தமிழ் சினிமாவின் மந்திரச்சொல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!
சூப்பர் ஸ்டார் என்று தமிழ் மக்களால் அன்போடு அழைக்கப்படும் ரஜினிகாந்த் மக்கள் மனதில் என்றென்றும் நிலைத்து நிற்கும் நடிகர் ஆவார். குறிப்பாக, 1970, 80 களில் இருந்த திரையுலக ரசிகர்கள் தொடங்கி, இன்றைய 2கே கிட்ஸ் வரையிலும் எல்லோரது மனதிலும் நீங்காத இடத்தை பிடித்திருப்பவர். சுருக்கமாகச் சொன்னால் ரஜினிகாந்த் என்றால் தமிழ் சினிமாவின் மந்திரச்சொல் என்றே குறிப்பிடலாம்.
கடந்த 1975ஆம் ஆண்டில், இயக்குநர் கே.பாலச்சந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் வில்லனாக அறிமுகம் ஆனவர் ரனிஜிகாந்த். பாலச்சந்தர் தான் ரஜினியின் குரு என்றும் கூட குறிப்பிடுவார்கள். தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர்கள் இருந்தாலும், தனக்கென்று ஒரு ஸ்டைல் உருவாக்கிக் கொண்டதால், அதுவே அவரது அடையாளமாகி போனது.
இளமைக்கால வாழ்க்கை
ரஜினிகாந்தின் இயற்பெயர் சிவாஜி ராவ் கெகாவத் ஆகும். இவர் கர்நாடக மாநிலத்தில் வாழ்ந்த மராத்தி குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆவார். கடந்த 1949ஆம் ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதி பிறந்தவர். இவரது தாய்மொழி மராத்தி என்றாலும் இவர் இதுவரையிலும் மராத்திய மொழி படங்களில் நடித்தது கிடையாது.
தொடக்க காலத்தில், பெங்களூரு போக்குவரத்துக் கழகத்தில் நடத்துநராகப் பணியாற்றிக் கொண்டிருந்த ரனிஜிகாந்த், அங்கிருந்து புலம்பெயர்ந்து சென்னைக்கு வந்தார். இதைத் தொடர்ந்து பாலச்சந்தரின் படத்தில் அறிமுகமாகி, தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத உச்சத்தை எட்டியிருக்கிறார்.
குடும்ப வாழ்க்கை
சென்னை எத்திராஜ் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த லதா ரங்காச்சாரி, தன்னுடைய கல்லூரி இதழுக்காக நடிகர் ரஜிகாந்தை பேட்டி கண்டார். இந்நிலையில், அதே லதாவை 1981ஆம் ஆண்டு ரஜினிகாந்த் திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் திருப்பதியில் நடைபெற்றது. ரஜினிகாந்த் – லதா தம்பதியருக்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் சௌந்தர்யா ரஜினிகாந்த் என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.
பிரபலமான திரைப்படங்கள்
ரஜினிகாந்த் இதுவரையிலும் 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக அவர் நடித்த மூன்று முகம், பாட்ஷா, தளபதி, படையப்பா, சிவாஜி, எந்திரன், எந்திரன் 2.0 போன்ற படங்கள் அகில இந்திய அளவில் பிளாக்பஸ்டர் ஹிட் படங்களாக அமைந்தன.
அதே சமயம், கடந்த 2002ஆம் ஆண்டில், ரஜினிகாந்தின் கனவுப் படமான பாபா திரைப்படம் பெரும் தோல்வியை தழுவியது. அந்தப் படத்தில் அவர் சிகரெட் பிடிக்கும் காட்சி கடும் விமர்சனத்திற்கு உள்ளான நிலையில், அதற்கடுத்த படங்களில் மட்டுமல்லாமல் சொந்த வாழ்விலும் சிகரெட் பிடிப்பதை அவர் நிறுத்திவிட்டார்.
பத்ம விபூஷன், தாதாசாகேப் விருதுகளைப் பெற்ற ரஜினிகாந்த்
மத்திய, மாநில அரசுகள் மற்றும் திரைப்படத்துறை சங்கங்கள், தனியார் அமைப்புகள், தொலைக்காட்சிகள், சமூக அமைப்புகள் உள்ளிட்டோர் சார்பில் எண்ணற்ற விருதுகளை ரஜினிகாந்த் பெற்றுள்ளார். எனினும், கடந்த 2000ஆவது ஆண்டில் மத்திய அரசு வழங்கிய பத்மபூஷன் விருது, கடந்த 2016ஆம் ஆண்டில் மத்திய அரசு அவருக்கு வழங்கிய பத்ம விபூஷன் விருது மற்றும் 2021ஆம் ஆண்டில் மத்திய அரசு வழங்கிய தாதாசாகேப் பால்கே விருது உள்ளிட்டவை மிக உயரிய விருதுகள் ஆகும்.
அதே சமயம், தமிழக அரசு சார்பில் சிறந்த நடிகருக்கான விருதை ரஜினிகாந்த் 6 முறை வென்றுள்ளார். தமிழக அரசின் கலைமாமணி விருதை இரண்டு முறை பெற்றுள்ளார். அதேபோன்று செவாலியர் சிவாஜி கணேன் விருதை ரஜினிகாந்த் பெற்றுள்ளார்.
முன்னதாக, கடந்த 1984ஆம் ஆண்டில் நல்லவனுக்கு நல்லவன் என்ற படத்தில் நடித்ததற்காக சிறந்த தமிழ் நடிகருக்கான ஃபிலிம்பேர் விருதை ரஜினிகாந்த் தட்டிச் சென்றார். அதுதான் அவர் பெற்ற முதல் விருது ஆகும்.
அரசியலும், ரஜினியும்…
கடந்த 1994ஆம் ஆண்டு ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப் போவதாக செய்திகள் பரவின. அப்போது முதல், அவர் அரசியல் கட்சி தொடங்க இருப்பதாக அவ்வபோது செய்திகள் வெளியாகி பரபரப்பாக பேசப்படுவதும், பின்னர் அமைதியாகுவதுமாக நிலவி வந்தது.
ஆனால், இறைவன் மனது வைத்தால் அரசியலுக்கு வருவேன் என்று கூறி வந்த ரஜினிகாந்த், கடந்த 2017ஆம் ஆண்டில் அரசியல் கட்சி தொடங்க இருப்பதாக அறிவித்தார். இதுதொடர்பாக ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் அவர் பல்வேறு கட்டங்களாக ஆலோசனை கூட்டங்களை நடத்தி வந்தார்.
ஆனாலும், கட்சியின் பெயர், கொடி, கொள்கை போன்ற முக்கியமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமல் இருந்தது. 2021ஆம் ஆண்டில் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் ரஜினிகாந்த் சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், கொரோனா பெருந்தொற்று அதிவேகமாக பரவி வந்த நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் ரஜினி மக்கள் மன்றத்தை அவர் கலைத்தார். மேலும், இனி அரசியலுக்கு வரும் திட்டம் இல்லை என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.