மூன்று முறை முதல்வராக இருந்த ஓபிஎஸ் – அரசியலில் சறுக்கியது எப்படி?
தமிழக அரசியல் களத்தில் சற்றும் எதிர்பாராத திருப்பங்களுக்குச் சொந்தக்காரராக இருப்பவர் ஓபிஎஸ் என்னும் ஓ.பன்னீர்செல்வம். தொடக்க காலத்தில் ஏற்பட்ட திருப்பங்கள் என்பது அவருக்கு அரசியலில் ஏற்றம் தருவதாகவும், உச்சபட்ச பதவிகளை அடைவதாகவும் இருந்தது.
ஆனால், பிற்காலத்தில் ஏற்பட்ட திருப்பங்கள் என்பது அவருக்கு அரசியலில் இறன்கு முகம் அளிப்பதாக மாறிப் போனது. குறிப்பாக, பல்வேறு சவால்கள், இன்னல்களுக்கு மத்தியில் அவரது அரசியல் எதிர்காலமே கேள்விக்குறியாகி வருகிறது.
அரசியலில் நீண்ட காலமாக சாதித்த தலைவர்கள் அல்லது சினிமா பிளஸ் அரசியல் செல்வாக்கு ஆகியவற்றை கொண்ட தலைவர்கள் மட்டுமே அலங்கரித்து வந்த தமிழக முதல்வர் நாற்காலியில், அரசியலில் பெரிய பின்புலம் இல்லாத எளியவரான ஓபிஎஸ் அமர்ந்தபோது ஒட்டுமொத்த இந்தியாவும் திரும்பி பார்த்தது என்றால் அது மிகையல்ல.
பெரிய அளவுக்கான பின்புலமும், செல்வாக்கும் இல்லாத இவரால் எப்படி முதல்வராக முடிந்தது? எந்தெந்த இடங்களில் சறுக்கல் ஏற்பட்டது? அரசியலில் இவர் எவ்வளவு பெரிய பதவிகளை வகித்துள்ளார் என்பது குறித்து இந்தக் கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
சாதாரன டீ கடைக்காரர்
தேனி மாவட்டம், பெரியகுளத்தில் சாதாரண விவசாயக் குடும்பத்தில் கடந்த 1951ஆம் ஆண்டில் பிறந்தவர் தான் ஓ.பன்னீர்செல்வம். பிஏ பட்டப்படிப்பு படித்துள்ளார். தொடக்க காலத்தில் டீ கடை நடத்தி வந்தார். 1973ஆம் ஆண்டில் அதிமுகவில் தன்னை அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டார்.
கட்சியில் படிப்படியாக வளர்ச்சி அடைந்த அவர், கடந்த 1996ஆம் ஆண்டில் பெரியகுளம் நகராட்சியின் தலைவர் பதவியை வென்றார். அந்த பதவியில் 2001ஆம் ஆண்டு வரை 5 ஆண்டுகள் நிறைவு செய்தார்.
டிடிவி தினகரனின் ஆதரவாளர்
அதிமுகவில் மறைந்த பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு அடுத்தபடியாக நிழல் ஆளுமையாக இருந்தவர் வி.கே.சசிகலா. இந்த சசிகலாவின் உறவினரான டி.டி.வி.தினகரனுக்கும் அதிமுகவில் நல்ல செல்வாக்கு இருந்தது. குறிப்பாக, 1999ஆம் ஆண்டில் பெரியகுளம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். அந்தத் தேர்தலில் அவரது வெற்றிக்கு தீவிரமாக பணியாற்றிய ஓ.பன்னீர்செல்வம், தினகரின் நம்பிக்கைக்கு உரியவராக மாறினார்.
திடீரென்று முதல்வரான ஓபிஎஸ்
கடந்த 2001ஆம் ஆண்டில் சட்ட வழக்குகளை எதிர்கொண்ட ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்க உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. அப்போது சசிகலா மற்றும் தினகரன் ஆகியோருடன் உள்ள தொடர்புகளின் அடிப்படையில் ஜெயலலிதாவால் முதல்வராக தேர்வு செய்யப்பட்டார் ஓ.பன்னீர்செல்வம். அந்த பதவியில் 2001 செப்டம்பர் 21ஆம் தேதி முதல் 2002ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் தேதி வரை 6 மாதங்கள் மட்டுமே நீடித்தார்.
