HOME » REPUBLIC DAY

Republic Day

    குடியரசு தினம் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய முழு விவரங்கள்!

    இந்தியாவில் ஆண்டுதோறும் ஜனவரி 26ம் தேதி குடியரசு தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்திய அரசியலைப்புச் சட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்ட நாள் குடியரசு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 1950ம் ஆண்டு ஜனவரி 24ம் தேதி 308 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதலுடன் இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் எழுதப்பட்ட அரசியலமைப்பு கையெழுத்திடப்பட்டது செயல்பாட்டிற்கு வந்தது.

    ஆகஸ்ட் 15, 1947 அன்று இந்தியா பிரிட்டனிடம் இருந்து சுதந்திரம் அடைந்தது, ஆனால் அதன் முதல் மூன்று ஆண்டுகளுக்கு 1935ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட இந்திய காலனித்துவ அரசாங்கச் சட்டத்தின் மூலம் நாடு நிர்வகிக்கப்பட்டு வந்தது. ஆனால் இந்தியாவிற்கான தனி அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்க வேண்டுமென முடிவெடுக்கப்பட்டது. ஆகஸ்ட் 29 அன்று, சுதந்திர இந்தியாவுக்கான நிரந்தர அரசியலமைப்பை உருவாக்க ஒரு குழு உருவாக்கப்பட்டது. டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

    சுதந்திரம் அறிவிக்கப்பட்ட சிறிது காலத்திற்குப் பிறகு, மாகாண சபைகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசியல் நிர்ணய சபை, புதிதாக சுதந்திரம் பெற்ற தேசத்தை ஆளும் அரசியலமைப்பை உருவாக்கியது. சுமார் இரண்டு ஆண்டுகளாக இந்திய அரசியலமைப்பு சட்டம் வடிவமைக்கப்பட்டது. 1930 ஆம் ஆண்டில் இந்திய தேசிய காங்கிரஸால் பூர்ண ஸ்வராஜ் எனப்படும் சுதந்திரத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட விடுதலை நாளான ஜனவரி 26ம் தேதி குடியரசு தினமாக அங்கீகரிக்கப்பட்டது. சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு தலைமையிலான அமைச்சரவை முடிவு செய்தது. அதன்படி 1950ம் ஆண்டு முதல் இந்திய குடியரசு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

    இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர்:

    1950ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் இந்திய கவர்னர் ஜெனரல் ராஜகோபாலாச்சாரி, ஜனவரி 26ஆம் தேதி காலை 10.18 மணிக்கு இந்தியாவை ஜனநாயக குடியரசாக அறிவித்தார். அதன் பின்னர் ஆறு நிமிடங்கள் கழித்து இந்திய குடியரசின் முதல் குடியரசு தலைவராக ராஜேந்திர பிரசாத் பதவியேற்றார். தற்போது ராஷ்டிரபதி பவன் என அழைக்கப்படும், அப்போதைய அரசு மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெற்றது.

    இந்தியாவின் குடியரசு தினம் எவ்வாறு கொண்டாடப்படுகிறது?

    இந்திய குடியரசு தினத்தின் முக்கிய நிகழ்வாக ராஜ்பாத்தில் நடைபெறும் மிகப்பெரிய அணிவகுப்பு கருதப்படுகிறது. இதில் கலாச்சார, வரலாற்று மற்றும் இராணுவ காட்சிகள் அடங்கும். அணிவகுப்புக்கு முன்னதாக பிரதமர் அமர் ஜவான் ஜோதியில் உள்ள போர் நினைவுச் சின்னத்திற்கு மலர் வளையம் வைத்து, நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு மெளன அஞ்சலி செலுத்துவார்.

    அதன் பின்னர் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, ராணுவ வாகனங்களின் அணிவகுப்பு, கலச்சார நடன நிகழ்ச்சிகள், முப்படை வீரர்களின் வீரதிர செயல்கள் நடைபெறும். குடியரசு தினத்தன்று தேசிய விடுமுறை என்பதால், ஜனவரி 26ம் தேதி அன்று வணிக நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் ஆகியவற்றிற்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. அதேபோல் அன்றைய தினம் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் தேசிய கொடி ஏற்றுதல், அணிவகுப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

    குடியரசு தலைவர் மாளிகை அமைந்த ரெய்ஸ்னா ஹில் பகுதியில் இருந்து விழா நடைபெறும் ராஜ்பாத், இந்தியா கேட் வழியாக செங்கோட்டையில் அணிவகுப்பு முடிவடைகிறது.

