HOME » RAMZAN

Ramzan

    நோன்பிருந்து கொண்டாடப்படும் இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான ரம்ஜானின் மரபுகள் மற்றும் முக்கியத்துவம்!

    இஸ்லாமியர்களுக்கு இருக்கும் ஐம்பெரும் கடமைகளில் மிகவும் முக்கியமான ஒன்று ரமலான் நோன்பு. இஸ்லாத்தை பொறுத்த வரை ஆண்டுதோறும் வரும் மற்ற மாதங்களை காட்டிலும், ரமலான் பெருநாள் வரும் மாதமே சிறந்த மாதமாக கருதப்படுகிறது.

    உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்களால் அனுசரிக்கப்படும் நோன்பு மற்றும் தியாகத்தின் மாதமாக ரமலான் (ரம்ஜான்) கருதப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமிய நாட்காட்டியின் 9-வது மாதமும், இஸ்லாமிய கலாச்சாரத்தில் மிகவும் புனிதமான மாதமாக கருதப்படும் ரமலானின் அதிகாரப்பூர்வ முதல் நாளை குறிக்கும் புதிய பிறை நிலவு தெரியும் தருணத்தை உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருப்பார்கள்.

    புனித ரமலான் மாதம் என்பது அல்லாவை மேலும் நெருங்கும் மாதமாக, தீய சக்திகளாக கருதப்படும் சாத்தான்கள் விலகி ஓடும் மாதமாக, அதிக நன்மைகள் அதிகம் கிடைக்கும் மாதமாக கொண்டாடுகிறார்கள் இஸ்லாமியர்கள். எல்லாவற்றுக்கும் மேலாக இந்த மாதத்தில் தான் இஸ்லாத்தை பின்பற்றுவோருக்கு வாழ்வில் நன்மை, தீமைகளை பிரித்து கூறும் புனித நூலான திருக்குர்ஆன், இந்த பூவுலகிற்கு முதன் முதலில் அருளப்பட்டது என்று ரமலான் மாதத்தை தங்களின் மிகவும் புனிதமான மாதமாக கருதி கொண்டாடுகிறார்கள்.

    முக்கியத்துவமும், வரலாறும்:

    இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தை மிகவும் புனிதமான மாதமாக கருதுவதற்கும், மிகவும் மதிப்பதற்கும் ஒரு பெரிய காரணம் இருக்கிறது. மேலே நாம் சொன்னபடி இந்த மாதத்தில் தான் முகமது நபி அவர்களுக்கு இஸ்லாத்தின் புனித நூலான திருக்குர்ஆன் அருளப்பட்டது என்று நம்புகிறார்கள் இஸ்லாமியர்கள். வாழ்க்கை நெறிகள் மற்றும் படிப்பினைகளை உள்ளடக்கி மனிதகுலத்திற்கு வழிகாட்டும் புனித நூலக இருக்கும் குர்ஆன் முஹம்மது நபிக்கு அருளப்பட்ட அற்புதமான இரவு லைலத்துல் கத்ர் (Lailat al-Qadr) என்று அதாவது கண்ணியமிக்க இரவு என்று குறிப்பிடப்படுகிறது. இந்த ஓர் இரவு ஆயிரம் மாதங்களை விட சிறப்புத் தகுதி பெற்றுள்ளதாக திருக்குர்ஆன் கூறுகிறது.

    ரலான் மாதத்தில் சொர்க்கத்தின் வாயில்கள் திறந்திருக்கும் என்றும், பிசாசுகள் நரகத்தின் கதவுகளுக்குப் பின்னால் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருக்கும் என்பது இஸ்லாமியர்களின் நம்பிக்கை. ரமலான் மாதத்தில், உண்மையான பக்தியுடன் செய்யப்படும் பிரார்த்தனைகள் நிச்சயம் நிறைவேறும் என்பதும் இஸ்லாத்தை பின்பற்றும் கோடிக்கணக்கானோரின் நம்பிக்கை. ரமலான் மாத சிறப்பு வழிபாடுகள் பல வருட வழிபாட்டின் பலன்களை அளிக்கும். எனவே இந்த புனித மாதத்தில் இஸ்லாமியர்கள் புனித நோன்பை கடைப்பிடிக்கிறார்கள்.

