டீக்கடைக்காரர் டூ பாரத பிரதமர் வரை… பிரதமர் மோடி கடந்து வந்த பாதை!
குஜராத்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து தற்போது நாட்டிற்கே பிரதமராக விளக்கும் நரேந்திர மோடியின் வாழ்க்கை பயணத்தையும், அதில் உள்ள சுவாரஸ்யங்களையும் அறிந்து கொள்ளலாம்…
பிறப்பு:
குஜராத் மாநிலம் மேஹ்சானா மாவட்டத்தில் உள்ள வத்நகரில் தாமோதர் தாஸ் முல்சந் மோதி-ஹீராபேன் தம்பதிக்கு 1950ம் ஆண்டு செப்டம்பர் 17ம் தேதி 3வது மகனாக நரேந்திர மோடி பிறந்தார். பள்ளியில் படிக்கும் காலத்திலேயே நரேந்திர மோடி, தனது தந்தை நடத்திய டீ கடையில் பணியாற்றியுள்ளார். 1978 ஆம் ஆண்டில் மோடி டெல்லி பல்கலைக்கழகத்தில் திறந்த கற்றல் பள்ளியில் (SOL) அரசியல் அறிவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். அதன்பின்னர் ஐந்து ஆண்டுகள் கழித்து, 1983ம் ஆண்டு, குஜராத் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். நரேந்திர தாமோதர்தாசு மோதி என்பதே இவரது முழுப்பெயராகும். இவருக்கு ஜசோதா பென் என்ற மனைவி உள்ளார். இவர்கள் இளம் வயதிலேயே பிரிந்துவிட்டதாக கூறப்படுகிறது.
8 வயதிலேயே அரசியல் பிரவேசம்:
மோடி, ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்திற்கு (ஆர்எஸ்எஸ்) அமைப்பில் தன்னை இணைத்துக்கொண்டார். தனது 20 வயதில் குஜராத்தின் மிகப்பெரிய நகரமான அகமதாபாத்துக்கு குடிபெயர்ந்தார். 1980ம் ஆண்டு பாஜகவில் உறுப்பினாராக சேர்ந்தார் மோடி. உறுப்பினாராக சேர்ந்த 1 வருட காலத்தில்,குஜராத் மாநில பொது செயலாளர் ஆக நியமிக்கப்பட்டார். அதனையடுத்து சோம்நாத் முதல் அயோத்தி வரையிலான அத்வானியின் ரத யாத்திரை மற்றும் கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரையிலான யாத்திரைக்கான ஏற்பாடுகளை செய்யும் பொறுப்பு மோடிக்கு வழங்கப்பட்டது. இதில் அவர் சிறப்பாக செயல்பட்டதை பார்த்து மகிழ்ந்த அத்வானி, 1998ஆம் ஆண்டு இமாச்சல பிரதேசம் மற்றும் குஜராத்தில் நடந்த தேர்தல் பொறுப்பாளராக மோடியை நியமித்தார். 1998ம் ஆண்டு வாஜ்பாய் பிரதமராக பதவியேற்ற பொழுது, மோடிக்கு ‘தேசிய செயலாளர்’ பதவி வழங்கப்பட்டது.
2001ம் ஆண்டு குஜராத் முதல்வர் கேசுபாய் படேல் பதவி விலகியதை அடுத்து நடந்த இடைத் தேர்தலில் போட்டியிட்டு வென்ற மோடி, 2001, அக்டோபர் 7ம் தேதி குஜராத் மாநிலத்தின் முதல்வராக பொறுப்பேற்றார். ஆனால் அடுத்த ஆண்டே ஒட்டுமொத்த நாட்டையே கொந்தளிக்க வைக்கும் விதமாக நடந்த ‘கோத்ரா ரயில் எரிப்பு’ சம்பவத்திற்கு பொறுப்பேற்று 2002ம் ஆண்டு தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆனால் அதற்கு அடுத்த இடைத்தேர்தல் மற்றும் 2007,2012 ஆகிய தேர்தல்களிலும் வெற்றி பெற்று 4 முறை முதல்வராக அமர்ந்தார்.
அக்டோபர் 2001 முதல் மே 2014 வரையில் அவர் குஜராத் முதல்வராக இருந்ததால், குஜராத் மாநிலத்தில் மிக நீண்ட காலம் முதல்வராக இருந்தவர் என்ற பெருமையும் மோடிக்கு உண்டு.
