Ravichandran Ashwin (ரவிச்சந்திரன் அஸ்வின்)

  ஓப்பனிங் பேட்ஸ்மேனாக இருந்த கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் சூழல் மன்னனாக மாறிய கதை!

  இந்தியாவில் பல விளையாட்டுகளுக்கு மத்தியில் கோடிக்கணக்கான மக்களின் நாடிதுடிப்பாக விளங்கும் ஒரே விளையாட்டு கிரிக்கெட். கிரிக்கெட்டில் சாதிக்க துடிக்கும் லட்சக்கணக்கான திறமையாளர்களில் சிலருக்கு மட்டுமே இந்திய கிரிக்கெட் அணியில் சேர்ந்து வீரராக விளையாடும் வாய்ப்பு அமைகிறது.

  இந்திய கிரிக்கெட் அணியில் எப்போதுமே மஹாராஷ்டிராவை சேர்ந்த வீரர்கள் அதிகம் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், இதுவரை அணியில் இடம்பபெற்றுள்ள தமிழக வீரர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். தமிழக தலைநகரான சென்னையில் பிறந்து இந்திய கிரிக்கெட் அணியில் மற்றும் IPL போட்டிகளில் பவுலிங், பேட்டிங் என ஆல்-ரவுண்டராக திகழும் ரவிச்சந்திரன் ரவிச்சந்திரன் அஷ்வின் பற்றிய தகவல்களை பார்க்கலாம்.

  பிறப்பு:

  பிரபல சர்வதேச கிரிக்கெட் வீரராக திகழும் இந்திய அணியின் ஆல்ரவுண்டரான அஷ்வின் கடந்த 1986-ம் ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதி சென்னையில் பிறந்தார். இவரது தந்தையான ரவிச்சந்திரனும் கிரிக்கெட் பிளேயர் என்பது கூடுதல் சிறப்பு. ரவிச்சந்திரன் வேகப்பந்து வீச்சாளராக கிளப் அளவில் கிரிக்கெட் பிளேயராக இருந்தார். தான் சாதிக்காததை தன் மகன் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மகனுக்கு கிரிக்கெட் பயிற்சிக்கு தேவையான விஷயங்களை பார்த்து பார்த்து செய்துள்ளார். விளையாட்டு ஒருபக்கம் என்றாலும் படிப்பிலும் கெட்டிக்காரராக விளங்கிய அஷ்வின், பத்மா சேஷாத்ரி பால பவன் மற்றும் St. Bede’s Anglo Indian மேல்நிலைப் பள்ளியில் படித்தார். கல்லூரி படிப்பை SSN பொறியியல் கல்லூரியில் பயின்று தகவல் தொழில்நுட்பத்தில் BTech பட்டம் பெற்றார்.

  கிரிக்கெட்டிற்காக பள்ளியை மாற்றிய அஷ்வின்:

  St. Bede’s Anglo Indian பள்ளிக்கு அஷ்வின் மாறியதற்கு முக்கிய காரணம் அந்த பள்ளியில் முறையான கிரிக்கெட் அகாடமி இருந்தது தான். முறையான பயிற்சியாளர்களும் அங்கிருந்த காரணத்தால் தான் நினைத்த கிரிக்கெட்டை வாழ்வை அடைய இந்த பள்ளிக்கு மாறினார். கிரிக்கெட் உலகில் சிறந்த ஸ்பின்னராக தற்போது திகழும் அஷ்வின் உண்மையில் சிறுவயது முதலே ஓப்பனிங் பேட்ஸ்மேன் மற்றும் ஃபாஸ்ட் பவுலர் என்பது மிகவும் ஆச்சர்யமான ஒன்று. லோக்கல் கிளப் மேட்ச்களில் இவர் காட்டிய திறமையால் அண்டர் 17 டீமிலும் செலெக்டாகி நன்றாக விளையாடி இருக்கிறார்.

  கல்லூரியில் படித்த போது இவரது கோச் வழங்கிய அறிவுரை, நீ உயரமாக இருப்பதால் ஃபாஸ்ட்டிற்கு பதில் ஸ்பின் பவுலிங் போட்டால் எளிதில் நிறைய விக்கெட்டுகளை வீழ்த்தலாம் என்பது தான். மேலும் அதுவரை பேட்டிங்கில் முழு ஈடுபாடு காட்டிய அஷ்வின், அதை சற்று தள்ளி வைத்து விட்டு முழுநேர ஸ்பின்னராக முடிவு செய்து அதற்கான பயிற்சிகளை பெற்றார். ஆஃப் ஸ்பின் பவுலிங்கில் அதிக ஈடுபாடு காட்டினார்.

  2006-ல் தமிழக அணிக்காக..

  இடையில் ஏற்பட்ட சிறுகாயம் காரணமாக சில மாதங்கள் ஓய்வில் இருந்த இவர், அதன் பின் பேட்டிங்கை தவிர்த்து விட்டு பவுலிங்கில் முழு கவனம் செலுத்தினர். தொடர்ந்து 2006-ல் தமிழக அணிக்காக விளையாட துவங்கிய அஷ்வின் சிறப்பான பவுலிங்கை வெளிப்படுத்தினார். இந்திய கிரிக்கெட் அணியில் எப்படியாவது இடம்பெற்று விட வேண்டும் என்ற தனது சிறுவயது கனவை நோக்கி செல்ல, தொடர்ந்து சிறப்பான ஸ்பின் பவுலிங்கை வெளிப்படுத்தினார். ஒருகட்டத்தில் தமிழக அணி வெற்றிபெற காரணமாக இருந்த காரணத்தால் 2009-ல் IPL போட்டிகளில் விளையாட CSK அணிக்காக தேர்வு செய்யப்பட்டார். ஆனால் அதற்கடுத்த ஆண்டு தான் இவரது வாழ்வில் திருப்புமுனை ஆண்டு என சொல்லலாம்.