ஜெயலலிதா முதல்வராக பதவியேற்க தனது பதவியை ராஜிநாமா செய்தார். அதாவது, நம்பிக்கையோடு ஒப்படைக்கப்பட்ட பொறுப்பை உரிய காலம் வந்ததும் திருப்பி ஒப்படைத்தார் ஓ.பன்னீர்செல்வம். இருப்பினும் பொதுப்பணித்துறை, கலால்துறை உள்ளிட்ட துறைகளின் அமைச்சர் ஆனார்.
எதிர்க்கட்சித் தலைவர்
2006ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சியை இழந்தபோது எதிர்க்கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்ட ஓபிஎஸ் 10 நாட்களில் அப்பதவியில் இருந்து விலகினார். பின்னர் எதிர்க்கட்சி துணைத் தலைவராக தொடர்ந்தார்.
கட்சியிலும், ஆட்சியிலும் அதிகரித்த செல்வாக்கு
ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய விசுவாசியாக இருந்த காரணத்தால் கட்சியிலும், ஆட்சியிலும் பன்னீர்செல்வத்தின் ஆதரவு பெருக தொடங்கியது. கட்சி சார்பில் அமைக்கப்பட்ட தேர்தல் பணிக் குழு உள்பட பல முக்கியமான பொறுப்புகளை வகித்துள்ளார்.
2011ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சி அமைத்தபோது நிதியமைச்சராக பொறுப்பேற்றார்.
இரண்டாம் முறை முதல்வர்
வருமானத்திற்கு பொருந்தாத வகையில் சொத்து சேர்த்த வழக்கில், 2014ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஜெயலலிதா குற்றவாளி என்று கர்நாடக சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து இரண்டாம் முறையாக முதல்வரான ஓபிஎஸ், பின்னர் ஜெயலலிதா கர்நாடக உயர் நீதிமன்றத்தில் விடுதலை செய்யப்படும் வரையில் அப்பதவியில் நீடித்தார். பின்னர் வழக்கம்போல் முதல்வர் பதவியில் இருந்து விலகி, ஜெயலலிதாவின் அமைச்சரவையில் தொடர்ந்தார்.
3ஆம் முறை முதல்வர்
கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா உயிரிழந்ந்தார். இதைத் தொடர்ந்து 3ஆவது முறையாக ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். ஆனால் கட்சியில் போதிய ஆதரவு இல்லை என்ற நிலையிலும், சசிகலா தரப்பு நிர்பந்தம் செய்ததாலும் முதல்வர் பதவியில் இருந்து விலகினார்.
தர்ம யுத்தம்
இதை தொடர்ந்து அதிமுகவுக்கு உரிமை கோரி தர்ம யுத்தத்தை தொடங்கினார். இதற்கிடையே, எடப்பாடி பழனிச்சாமி புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். மற்றொரு புறம், சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்றுவிட, அதிமுகவை யார் கைப்பற்றுவது என்ற குழப்பம் நீடித்தது.
இத்தகைய சூழலில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி அணிகள் இரண்டும் ஒன்றிணைந்தன. ஓபிஎஸ் கட்சியின் ஒருங்கிணைப்பாளராகவும், துணை முதல்வராகவும் பொறுப்பேற்றுக் கொண்டார்.
மீண்டும் சவால்கள்
2021 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தோல்வியுற்ற நிலையில் எடப்பாடி பழனிச்சாமி எதிர்க்கட்சித் தலைவராகவும், ஓபிஎஸ் எதிர்க்கட்சித் துணைத் தலைவராகவும் பொறுப்பேற்றுக் கொண்டனர். ஆனால், 2022ஆம் ஆண்டு ஜூன் 23ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக் குழு கூட்டத்தில் பொதுச் செயலாளரை தேர்வு செய்வது தொடர்பாக விவாதம் நடந்தபோது பெருவாரியான உறுப்பினர்கள் எடப்பாடி பழனிச்சாமியை ஆதரித்தனர்.
இந்த கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓபிஎஸ் தரப்பு நீதிமன்றத்தை நாடிய நிலையில், அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். ஓபிஎஸ் அதிமுகவிற்கு உரிமை கோரி வரும் நிலையில், அதுதொடர்பான இறுதி முடிவு நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தின் கைகளில் உள்ளது.