Rajnath Singh (ராஜ்நாத் சிங்)

    பேராசிரியராகப் பணியை ஆரம்பித்து பாதுகாப்புத்துறை அமைச்சராக உயர்ந்துள்ளார் ராஜ்நாத் சிங்!

    இயற்பியல் துறை பேராசிரியர், உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சர் மற்றும் உள்துறை அமைச்சர், பாதுகாப்புத் துறை அமைச்சர், பாஜகவின் விசுவாசி என பன்முகங்களைக் கொண்டவர் தான் ராஜ்நாத் சிங்.

    உத்தரப்பிரதேச மாநிலத்தில் எளிமையான விவசாயக் குடும்பத்தில் பிறந்திருந்தாலும் படிப்பின் மீதான ஆர்வத்தில் இயற்பியல் பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றார். இருந்தப்போதும் ஆர்.எஸ்.எஸ் மீதான ஈர்ப்பினால் தன்னை அதனுடன் இணைத்து கொண்டு தற்போது பாஜக அரசின் உள்துறை அமைச்சராக உயர்ந்துள்ள ராஜ்நாத் சிங்கின் அரசியல் பயணம் குறித்த ஓர் பார்வை….

    இளமைப் பருவம்:

    உத்தரப்பிரசேத மாநிலம் சந்தாளி மாவட்டத்தில் உள்ள பாபோரா கிராமத்தில் 1951 ஆம் ஆண்டு ஜுலை 10ல் ராம் பதன் சிங்- குஜராத்தி தேவி தம்பதியினருக்கு மகனாப் பிறந்தார். கிராமத்தில் பள்ளிப்படிப்பை முடித்த இவர், கோரக்பூர் பல்கலைக்கழகத்தில் பயின்று தேர்ச்சிப் பெற்று இயற்பியலில் முதுகலைப்பட்டம் பெற்றார். பின்னர் மிர்சாபூரில் இயற்பியில் விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்தார். தன்னுடைய படிப்பு மற்றும் தொழிலில் கவனம் செலுத்தினாலும் ராஜ்நாத் சிங் 1964 ஆம் ஆண்டு முதல் தனது 13 வயதில் இருந்தே ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங்கத்துடன் தொடர்பு கொண்டிருந்தார்.

    அரசியல் பயண துவக்கம்….

    இயற்பியல் பேராசிரியாக பணியாற்றிய வந்த இவர் ஆர்.எஸ்.எஸ் மீது கொண்ட ஆர்வத்தினால் தன்னை ஜனதா கட்சியில் இணைத்துக் கொண்டதோடு மிர்சாபூர் தொகுதியில் இருந்து ஜனதா கட்சி வேட்பாளராக 1977 ஆம் ஆண்டு சட்ட சபை தேர்தலில் போட்டியிட்டார். 1980 சட்டசபை தேர்தலில் பாஜக கட்சி வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர், 1985 நடந்த தேர்தலில் தோல்வி அடைந்தார். தோல்விகளைக் கண்டு ஒரு போதும் கலக்கம் கொள்ளாமல் மீண்டும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் போட்டியிட்டு கடந்த 1991 ல் வெற்றி பெற்றார். இந்த வெற்றியையடுத்து உ.பியில் கல்வி அமைச்சராகவும், பின்னர் மாநில முதல்வராகவும் பதவி வகித்தார்.

    இவர் கல்வி அமைச்சராக பணியாற்றி சமயத்தில் தான் வரலாற்றுப் புத்தகங்கள் பெருமளவில் திருத்தப்பட்டு வேத கால கணிதமும் புகுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. பின்னர் 1999ல் ராஜ்சபா மூலம் எம்.பியான இவர் வாஜ்பாய் அமைச்சரவையில் தரைவழிப் போக்குவரத்து அமைச்சராகவும், 2003ல் மத்திய வேளாண்துறை அமைச்சராகவும் பதவி வகித்தாார்.

    தன்னுடைய திறமையால் கட்சியின் நன்மதிப்பைப் பெற்றார் ராஜ் நாத் சிங். ஆனாலும் கடந்த 2009 ஆம் ஆண்டு பாரதீய ஜனதா கட்சி இரண்டாவது முறையாக தொடர்ந்து நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியை சந்தித்த காலத்தில் கட்சியின் தலைவராக ராஜ்நாத் சிங் இருந்திருக்கிறார். இதனால் இவரைத் தூக்கிவிட்டு கட்காரி தலைவரானார். இருந்தப்போதும் 2013 ஆம் ஆண்டு ஊழல் குற்றச்சாட்டுகளின் காரணமான நிதின் கட்காரி பதவி விலக வேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளானதையடுத்து மீண்டும் தலைவராகியுள்ளார் ராஜ்நாத் சிங்.

    கட்சியின் தனக்கென கோஷ்டி ஏதும் வைத்துக் கொள்ளாமலும், கட்சியின் அனைத்து கோஷ்டிகளின் தலைவர்களுடன் நல்லுறவை பேணுவதால், கட்சியின் நலன்களுக்காக அனைவரின் பேச்சைக் கேட்டு முடிவெடுப்பார் என்ற நினைப்பில் தான் மீண்டும் தேசிய தலைவராக ராஜ் நாத் சிங் நியமிக்கப்பட்டார் என்கிறது அரசியல் வட்டாரங்கள். 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாரதீய ஜனதா கட்சித் தலைமையிலான அரசு வெற்றிப் பெற்றதையடுத்து உள்துறை அமைச்சராகப் பணியாற்றினார் ராஜ்நாத் சிங். பின்னர் மீண்டும் 2019 ல் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற நிலையில், தற்போது பாதுகாப்புத் துறை அமைச்சராகப் பதவி வகித்து வருகிறார் ராஜ்நாத் சிங்.

    தற்போது பாதுகாப்புத்துறை அமைச்சராக பதவி வகித்து வரும் நிலையில், அவ்வப்போது ராணுவ வீரர்களை நேரில் சந்தித்து வரும் வழக்கத்தைக் கொண்டுள்ளார். மற்ற அமைச்சர்களைப் போல் எவ்வித சிக்கலிலும் சிக்காமல் தன்னுடைய பணியை நேர்த்தியாக செய்து வரும் திறன் கொணடவர் தான் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங். அரசியிலில் மட்டுமில்லாமல் தியாகிகளின் குடும்ப நலனுக்காக பாலிவுட் நடிகர் அக்சய் குமாருடன் இணைந்து பாரத் கே வீர் இணையதளத்தைத் தொடங்கி நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்திருந்தாலும் கட்சியில் சிறு சிறு பதவிகளைப் பெற்று தற்போது பாதுகாப்புத்துறை அமைச்சராக உயர்ந்துள்ள பெருமைக்குரியவராக உள்ளார் ராஜ்நாத் சிங்.