  ஒருநாள் போட்டி அறிமுகம்:

  2010-ல் சாம்பியன்ஸ் லீக்கில் CSK-விற்காக ஆடி பிளேயர் ஆஃப் தி சீரிஸ் விருதை வென்று தேர்வாளர்களை திரும்பி பார்க்க வைத்தார். இதனை தொடர்ந்து 5 ஜூன் 2010 அன்று இலங்கைக்கு எதிராக ஒருநாள் போட்டியில் சர்வதேச கிரிக்கெட் வீரராக அறிமுகமானார். இந்த மேட்சில் பேட்டிங் மற்றும் ஸ்பின் பவுலிங்கில் கலக்கிய அஷ்வின் தனது தேர்விற்கு நியாயம் சேர்த்தாலும், ஏற்கனவே சீனியர் பிளேயர்கள் இருந்த காரணத்தால் சரியான வாய்ப்பிற்காக காத்திருந்தார். இதே ஆண்டில் நியூசிலாந்துக்கு எதிரான சீரிஸில் 5 போட்டிகளிலும் விளையாடிய அஷ்வின் 11 விக்கெட்டுகளை எடுத்தார்.

  டெஸ்ட் அறிமுகம்:

  ஜூன்-ஜூலை 2011-ல் இந்தியாவின் மேற்கிந்தியத் தீவுகள் சுற்றுப்பயணத்தின் பொது நடைபெற்ற டெஸ்ட் போட்டி ஒன்றில் முதன் முதலாக களமிறங்கிய அஷ்வின் 2 இனிங்க்சிலும் சேர்த்து 9 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி ஆட்ட நாயகன் விருது பெற்றார். 2011 உலககோப்பையை வென்ற இந்திய அணியில் அஷ்வின் இடம்பெற்றிருந்தாலும், தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் இவர் படைத்த சாதனைகள் காரணமாக சர்வதேச கிரிக்கெட் உலகை வியக்க வைத்தார். டெஸ்ட் போட்டிகளில் அதிவிரைவாக 100 விக்கெட் மற்றும் 300 விக்கெட்டுகளை (54 டெஸ்ட் போட்டிகளிலேயே)வீழ்த்தி சாதனை நாயகனாக வலம் வந்தார். பந்துவீச்சில் மட்டுமல்லாது வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பேட்டிங்கிலும் தனது திறமையை காட்டு பவுலர் மட்டுமல்ல தான் ஒரு ஆல்-ரவுண்டர் என்பதை நிரூபித்து கொண்டே இருந்தார்.

  கேரம் பால் கிங்:

  பலவித ஸ்பின் டெக்னிக்ஸை அஷ்வின் பயன்படுத்தினாலும் இலங்கை வீரர் அஜந்தா மெண்டிஸ்-கு பிறகு கேரம் பால் டெக்னிக்கை மிகவும் லாவகமாக வீச கூடியவராக திகழ்ந்ததால் திறமையான பவுலர் என்ற உச்சத்தை அடைந்தார் அஷ்வின்.

  உயரிய அங்கீகாரம்:

  ஒருகட்டத்தில் இந்திய அணியின் பிரீமியம் ஸ்பின்னராக வலம் வந்தார். ரவீந்திர ஜடேஜா மற்றும் அஷ்வின் ஆகிய இருவர் மட்டுமே அணியில் வழக்கமாக இடம்பெறும் ஸ்பின் பவுலர்கள் ஆனார்கள். icc cricketer of the year என்ற அவார்டை சச்சின் மற்றும் டிராவிட்டிற்கு பிறகு 2016-ல் பெற்றார் அஷ்வின்.

  சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய அஷ்வின், 2020 மற்றும் 2021-ல் டெல்லி அணிக்காக விளையாடினார். 2022 ஐபிஎல் ஏலத்தில் அஷ்வின் ராஜஸ்தான் ராயல்ஸால் ஏலம் எடுக்கப்பட்டார். பல சாதனைகளுக்கு சொந்தக்காரரான அஷ்வின், ஏப்ரல் 2022-ல், IPL வரலாற்றில் ஹர்பஜன் சிங்கிற்குப் பிறகு 150 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டிய இரண்டாவது ஆஃப் ஸ்பின்னர் ஆனார். பல்வேறு கள சூழல்களுக்கிடையே ஒருகட்டத்தில் டெஸ்ட் மற்றும் ஒன்டே போட்டிகளில் தேர்வாகாமல் போனாலும் டி20 மேட்ச்களில் விளையாடி ரசிகர்களை மகிழ்வித்து வரும் அஷ்வின், தனது பள்ளி தோழியான பிரித்தி நாராயணனை திருமணம் செய்து கொண்டு அகிரா மற்றும் ஆத்யா என்ற 2 குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.