    மாநிலங்களில் அந்தந்த மாநில ஆளுநர்கள் கொடியேற்றுவதுடன் காவலர் அணிவகுப்பையும், அரசுத்துறை அலங்கார வாகனங்களின் அணிவகுப்பையும், கலாச்சார நிகழ்ச்சியையும் பார்வைவையிடுகின்றனர். அதன் பின்னர் சிறந்த காவலர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.

    குடியரசு தினம் பற்றி யாரும் அறியாத உண்மைகள்:

    1) 1950 மற்றும் 1954க்கு இடையில், குடியரசு தின அணிவகுப்பு இர்வின் ஸ்டேடியம் (தற்போது தேசிய அரங்கம்), கிங்ஸ்வே, செங்கோட்டை மற்றும் ராம்லீலா மைதானங்களில் நடைபெற்றது.

    2) 1955ம் ஆண்டு முதல் ராஜ்பாத்தில் குடியரசு தின கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ராஜ்பாத் ஒரு காலத்தில் கிங்ஸ்வே என்று அழைக்கப்பட்டது, இந்தியாவின் அப்போதைய பேரரசர் ஜார்ஜ் V இன் நினைவாக இந்த சாலை சுதந்திரத்திற்குப் பிறகு ராஜ்பாத் என மறுபெயரிடப்பட்டது, இதற்கு ஹிந்தியில் ஹிந்தியில் கிங்ஸ் வே என அர்த்தம்.

    3) ஒவ்வொரு ஆண்டும், குடியரசு தின அணிவகுப்புக்கு ஒரு குறிப்பிட்ட நாட்டின் தலைவர் சிறப்பு விருந்தினராக அழைக்கப்படுகிறார். 1950 ஆம் ஆண்டு இந்திய குடியரசு தின விழாவில் முதன்மை விருந்தினராக இந்தோனேசியாவின் ஜனாதிபதி சுகர்னோ கலந்து கொண்டார்.

    4) இந்திய ஜனாதிபதியின் வருகைக்குப் பிறகு அணிவகுப்பு தொடங்குகிறது. குடியரசுத் தலைவரின் காவலர்கள் முதலில் தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தினர். தேசிய கீதம் இசைக்கப்படுகிறது, அதை தொடர்ந்து 21 துப்பாக்கி முழக்க வீர வணக்கம் செலுத்தப்படுகிறது.

    5) அணிவகுப்பில் பங்கேற்கும் ஒவ்வொரு இராணுவ உறுப்பினரும் நான்கு அடுக்கு விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். அதுமட்டுமின்றி, அவர்களின் ஆயுதங்களில் ஒரிஜினல் தோட்டாக்களை இல்லை என்பதை சோதனைகள் மூலம் உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும்.

    2022ம் ஆண்டு வெடித்த சர்ச்சை:

    நாட்டின் 73வது குடியரசு தினம் கடந்த ஜனவரி 26ம் தேதி அன்று கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தமிழக அரசின் அலங்கார ஊர்திக்கு மத்திய அரசு அனுமதி அளிக்காதது மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்தது. முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர்.

    தமிழகம் சார்பில் வீரத்தாய் வேலுநாச்சியார், மருது சகோதரர்கள், வ.உ.சிதம்பரனார், பாரதியார் உருவப் படங்களுடனான அலங்கார ஊர்தியின் மாதிரி அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் இதில் உள்ள தலைவர்கள் பற்றி யாருக்கும் தெரியாது எனக்கூறி ஊர்தியை அனுமதிக்க மத்திய அரசு அதிகாரிகள் அனுமதி மறுத்தனர். இதனையடுத்து சென்னையில் நடைபெற்ற குடியரசுத் தின விழாவில் அலங்கார ஊர்தி இடம் பெறும் என அறிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகம் முழுவதும் அலங்கார ஊர்தி வலம் வரும் என்றும் உத்தரவிட்டார். குடியரசுத் தினத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் வலம் வந்த அலங்கார ஊர்திக்கு மக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.