    புனித நோன்பு:

    முதன்முதலில் ரமலான் மாதத்தில் தான் முகமது நபிக்கு புனித குர்ஆன் அருளப்பட்டது என்று இஸ்லாமியர்கள் நம்புவதால் இந்த புனித மாதத்தில் விடியற்காலை முதல் மாலை வரை தண்ணீர் கூட குடிக்காமல், எதுவும் சாப்பிடாமல், உமிழ்நீரை கூட விழுங்காமல் நோன்பு கடைபிடித்து அல்லாவிடம் பிரார்த்தனை செய்கிறார்கள். சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம் வரையிலான இந்த புனிதநோன்பு எதற்காக இஸ்லாமியர்கள் கடைபிடிக்கிறார்கள் என்றால் புனித ரமலான் மாதத்தில் முகமது நபியை கௌரவிக்கவும், தங்களுக்கு தாங்களே சுயக்கட்டுப்பாட்டை அடையவும் தான்.

    புனித நோன்பு மூலம் தங்கள் உடல் மற்றும் உள்ளங்களை தூய்மைப்படுத்தி கொண்டு, சுயமரியாதை மற்றும் ஒழுக்கத்தில் கவனம் செலுத்துகிறார்கள் இஸ்லாமியர்கள். அதிகாலை முதல், மாலை வரை உண்ணாமல், நீர் அருந்தாமல், பிற தீய பழக்கங்களில் ஈடுபடாமல் இருக்க வேண்டும் என்ற தத்துவதை புனித நோன்பு உணர்த்துகிறது. அல்லாவின் பெயரால் உணவு, பானங்கள் மற்றும் தீய பழக்கங்களை துறப்பது தங்களின் இறைவனான அல்லாவிடம் தங்களை நெருக்கமாக கொண்டு சேர்க்கிறது என்பது இஸ்லாமியர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

    ரமலான் மாதம் முழுவதும் அனைத்து நாட்களிலும் அதிகாலை முதல் மாலை வரை புனித நோன்பு இருக்கும் இஸ்லாமியர்கள் சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு இஸ்லாமியர்கள் இப்தாருக்காக ஒன்று கூடுகிறார்கள். இப்தார் (Iftar) என்பது ரமலான் நோன்பு நோற்கும் இஸ்லாமியர் மாலையில் நோன்பை முடித்துக் கொள்ளும் பொருட்டு உணவு உண்ணும் நிகழ்வை குறிக்கும் சொல் ஆகும். புனித நோன்பை முடித்து கொள்ளும் இஸ்லாமியர்கள் ஒன்றாகக் கூடி உணவை உண்பது வழக்கம்.

    இப்தார்:

    இஸ்லாமியர்கள் தங்கள்து நோன்பை முடிப்பதற்கு முதன் முதலாக ஈச்சம்பழத்தை உண்பது வழக்கம். இப்தார் நேரத்தில் பல வகை சிறப்பு உணவுகளை இஸ்லாமியர்கள் மிகுதியாக வாழும் பகுதிகளில் காண முடியும். தமிழம் மற்றும் கேரளத்தில் அரிசி மற்றும் கிராம்பு பட்டை போன்றவற்றால் செய்யப்படும் நோன்பு ஞ்சியை மக்கள் உட்கொள்வர்.

    ஈகை திருநாள்:

    ரமலான் மாதத்தில் நோன்பு இருந்து அந்த மாதத்தில் அமாவாசையை அடுத்து வர கூடிய மூன்றாம் பிறை வரக்கூடிய நாளில் ரமலான் பெருநாள் என்னும் ஈகை திருநாள் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். புவியியல் அமைப்புக்கு ஏற்ப ஒவ்வொரு நாட்டிலும் முதல்பிறை தோன்றுவதற்கேற்ப அந்நாடுகளில் ரம்ஜான் கொண்டாடப்படும். கிட்டதட்ட ஒரு மாதம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வரும் நீண்ட நோன்பு முடிவடைவதை ரம்ஜான் கொண்டாட்டம் குறிக்கிறது. ரமலான் மாதம் வெற்றிகரமாக நிறைவடைந்ததை குறிக்கும் வகையில், ஆடம்பரமான உணவுடன் ஒன்று கூடி முஸ்லிம்கள் இந்த பண்டிகையை வெகு சிறப்பாக கொண்டாடுகின்றனர்.

    இந்த நாளில் இஸ்லாமியர்கள் புதுத்துணி உடுத்தி, வகை வகையான உணவுகள் சமைத்து உண்பது, அதை ஏழை எளிய மக்கள் மற்றும் அக்கம்பக்கத்தினருக்கு கொடுப்பது, தேவைப்படுவோருக்கு உதவி, நண்பர்கள் மற்றும் உறவினர்களை வீட்டிற்கு வரவழைத்து உபசரிப்பது என உற்சாகமாக கொண்டாடுவார்கள்.