற சமுத்திரக்கனி,தமிழில் சென்டிமென்டான படங்களுக்கு தந்தையாக நடிப்பதில் சிறந்தவர் என்ற பெற்ற பெயரைப்பெற்றுள்ளார். டான் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு அப்பா,வேலையில்லா பட்டதாரியில் தனுஷிக்கு அப்பா, அப்பா திரைப்படத்தில் நேர்த்தியான மற்றும் முன் உதாரணமான தந்தை என பல படங்களில் முத்திரை பதித்த பெருமைக்குரியவராக விளங்கி வருகிறார் நாயகன் சமுத்திரகனி. இன்னும் பல வெற்றிப்படங்களை இவருடைய திரை வாழ்க்கை பயணத்தில் மேற்கொள்வார் என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை…