HOME » PV SINDHU

PV Sindhu (பிவி சிந்து)

  பேட்மிண்டன் புயல் பி.வி. சிந்து கடந்து வந்த பாதை!

  கிரிக்கெட் போட்டியை காண்பதற்காக தவம் கிடந்த இந்திய மக்களை பேட்மிண்டன் போட்டியைக் காண காத்திருக்க வைத்தவர் பிவி சிந்து. ஒலிம்பிக்கில் பல வரலாற்றுச் சாதனைகளை படைத்துள்ள பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து பற்றிய முழு விவரங்கள் இதோ…

  பிறப்பு:

  புசார்லா வெங்கட சிந்து என்ற முழு பெயரைக் கொண்ட பிவி சிந்து, 1995ம் ஆண்டு ஜூலை மாதம் 5ம் தேதி பி.வி.ரமணா, பி.விஜயா தம்பதியினருக்கு மகளாக பிறந்தார். பெற்றோர் இருவருமே கைபந்து வீரர்கள், சிந்துவின் அப்பா விளையாட்டிற்காக அர்ஜூனா விருது வென்றவர். சிந்துவிற்கு ஒரு சகோதரி உள்ளார், அவரும் வாலிபால் வீராங்கனையாவர்.

  எனவே பெற்றோர் வழியில் சிந்துவிற்கு சின்ன வயதில் இருந்தே விளையாட்டுத்துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. அப்பா, அம்மாவைப் போல் வாலிபால் வீராங்கனையாக வருவார் என நினைத்தால், பேட்மிண்டன் மட்டையை கையில் எடுத்து விளையாட ஆரம்பித்தார். 6 வயது இருக்கும் போது கோபிசந்த் என்ற பேட்மிண்டன் வீரரின் ஆட்டத்தை கண்டு வியந்து போன சிந்து, அவரை மானசீக குருவாகவும், ஹீரோவாகவும் ஏற்றுக்கொண்டு பேட்மிண்டன் துறையை நோக்கி நகர ஆரம்பித்தார். மகளின் ஆர்வத்தை ஆதரித்த பெற்றோர், செகந்திராபாத்தில் உள்ள மெகபூப் அலி என்ற புகழ்பெற்ற பேட்மிண்டன் பயிற்சியாளரிடம் சேர்த்துவிட்டனர்.

  2004ம் ஆண்டு கோபிசந்த் ஐதராபாத்தில் அமைத்த பயிற்சி மையத்தில் இணைந்தார். தான் ஹீரோவாக நினைத்தவரிடமே பயிற்சி பெறும் வாய்ப்பு கிடைத்ததால் பிவி சிந்து பேட்மிண்டனில் அதிக தீவிரம் காட்டினார். ஆனால் விளையாட்டு, பள்ளி என இரண்டையும் சரிவர பேலன்ஸ் செய்ய முடியாததால், 9ம் வகுப்போடு பள்ளிக்குச் செல்வதை நிறுத்திய சிந்து, தொலைதூர கல்வி மூலமாக படிக்க ஆர்மபித்தார். செயின்ட் ஆன்ஸ் கல்லூரியில் பி.காம் பட்டமும், எம்பிஏவும் படித்துள்ளார். இதனிடையே மாநில மற்றும் தேசிய போட்டிகளில் பதக்கங்களை குவித்து வந்தார்.

  சர்வதேச போட்டிகள்:

  2009ம் ஆண்டு கொழும்புவில் நடைபெற்ற சப் ஜூனியர் பேட்மிண்டன் போட்டியில் பங்கேற்றதன் மூலமாக முதல் சர்வதேச போட்டியில் காலடி எடுத்து வைத்தார். முதல் தொடரிலேயே வெண்கல பதக்கம் வென்று அசத்தினார். 2012ம் ஆண்டு சீன ஓபன் சர்வதேச போட்டியில் முத்திரை பதித்தார். லண்டன் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற லீ சுரேவை வீழ்த்தியது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

  2012ம் ஆண்டு சையத் மோடி சர்வதேச பேட்டிமிண்டன் போட்டியில் பங்கேற்பதற்காக அக்காவின் திருமணத்தைக் கூட விட்டுவிட்டு விளையாட வந்தது பிவி சிந்துவின் புகழை எட்டுத்திக்கும் பரவவைத்தது.

  2016ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற பிவி சிந்து, ஜப்பான் வீராங்கனை நோஜோமி ஓகுஹாராவை தோற்கடித்து வெள்ளிப்பதக்கம் வென்றார். இதன் மூலமாக ஒலிம்பிக் போட்டியின் இறுதிச்சுற்று வரை முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார்.

  ஆனால் அடுத்தடுத்து இறுதிப்போட்டிகளில் பிவி சிந்து தோல்வியை தழுவி வந்தார். டோக்யோ ஒலிம்பிக் போட்டித் தொடரில் காலிறுதி ஆட்டம் வரை கெத்தாக முன்னேறி வந்த சிந்து, அரையிறுதியில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். இருப்பினும் டோக்யோ ஒலிம்பிக் போட்டியின் இறுதி ஆட்டத்தில் சீன வீராங்கனையை வீழ்த்தி வெண்கலம் வென்று புதிய வரலாறு படைத்தார்.

  2018ம் ஆண்டு நடைபெற்ற உலக பேட்மிண்டன் இறுதிச்சுற்று போட்டியில் ஜப்பான் வீராங்கனை எதிர்கொண்ட பிவி சிந்து, தங்கம் வென்று சாதனை படைத்தார். தொடர்ந்து 7 சர்வதேச போட்டிகளில் சரிவை சந்தித்து வந்த சிந்து, இதன் மூலம் அவர் மீதான விமர்சனங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்தார். அடுத்த ஆட்டத்தில் 21க்கு 15 என்ற கணக்கில் வெற்றி பெற்று பதக்கத்தை கைப்பற்றினார்.

  2021ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் பேட்மிண்டன் போட்டியில் மகளிருக்கான ஒற்றையர் பிரிவில் சீனாவின் ஹீ பிங்ஜியவோவை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றார். இதன் மூலம் ஒலிம்பிக் தனிநபர் பிரிவில் 2 பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்றுச் சாதனையை படைத்தார்.

  2022ம் ஆண்டு சிங்கப்பூர் பேட்மின்டன் ஓபன் இறுதிப் போட்டியில் சீனா வீராங்கனை வாங் சியை வீழ்த்தி, முதன் முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.

  சாதனைகள்:

  2018ம் ஆண்டு, அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீராங்கனை குறித்த ஃபோர்ப்ஸ் பட்டியலில் 7வது இடம் பிடித்துள்ளார்.

  விளையாட்டுத் துறையில் சிறந்த பங்களிப்புக்காக பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு 2021ம் ஆண்டு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.