இந்திரா காந்திக்கு பிறகு முக்கிய துறைகளை நிர்வகித்த பெருமைக்குரிய முதல் தமிழகத்து பெண் நிர்மலா!
இந்தியாவில் இந்திரா காந்திக்குப்பிறகு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் மற்றும் நிதியமைச்சர் என்ற பெருமைகளைத் தன்னகத்தே கொண்டுள்ள முதல் தமிழகத்து பெண் தான் அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
டெல்லியில் பொருளாதார பாடம் பயின்றவர் தற்போது மத்திய அமைச்சரவையில் நிதியமைச்சராக பதவியில் உள்ளார். பாரதீய ஜனதாக கட்சியில் இணைந்து சில ஆண்டுகளிலே தன்னுடைய உழைப்பினால் மத்திய அமைச்சர் பதவியைப் பெற்ற மதுரைப் பெண் நிர்மலா சீதாராமன் கடந்து வந்த அரசியல் பயணம் குறித்த சுவாரஸ்சிய தகவல்கள் இதோ..
ஆரம்ப கால வாழ்க்கை:
தமிழகத்தின் கோவில் நகரம் மற்றும் தூங்கா நகரமான மதுரையை பூர்வீகமாக கொண்ட நிர்மலா சீதாராமன் கடந்த 1959 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18 ஆம் தேதி சாவித்திரி – நாராயணன் சீதாராமன் தம்பதியினருக்கு மகளாகப் பிறந்தார். இவரது தந்தை ரயில்வேயில் பணியாற்றியதால் அடிக்கடி இடம் மாற்றம் செய்ய நேரிட்டது.
தனது பள்ளிப்படிப்பு மற்றும் கல்லூரி படிப்பை திருச்சியில் மேற்கொண்ட நிர்மலா, டெல்லி சென்று பொருளாதார பாடப்பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றார். பின்னர் இந்திய- ஐரோப்பிய ஜவுளி வர்த்தகம் தொடர்பாக ஆராய்ச்சிப் படிப்பை முடித்தார். அப்போது தன்னுடன் படித்த பரக்கல பிரபாகர் என்பவரை கடந்த 1986 ஆம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டு லண்டனில் செட் ஆகிவிட்டார். அங்கு பிரைஸ் வாட்டர் ஹவுஸ்,பிபிசி போன்ற நிறுவனங்களில் பணிபுரிந்தார்.
பாரதீய ஜனதா கட்சியில் அரசியல் பயணம் ஆரம்பம்:
லண்டன் சென்று திரும்பிய இவர் கணவரின் சொந்த ஊரில் அதாவது ஆந்திராவில் செட்டில் ஆனார். பின்னர் அங்கு ஆதரவற்ற குழந்தைகளுக்கானப் பள்ளியைத் தொடங்கி நடத்தி வருகிறார். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக குரல் கொடுத்த இவருக்கு 2003ல் தேசிய மகளிர் ஆணையத்தில் உறுப்பினராக சேர்ந்தப் போது பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான சுஷ்மா சுவராஜுடன் நட்பு கிடைத்தது. இதனையடுத்து தான் பாரதீய ஜனதா கட்சியில் 2006 ல் தேசிய செயற்குழுவில் இடம் பிடித்தார். கட்சியில் சாதாரண பேச்சாளராக தனது பயணத்தைத் தொடங்கி இவர் முக்கிய பேச்சாளராக வளர்ந்தார்.
பின்னர் அடுத்த 4 ஆண்டுகளிலேயே 2010ல் அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் அந்தஸ்திக்கு உயர்ந்தார். பின்னர் கட்சியின் நலனுக்காக சிறப்பான செயல்பாடுகளில் ஈடுபட்டதால் இவருக்கு 2014 ல் மத்திய வர்த்தகத்துறை இணையமைச்சராக பதவி கிடைத்தது.தனக்கு கிடைத்த பதவியை சிறப்பாக மேற்கொண்ட வந்த நிலையில் தான், ஆந்திரா மற்றும் கர்நாடகவில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வானதையடுத்து 2017 ல் பாதுகாப்புத் துறை அமைச்சராக நிர்மலாவிற்கு மிகப்பெரிய துறை வழங்கப்பட்டது.
“இந்திரா காந்திக்குப் பிறகு பாதுகாப்புத் துறை அமைச்சர் பதவி வகித்த இரண்டாவது பெண்“ நிர்மலா என்ற பெருமையைப் பெற்றார். அதிலும் தமிழகத்துப் பெண் என்ற கூடுதல் பெருமையோடு பாதுகாப்புத் துறையில் தன் பணிகளை சிறப்பாக மேற்கொண்டு வந்தார். பின்னர் இந்தியாவில் மீண்டும் மோடி ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு மத்திய நிதியமைச்சராக பதவி வகித்து வருகிறார். குறிப்பாக இந்திரா காந்திக்குப் பிறகு மத்திய பட்ஜெட் தாக்கல் செய்த முதல் பெண் அமைச்சர் என்பதும், 6 வது தமிழர் என்ற பெருமையைக் கொண்டிருக்கிறார் நிர்மலா சீதாராமன்..
தற்போது மத்திய நிதியமைச்சராக பதவி வகித்து வரும் நிர்மலா சீதாராமனுக்குப் படிக்கும் காலத்தில் இவரின் விருப்ப பாடம், “ உலகமயமாக்கலும், வளரும் நாடுகளின் மீதான அதன் விளைவும் என்பதாக ஆர்வம் இருந்த நிலையில் தான், இவரை மத்திய நிதியமைச்சராகியுள்ளது. இதோடு மிகுந்த பேச்சுத்திறன் வாய்ந்தவராகவும், தலைமைப் பண்பும் இளம் வயதிலேயே நிர்மலாவுக்கு இருந்தது தான் இவரை பாதுகாப்புத்துறை மற்றும் நிதியமைச்சராக ஆக்கியுள்ளது. அரசியலில் மட்டுமில்லை கிளாசிக் இசையில் அதிக ஈடுபாடு கொண்டவரான நிர்மலா, தனக்கு பிடித்த ஏராளமானப் பாடல்களை சேகரித்து வைப்பதில் மிகுந்த ஆர்வத்துடன் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.