சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அதிக ஸ்கோர் எடுத்த சாதனைக்கு சொந்தக்காரர் ரோஹித் சர்மா!
கிரிக்கெட்டில் எத்தனையோ நாடுகளின் அணிகள், எத்தனையோ வீரர்கள் இதற்கு முன்பு விளையாடியுள்ளனர், இப்போது விளையாடிக் கொண்டிருக்கின்றனர் மற்றும் இனி வரும் காலங்களில் விளையாட இருக்கின்றனர்.
கிரிக்கெட் போட்டிகளுக்குள் நுழைந்துவிட்ட எல்லா வீரர்களும் மக்களின் மனதில் நிலைத்து நிற்பதில்லை. தனக்கான தனி ஸ்டைல் மற்றும் சிறப்புமிக்க சாதனைகளை எட்டிய வீரர்களைத் தான் உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் நினைவில் வைத்திருப்பார்கள்.
அந்த வகையில், கிரிக்கெட்டில் தனக்கான சிகரத்தை அடைந்து, இந்தியா மட்டுமல்லாமல், உலகெங்கிலும் உள்ள ரசிகர்களின் மனதில் நீங்காத இடம்பிடித்திருப்பவர் தான் ரோஹித் சர்மா. தற்போது இந்திய அணியின் கேப்டனாகவும் இருக்கிறார்.
பொதுவாக, ஐபிஎல் கிரிக்கெட் அணிகளில் பங்கேற்கும் கிரிக்கெட் வீரர்கள், வேறொரு மாநிலத்தை பிரதிபலிக்கும் அணிகளில் பங்கேற்று விளையாடுவது வழக்கம். ஆனால், ஐபிஎல் போட்டிகளிலும் கூட, தங்களின் மகாராஷ்டிர மாநிலம் சார்ந்த மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருபவர் ரோஹித் சர்மா.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இவரே கேப்டன். இவரது தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 முறை கோப்பையை வென்றுள்ளது. ரைட் ஹேண்ட் பேட்ஸ்மேன் – ஆக கிரிக்கெட்டில் வலம் வரும் ரோஹித் சர்மா, எப்போதாவது பந்து வீசுவதும் உண்டு.
அதிக ஸ்கோர், 3 முறை டபுள் சென்ச்சூரி
கிரிக்கெட்டில் உலகில், தான் தனித்துவமான வீரர் என்று ரோஹித் சர்மா நிரூபித்த தருணம் ஏராளம். கடந்த 2014ஆம் ஆண்டில், கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் இலங்கைக்கு எதிராக நடைபெற்ற சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 264 ரன்களை குவித்து அபார சாதனை புரிந்தார். கிரிக்கெட்டில் இன்றைய நாள் வரையிலும் ஒரு வீரர் எடுத்துள்ள அதிகப்பட்ச ஸ்கோர் இதுவாகும்.
இது மட்டுமல்லாமல், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 3 முறை டபுள் சென்சூரிகளை அவர் அடித்துள்ளார். கடந்த 2020ஆம் ஆண்டின் சிறந்த ஒருநாள் போட்டி வீரர் என்ற பெருமையை அடைந்தார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இந்த அங்கீகாரத்தை வழங்கியது.
உலக கோப்பை போட்டியில் சாதனை
கடந்த 2019ஆம் ஆண்டில் சர்வதேச உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்றபோது, 5 போட்டிகளில் சென்ச்சூரி அடித்த ஒரே வீரர் என்ற பெருமையை தட்டிச் சென்றார் ரோஹித் சர்மா.
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் மட்டுமல்லாமல் டெஸ்ட் போட்டிகளிலும் ரோஹித் சர்மா சாதனை படைக்க தவறவில்லை. 2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தென் ஆப்ரிக்காவிற்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இரட்டை சென்ச்சூரி அடித்தார். டெஸ்ட் போட்டியில் ஓப்பனிங் பேட்ஸ்மேன் -ஆக களமிறங்கி இந்த சாதனையை செய்த முதல் வீரர் அவர் தான்.
இதே டெஸ்ட் தொடரில், மிக அதிகபட்ச சிக்ஸர் மழைகளை பொழிந்தார் ரோஹித் சர்மா. இதன் மூலமாக, டெஸ்ட் தொடர் ஒன்றில் அதிக சிக்ஸ் அடித்த சிம்ரோன் ஹெட்மெயர்ஸ் சாதனையை அவர் முறியடித்தார்.
இந்திய அரசின் விருதுகள்
ரோஹித் சர்மாவின் கிரிக்கெட் சேவையை பாராட்டி, மத்திய அரசு கடந்த 2015ஆம் ஆண்டில் இவருக்கு அர்ஜுனா விருது வழங்கி கௌரவித்தது. அதேபோல, கடந்த 2020ஆம் ஆண்டில் தயான்சந்த் கேல் ரத்னா விருதையும் மத்திய அரசு வழங்கியது.
விலங்கு நல ஆர்வலர்
தொழில்முறை கிரிக்கெட் வீரரான ரோஹித் சர்மாவுக்கு விலங்குகள் மீது மிகுந்த ஆர்வம் உண்டு. குறிப்பாக, விலங்குகளின் நலனுக்காக செயல்படும் சர்வதேச அமைப்பான பீட்டாவில் அவர் உறுப்பினராக இருக்கிறார். ஆதரவின்றி தெருவில் சுற்றும் நாய்கள் மற்றும் பூனைகளின் நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற பிரசாரத்தை அவர் முன்னெடுத்தார்.
வாழ்க்கை குறிப்பு
கடந்த 1987ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலத்தின், நாக்பூர் அருகேயுள்ள பன்சோத் என்ற ஊரில் பிறந்தவர் ரோஹித் சர்மா. இவரது பெற்றோர் குருநாத் சர்மா மற்றும் பூர்ணிமா சர்மா ஆவர். இவர்களது குடும்பம் மிகவும் ஏழ்மை நிலையில் இருந்த காரணத்தால் ரோஹித் சர்மா அவரது தாத்தா, பாட்டி வீட்டில் வளர்ந்தார்.
கடந்த 1999ஆம் ஆண்டில், தனது மாமாவின் உதவியுடன் கிரிக்கெட் பயிற்சி கிளப்பில் இணைந்தார். இதை தொடர்ந்து, உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளிலும், அதனை தொடர்ந்து ரஞ்சித் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் மும்பை அணியின் சார்பிலும் விளையாடி வந்தார். இந்நிலையில், கடந்த 2006ஆம் ஆண்டு முதன் முதலாக நியூஸிலாந்துக்கு எதிரான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சார்பில் விளையாடினார்.