இந்திரா காந்தியின் மறு உருவமா பிரியங்கா காந்தி?
காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராகவும், உத்தரப் பிரதேச மாநில மேலிடப் பொறுப்பாளராகவும் இருப்பவர் பிரியங்கா காந்தி வத்ரா. அரசியலில் அரிச்சுவடி தெரியாதவர்கள் கூட நேரு குடும்பத்து வாரிசுகள் குறித்து தெரியாமல் இருக்க முடியாது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆகியோரது மகள் பிரியங்கா காந்தி என்ற தகவல் எல்லோரும் அறிந்த ஒன்றுதான். உடன் பிறந்த சகோதரரான ராகுல் காந்தி வெகு காலத்திற்கு முன்பே அரசியலுக்கு வந்த போதிலும், அரசியல் பாதைகளில் இருந்து பிரியங்கா காந்தி ஒதுங்கியே இருந்தார்.
அதே வேளையில், காங்கிரஸ் கட்சி 2014ஆம் ஆண்டுக்குப் பிறகு மத்தியிலும், மாநிலங்களிலும் குறிப்பிடத்தக்க வெற்றிகளை பெற முடியவில்லை. ஒன்றிரண்டு மாநிலங்களில் ஆட்சியை அமைத்தாலும், அங்கு ஆட்சிக் கவிழ்ப்பு அல்லது அடுத்த தேர்தலில் ஆட்சி இழப்பது என்று அந்தக் கட்சி கடும் சவால்களை எதிர்கொண்டு வந்தது.
இத்தகைய சூழலில், 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில், பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த திட்டமிடப்பட்டது. அந்த வகையில் 2019ஆம் ஆண்டு ஜனவரி 23ஆம் தேதி உத்தரப் பிரதேச மாநிலத்தின் கிழக்கு மண்டல பொறுப்பாளராக பிரியங்கா காந்தி பொறுப்பேற்றுக் கொண்டார்.
அதற்கு முன்பு உடை, பாவனை, தோரணை எல்லாம் தன்னியல்பாக இருந்த நிலையில், அரசியலுக்கு வந்த பிறகு இந்திரா காந்தியை போன்ற தோரணையில் வலம் வர தொடங்கினார் பிரியங்கா காந்தி.
உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியை வெற்றி பெற வைக்க தீவிரமான பிரச்சாரத்தை அவர் மேற்கொண்டார். இருப்பினும் கட்சி தோல்வியை தழுவியது. ஆனாலும், 2020ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி ஒட்டுமொத்த உத்தரப் பிரதேச மாநிலத்துக்கான மேலிடப் பொறுப்பாளராக பிரியங்கா காந்தி பொறுப்பேற்றுக் கொண்டார்.
மீண்டும் கட்சி அடைந்த தோல்வி
நாடாளுமன்றத் தேர்தலின்போது உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்கு செல்வாக்கை மீட்டுத் தர முடியவில்லை என்றாலும் கூட, 2022ஆம் ஆண்டு நடைபெற்ற மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் கட்சிக்கு பெரும் வெற்றியைத் தேடி அவர் பலத்த முயற்சிகளை மேற்கொண்டார். இருப்பினும், அந்தத் தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்த நிலையில், பாஜக ஆட்சி அமைத்தது.
அதே சமயம், காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்திருந்தால், அவர் உத்தரப் பிரதேச முதல்வராக பதவியேற்றிருப்பார் என்று கருதப்படுகிறது. இதில், கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் என்ன என்றால், பிரியங்கா காந்தி இதுவரையிலும் எந்தவொரு தேர்தலிலும் நேரடியாகப் போட்டியிடவில்லை.
அரசியலுக்கு வரும் முன்பு, கடந்த 2004ஆம் ஆண்டு தொடங்கி, நாடாளுமன்றத் தேர்தலில் தனது தாயார் சோனியா காந்தி மற்றும் சகோதரர் ராகுல் காந்தி ஆகியோர் போட்டியிடும் சமயங்களில் அவர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார் பிரியங்கா காந்தி.
தொடக்க கால வாழ்க்கை மற்றும் கல்வி
பிரியங்கா காந்தி கடந்த 1972ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி பிறந்தவர். தற்போது அவருக்கு 50 வயது ஆகிறது. புது டேல்லியில் உள்ள ஜூசஸ் அண்ட் மேரி காண்வெண்ட் பள்ளியில் படித்தார். இதைத் தொடர்ந்து, ஜீசஸ் மற்றும் மேரி கல்லூரியில் சைக்காலஜி பட்டப்படிப்பை முடித்தார். புத்த மதக் கல்வியில் முதுநிலை பட்டம் பெற்றுள்ளார்.
திருமண வாழ்க்கை
டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் ராபர்ட் வத்ராவை பிரியங்கா காந்தி கடந்த 1998ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உண்டு. பிரியங்கா காந்தி புத்த மத கோட்பாடுகள் மற்றும் புத்தரின் போதனைகள் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர்.
வழக்குகளும், போராட்டங்களும்
பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வத்ரா மீது ரியல் எஸ்டேட் முறைகேடு செய்ததாக வழக்கு நிலுவையில் உள்ளது. அதேபோன்று தற்போது சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோருக்கு எதிராக நேஷனல் ஹெரால்டு முறைகேடு வழக்குகளில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில், அமலாக்கத்துறை விசாரணையை கண்டித்து காங்கிரஸ் கட்சி நடத்தும் மிக தீவிரமான போராட்டங்களை பிரியங்கா காந்தி முன்னின்று நடத்தி வருகிறார். தன் மீது எந்தப் புகார்களும் இல்லை என்ற போதிலும் கட்சி மற்றும் தாய், சகோதரனுக்கு ஆதரவாக மிக உறுதியுடன் இவர் களத்தில் இறங்கி போராட்டம் நடத்தினார்.