நன்றி சொல்ல மட்டுமே கொண்டாடப்படும் தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகை!
நம் மாநிலத்தில் ஏராளமான பாரம்பரிய பண்டிகைகள் கொண்டாடப்பட்டாலும், தை மாதம் 1-ஆம் நாள் கொண்டாடப்படும் திருவிழாவான பொங்கல் பண்டிகை தான் தமிழர்களாகிய நமக்கு மிக முக்கிய பண்டிகையாக இருக்கிறது. தமிழர்களின் திருவிழாக்களில் நன்றி தெரிவிப்பதற்காக மட்டுமே நடத்தப்படும் தனித்துவமிக்க ஒரே பண்டிகையாக திகழ்கிறது பொங்கல். விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த புதுநெல்லை தை முதல் நாளில் சமைத்து அது பாலுடன் பொங்குவதை கண்டு “பொங்கலோ பொங்கல்” என்று உற்சாக குரல் எழுப்பும் நாளாக அமைகிறது தைப்பொங்கல்.
4 நாட்கள் கோலாகலம்:
இயற்கையை வழிபட மற்றும் சிறப்பான நாளாக கொண்டாட பால் மற்றும் வெல்லத்துடன் அரிசி பொங்குவதையே பண்டிகையின் பெயராக “பொங்கல்” என்று வைத்து விட்டனர் பண்டைய தமிழர்கள். ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை 4 நாட்கள் (போகிப்பண்டிகை, தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும்பொங்கல்) வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். தமிழ்நாட்டில் மட்டுமல்ல உலகின் பல நாடுகளில் தமிழர்கள் வசிக்கும் பெரும்பாலான இடங்களில் பொங்கல் பண்டிகையும், அது சார்ந்து கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுவது வழக்கம். 4 நாட்கள் பண்டிகை என்றாலும் இதில் தைப்பொங்கல் தான் முக்கியமான ஒன்று. இந்த நாளை சார்ந்து தான் மற்ற 3 பண்டிகைகளும் அனுசரிக்கப்பட்டு வருகின்றன.
தைப்பொங்கல்..
பெயர் குறிப்பிடுவது போல தை மாதம் முதல் நாளிலேயே தமிழர்களாகிய நம்மால் பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் என்பதற்கு பொங்கி வழிதல் அல்லது பொங்குதல் என்பது அர்த்தம். புதிய பானையில் புதிய அரிசியையிட்டு, அந்த அரிசி பானையில் ஊற்றப்படும் பால் பொங்கி வழிவது போல பிறந்துள்ள தை நம் வாழ்வை வளம்பெற செய்யும். பொங்கல் பொங்குவதை போல மகிழ்ச்சி மற்றும் உற்சாகம் நம் வாழ்வில் பொங்கி வழிவதோடு, கழனி பெருகி, அறுவடை மேலும் அதிகரிக்கும் என்பதே இப்பண்டிகையின் தத்துவமாக இருக்கிறது.
எதற்காக கொண்டாடப்படுகிறது?
பொங்கல் பண்டிகையானது விவசாயத்தை செழிக்க வைக்கும் சூரியன் மற்றும் பிற உயிர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கொண்டாட்டமாக இருக்கிறது. குறிப்பாக தைப்பொங்கல் பண்டிகை இயற்கைக்காக அர்ப்பணிக்கப்பட்ட பண்டிகையாக இருக்கிறது. இதை தமிழர்கள் விவசாயத்திற்கு நல்ல விளைச்சலை தர அத்தியாவசியமாக இருக்கும் சூரியனுக்கு நன்றி சொல்லி வழிபடுவதற்கான வாய்ப்பாக பயன்படுத்தி கொண்டிருக்கிறார்கள்.
ஒளியும், வெப்பமும் தான் மழை பெய்ய காரணம். உலகின் பருவமாற்றங்கள் மற்றும் பயிர்களின் பச்சையத்திற்கு முழுமுதற் காரணமாய் உள்ள சூரியனுக்கும், பயிர்கள் இன்றி உயிர்கள் வாழாது என்பதால் பயிர்களை விதைத்து உழ உதவும் மாடுகளுக்கும், முன்னோர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் பெருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது பொங்கல். சுருக்கமாக சொன்னால் அறுவடை தொடங்கியதை குறிக்கும் வகையில் சிறப்பான பயிர் விளைச்சலுக்கு உதவிய சூரியன், மழை மற்றும் விவசாய தொழிலாளர்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் நாளே தைப்பொங்கல் திருநாள்.
அறுவடை திருநாளாக கொண்டாடப்படும் தைப்பொங்கல்..
ஆடி மாதத்தில் பயிரிட்ட பயிர்கள் தை மாதம் தான் நல்ல விளைச்சலை தரும். புதிதாக அறுவடை செய்த நெல்லில் இருந்து கிடைக்கும் பச்சரிசியை கொண்டு பால், வெல்லம், நெய், முந்திரி, திராட்சை மற்றும் ஏலக்காய் சேர்த்துப் புது பானை மற்றும் புது அடுப்பில் கொதிக்க விட்டு அருகில் கரும்புகளை வைத்து முக்கியமாக சூரியனுக்கும், மாட்டுக்கும் வைக்கப்படும் படையல் தைபொங்கல் விழாவின் தனி சிறப்பாக இருக்கிறது.
கொண்டாட்டங்கள்:
அறுவடை மற்றும் விளைச்சலுக்கு காரணமான சூரியனை வழிபடும் விதமாக தைப்பொங்கல் நாளின் போது வீட்டின் நுழைவாயில் கோலங்கள் மற்றும் தோரணங்களால் அலங்கரிக்கப்படுகிறது. புதிய நெல்லில் இருந்து கிடைத்த அரிசியை பாலில் காய்ச்சியும், கரும்புகளை வைத்தும் சூரியனுக்கு பிரசாதமாக படைக்கிறார்கள். மேலும் புதிய மண் பானையில் புதிய அரிசியில் சர்க்கரை பொங்கல் மற்றும் வெண் பொங்கல் ஆகியவற்றை தயார் செய்து பொங்கல், செங்கரும்பு, புதுமஞ்சள், பனங்கிழங்கு, காய்கறிகள், பருப்பு மற்றும் பழ வகைகள் உள்ளிட்டவற்றை சூரியனுக்கு படையலிட்டு பொங்கல் பொங்கி வரும் போது “பொங்கலோ பொங்கல்” என்று ஆராவாரம் செய்கிறார்கள்.
தேசியவிழா:
தைப்பொங்கல் திருவிழாவானது தமிழர்களின் தேசிய விழாவாகவே கொண்டாடப்பட்டு வருகிறது. ஏனென்றால் முக்கியமாக சூரியனை வழிபடுவதால் பொங்கல் திருநாளை இந்துக்கள் மட்டுமே கொண்டாடுவதில்லை. மாறாக தமிழ் கிறிஸ்துவர்கள் , தமிழ் இஸ்லாமியர்களும் தங்கள் இல்லங்களில் சர்க்கரை பொங்கல் வைத்து குடும்பத்தினருடன் சாப்பிடுவதன் மூலம் தைப்பொங்கல் திருநாள் ஒட்டு மொத்த தமிழர்களின் மற்றும் விவசாய பெருமக்களின் விழாவாக இருக்கிறது. உலகம் முழுவதும் வாழும் சுமார் 12 கோடிக்கும் அதிகமான தமிழர்களால் மத மற்றும் அரசியல் பேதம் இல்லாமல் பண்பாட்டு அடிப்படையில் கொண்டாடப்படுகிற ஒரே விழாவாக இருப்பது பொங்கல் மட்டுமே.