பிரதமர் வேட்பாளர்:
2014ம் ஆண்டு நடந்த 16 ஆவது மக்களவைத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அந்த தேர்தலில் பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, ஏப்ரல் 2014 முதல் மே 2014 வரை இரண்டு மாதங்களில் நாடெங்கும் சுமார் 3 லட்சம் கிலோ மீட்டர் தொலைவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு 430 பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார்.
2014 நாடாளுமன்ற தேர்தலில் வாரணாசி மற்றும் வடோதரா ஆகிய இரண்டு நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்டார். வடோதரா தொகுதியில் 5,70,128 வாக்குகள் வித்தியாசத்திலும், வாரணாசி தொகுதியில் 3,71,784 வாக்கு வித்தியாசத்திலும் வெற்றி பெற்றார்.
2014 மே 26ல் இந்திய நாட்டின் பிரதமராக முதல் முறையாக நரேந்திர மோடி பதவியேற்றார். அதனையடுத்து 2019ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் பாஜக 303 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதனையடுத்து நரேந்திர மோடி, மே 30, 2019 அன்று இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்றார்.
பிரதமரின் சிறப்பு திட்டங்கள்:
பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஏழை எளிய மக்களுக்கு உயர்தர மருத்துவ சிகிச்சை கிடைக்கும் நோக்கில் ‘ஆயுஷ்மான் பாரத்’ திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதேபோல் வங்கி கணக்கில்லாத மக்களுக்காக ‘ஜன் தன் யோஜ்னா’ திட்டமும், அமைப்பு சாரா தொழிலாளர்கள் ஓய்வூதியம் பெறும் வகையில் ‘ஷ்ரம் யோகி மன் தன்’ திட்டமும் தொடங்கப்பட்டது.
2014ம் ஆண்டு ‘தூய்மை இந்தியா இயக்கம்’ நாடு முழுவதும் தொடங்கப்பட்டது. 2016ல் ஏழைகளுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்குவதற்காக உஜ்வாலா திட்டமும், இந்தியர் எவரும் வீடில்லாமல் இருக்கக் கூடாது என்பதற்காக `அனைவருக்கும் வீடு’ திட்டமும் கொண்டு வரப்பட்டது.
2016ம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி 500 மற்றும் 1000 ரூபாய் தாள்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. 2017ம் ஆண்டு நாடு முழுவது ஜிஎஸ்டி முறை கொண்டு வரப்பட்டது. 2019ம் ஆண்டு முத்தலாக் முறை ஒழிக்கப்பட்டது.
2019-இல் ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டு, ஜம்மு காஷ்மீருக்கு இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370 மற்றும் இந்திய அரசியலமைப்புச் சட்டம், பிரிவு 35ஏ மூலம் வழங்கப்பட்ட சிறப்புச் சலுகைகள் நீக்கப்பட்டதுடன், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் (ஒன்றியப் பகுதி) மற்றும் லடாக் ஒன்றியப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது.
பிரதமரின் சுற்றுப்பயணம், கெளரவிப்புகள்:
2014- 2020 ஆண்டு காலத்தில் மட்டும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி 58 நாடுகளுக்கு அரசு முறைப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
17 ஆண்டுகளுக்குப் பிறகு நேபாளத்துக்கு இருதரப்பு உறவுகளுக்காக பயணம் மேற்கொண்ட முதலாவது பிரதமராக திரு. மோடி இருந்தார். 28 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவுக்கும், 31 ஆண்டுகளுக்குப் பிறகு பிஜி தீவுகளுக்கும், 34 ஆண்டுகளுக்குப் பிறகு ஐக்கிய அமீரகம் மற்றும் செஷல்ஸ் தீவுகளுக்குச் சென்ற முதலாவது இந்தியப் பிரதமர் என்ற பெருமை பெற்றவர்.
அமைதி மற்றும் வளர்ச்சிக்கான பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், 2018 ஆம் ஆண்டில் பிரதமருக்கு, பெருமைக்குரிய சியோல் அமைதிப் பரிசு வழங்கப்பட்டது.
பிரதமர் மோடியின் கோரிக்கையை ஏற்று, அமைதி மற்றும் வளர்ச்சிக்கான பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், 2018 ஆம் ஆண்டில் பிரதமருக்கு, பெருமைக்குரிய சியோல் அமைதிப் பரிசு வழங்கப்பட்டது.