Saina Nehwal (சாய்னா நேவால்)

    இளம் பெண்களுக்கு உத்வேகம்..பேட்மிட்டனில் சாதனைகளை அள்ளிக்குவிக்கும் இந்திய பெண் சாய்னா நேவால்!

    இந்தியாவில் பேட்மிட்டன் விளையாட்டில் பெண்களும் பெரிய அளவில் சாதிக்க முடியும் என்று உணர்த்தியோடு, பல இளம் பெண்களுக்கு உத்வேகத்தை அளிக்கும் வீர பெண்ணாக வலம் வருகிறார் சாய்னா நேவால்…

    விடாமுயற்சியும், ஆர்வமும், தன்னம்பிக்கையும் இருந்தால் எந்த துறையிலும் பெண்கள் சாதித்துக் காட்ட முடியும் என்பதை நிரூபித்துள்ளதோடு, உலக அளவில் பேட்மிட்டன் விளையாட்டில் சாதித்துக்காட்டிய வீரர்களின் ஒருவராக விளங்குகிறார் சாய்னா நேவால். தன்னுடைய எட்டு வயதில் பேட்மின்டன் ராக்கெட்டைக் கையில் எடுத்த சாய்னா, தன்னுடைய பெற்றோர்கள் ஒத்துழைப்பின் பேரில் இந்த உயரத்தை எப்படி அடைந்தார்? என்னென்ன தடைகளுடன் சாதனைப் பெண்ணாக வலம் வந்தார் என்பதை பற்றி இங்கே அறிந்துக் கொள்வோம்.

    இளமைப்பருவம்:

    ஹரியானாவில் ஹிஸார் பகுதியில் 1990 மார்ச் 17 ல் ஹர்விர் சிங் – உஷா ராணி தம்பதியினருக்கு மகளாகப் பிறந்தார் சாய்னா. அப்பகுதியில் உள்ள சௌத்ரி சரண்சிங் ஹரியானா வேளாண் பல்பகலைக்கழகத்தில் இருந்த பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். இவரது தாய் உஷா ராண மாநில அளவல் பேட்மின்டன் விளையாடுவதை சிறு வயதில் இருந்தே பார்த்து வந்ததால் இந்த விளையாட்டின் மீது அதிக ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. எட்டு வயதில் பேட்மின்டன் விளையாட ஆரம்பித்தார். இந்நிலையில் தான் இவரது குடும்பம் ஹரியானாவிலிருந்து ஹைதாபாத்திற்கு குடி பெயர்ந்தது. அங்கு பிளஸ் டூ படிப்பை முடித்த இவர், எப்படியாவது பேட்மின்டன் துறையில் இதுவரை யாரும் சாதிக்காததை தான் சாதித்துக்காட்ட வேண்டும் என்ற எண்ணத்தோடு இதற்கான பயிற்சிகளை கடுமையாக எடுத்துக் கொண்டார்.

    குறிப்பாக ஹைதராபாத்தில் இருக்கும் Pullela Gopichand badminton academy ல் பயிற்சியில் சேர்ந்தார். இங்கு துரோணாச்சாரியார் விருது பெற்ற பயிற்சியாளர் எஸ்.எம். ஆரிஃப் அவருக்குத் தொடக்க காலங்களில் பயிற்சியை அளித்து தான் இவரது பேட்மின்டன் கேரியரில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது. விளையாட்டின் நுணுக்கங்களை நேர்த்தியாக கற்றுக்கொண்டார்.

    பேட்மின்டன் போட்டிகளில் களமிறங்கிய சாய்னா நேவால்:

    கடுமையான பயிற்சி, விடாமுயற்சி, தன்னம்பிக்கையுடன் கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் தேசிய அளவிலான போட்டிகளில் விளையாடத் தொடங்கினார். தொடக்கத்திலேயே 2004 மற்றும் 2005ல் தேசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் பட்டத்தைப் பெற்றார். ஆரம்பமே வெற்றிக்கு வித்திட்டதால் தொடர்ந்து பல போட்டிகளில் தன்னம்பிக்கையுடன் களம் இறங்கினார்.

    2006 ல் இவர் பெற்ற அன்டர் 19 சாம்பியன் பட்டம் மிகப்பெரிய சப்போர்ட் மற்றும் பூஸ்டாக அமைந்தது. 2009 ல் தனது முதல் சூப்பர் சீரிஸ் பட்டத்தை வென்ற அவர், 2008 லண்டனில் ஒலிம்பிக் காலிறுதி வரை முன்னேறி அசத்தினார். ஒலிம்பிக்கில் காலிறுதி வரை முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை தன் வசமாக்கிய இவருக்கு வெற்றி ஒன்றே இலக்காக அமைந்தது. எப்படியாவது சர்வதேச அளவில் யாரும் எட்டாத இலக்கை அடைய வேண்டும் என்பதற்காக முயற்சிகளை மட்டும் கையில் எடுக்கத் தொடங்கினார்.

    சாய்னாவில் தீவிர முயற்சிக்கு கிடைத்த பலன் தான், கடந்த 2010 ல் டெல்லியில் நடைபெற்ற காமென்வெல்த் விளையாட்டுப் போட்டியில் மலேசியாவின் wong mew choo வை வீழ்த்தி தங்கம் வென்றார். பின்னர் 2012 ல் லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனைப் படைத்தார்.

    பேட்மின்டனில் மதிப்புமிக்க தொடர்களில் ஒன்றாகக் கருதப்படும் சூப்பர் சீரிஸ் டைட்டிலை வென்ற முதல் இந்தியர் சாய்னா என்ற பெருமையோடு 2015 ல் நம்பர் ஒன் வீராங்கனையாக உயர்ந்தார். தந்தை ஹர்வீர் சிங் மற்றும் தாய் உஷாவின் பங்களிப்பு மற்றும் சாய்னாவில் விடாமுயற்சியும் தான் 10 சூப்பர் சீரிஸ் டைட்டில்கள் உள்பட 24 சர்வதேச சாம்பியன் பட்டங்களை பெறவும், குடியரசுத் தலைவர் கையில் விருதுகளையும் வாங்கவும் உறுதுணையாக இருந்தது.

    கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாமல், தன்னுடைய இலக்கை அடைய வேண்டும் என்று அசால்ட்டாக விளையாடியதால் தான், இந்திய அரசின் உயரிய விருதான பத்ம ஸ்ரீ, பத்ம விபூசன் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் ராஜீவ் கேல் ரத்னா உள்ளிட்ட விருதுகளுக்கு சொந்தக்காரராக வலம் வருகிறார். இளம் வயதிலேயே ஒரு பெண்ணாக இருந்து சாதித்துக் காட்டிய சாய்னா நேவால், குழந்தைகள், இளம் பெண்கள் என அனைவருக்கும் முன் உதாரணமாக விளங்கி வருகிறார். தற்போது பேட்மின்டன் இந்தளவிற்கு பிரபலமாவதற்கு சாய்னா ஒரு காரணம் என்றே சொல்லாம்.

    திருமண வாழ்க்கை:

    தன்னுடைய பேட்மின்டன் கேரியரை ஒருபோதும் யாருக்காகவும் விட்டுக் கொடுக்கக் கூடாது என்றிருந்த சாய்னா, தன்னுடன் விளையாடும் சக வீரராக காஷ்யப்பை கடந்த 2018 ல் திருமணம் செய்துக் கொண்டார். குடும்ப வாழ்க்கை மட்டும் சப்போர்ட்டாக இல்லாமல் தனக்கு பிடித்த விளையாட்டில் பெரிய அளவில் சாதிக்க நினைக்கு சாய்னாவுக்கு கோச்சராகவும் இருந்தார் கணவர் காஷ்யப். இவர் கீழ் பெற்ற பயிற்சி தான், ஆசிய கோப்பையில் வெண்கல பதக்கம் பெறுவதற்கு உறுதுணையாக அமைந்தது.

    சாய்னா நேவால் கதை வெள்ளித்திரையில்…

    தன்னுடைய இளம் வயதில் பல தடைகளைத் தாண்டி சாதிக்க வேண்டும் என்ற நினைப்போடு இருந்த சாய்னாவின் சுயசரிதை Playing to win: my life on and off court என்கிய பெயரில் கடந்த 2012 ல் வெளியானது. இதே போல் சாய்னா என்கிற பெயரில் இவரது வாழ்க்கை வரலாறு பாலிவுட்டில் படமாகவும் ரிலீஸாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    எட்டு வயதில் எடுத்த முயற்சியை இதுவரை யாருக்காகவும் நிறுத்திக் கொள்ளவில்லை சாய்னா..இளம் வீரர், வீராங்கனைகளை ஊக்குவிக்கும் நோக்கத்தில் இவரது சொந்த ஊரான ஹரியானாவில் பேட்மின்டன் அகாடமி திட்டத்தில் இணைந்து பணியாற்றி வருகிறார். நிச்சயம் பெண்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு உத்வேகத்தையும், தன்னம்பிக்கையும் அளிக்கும் வீர பெண்மணியாகவே உள்ளார் பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால் என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை.