தமிழ் சினிமாவின் காதல் நாயகன்களில் ஒருவர் மோகன்!
தமிழ் சினிமாவின் நீண்ட நெடிய வரலாற்றை எடுத்துப் பார்த்தால், ஒவ்வொரு கால கட்டத்தில் ஒவ்வொரு நடிகர்கள் காதல் நாயகனாக வலம் வந்திருப்பார்கள். அதாவது, இந்த நடிகர்களுக்கு ஆக்ஷன், கிரைம் போன்ற கதைக்களங்களை விட காதல் கதைகள் தான் பெரிய அளவில் ஒர்க் அவுட் ஆகும்.
இன்னும் சொல்லப் போனால், காதல் தோரணை கொண்ட நாயகர்களுக்கு ஆண் ரசிகர்களைக் காட்டிலும், பெண் ரசிகைகள் தான் அதிக அளவில் இருப்பார்கள். 1960களில் வந்த சினிமாவை எடுத்துக் கொண்டால், அப்போதைய காதல் நாயகனாக வலம் வந்தவர் ஜெமினி கணேசன்.
இதேபோன்று, 1990 முதல் 2000 ஆம் ஆண்டு வரை எடுத்துக் கொண்டால் அரவிந்த் சாமி அந்த இடத்தை தக்க வைத்திருந்தார். 2000க்கு பிறகு மாதவன் அந்த இடத்துக்கு வந்தார். ஏறக்குறைய இதற்குப் பிறகு வந்த அனேக நடிகர்கள் காதல் நாயகன்களாக அறியப்பட்டாலும், அடுத்தடுத்து ஆக்ஷன், கிரைம் என்று கலவையான கதைக்களங்களில் நடித்தவர்கள் தாம்.
முன்னதாக, 1980 முதல் 1990களின் மத்திய காலம் வரை ஒரு இடைவெளி இருக்கிறது அல்லவா. அந்த சமயத்தில் காதல் நாயகனாக வலம் வந்தவர் தான் நடிகர் மோகன். இவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் காதல் காட்சிகள் தத்ரூபமாக நம் கண் முன்னே நிறுத்தப்பட்டிருக்கும்.
மோகன் தமிழர் அல்ல
மோகனின் திரை வாழ்க்கை பெரும்பாலும் தமிழ் உலகைச் சார்ந்தது மட்டுமே. சுருக்கமாக சொல்வது என்றால், மோகன் மொத்தத்தில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அதில் 80 சதவீத திரைப்படங்கள் தமிழில் வெளிவந்தவை ஆகும். ஆனால், இவரது பூர்வீகம் கர்நாடகா ஆகும்.
கடந்த 1956ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் தேதி கர்நாடக மாநிலத்தின் முல்பகல் என்னும் ஊரில் மோகன் பிறந்தார். சினிமாவுக்குள் அடியெடுத்து வைத்தபோதே பெரும் புகழ் அடையத் தொடங்கினார்.
ரெஸ்டாரண்டில் பணியாற்றியவர்
தன்னுடைய இளமைக் காலத்தில் மோகன் ஒரு ரெஸ்டாரண்டில் பணியாற்றிக் கொண்டிருந்தார். அங்கு அவரைக் கண்ட இயக்குநர் பி.வி. கரந்த், அவரை நடிப்புத் தொழிலுக்கு அழைத்து வந்தார். தொடக்கத்தில் நாடகம் ஒன்றில் மோகன் நடித்தார்.
கடந்த 1977ஆம் ஆண்டு நடிகர் கமல்ஹாசன் இயக்கத்தில், இயக்குநர் பாலு மகேந்திரா இயக்கிய கோகிலா என்ற திரைப்படத்தில் துணை நடிகராக மோகன் அறிமுகம் ஆனார். அந்தப் படத்தில் அவர் காட்டிய அசாத்தியமான நடிப்பு மூலமாக முதல் படத்திலேயே பெயரும், புகழும் அடைந்தார்.
வெள்ளி விழா நாயகன்
இதைத் தொடர்ந்து 1980இல் மோகன் நடித்த மூடு பனி என்ற திரைப்படம் பெரும் வெற்றி அடைந்தது. இதில் இருந்து, பெரும்பாலும் அவருக்கு ஏறு முகம் தான். நடிக்கும் படங்கள் பெரும்பாலும் பல நாட்களைக் கடந்து தியேட்டர்களை ஆக்கிரமித்துக் கொண்டதால் வெள்ளி விழா நாயகன் என்ற பட்டத்தை திரைத்துறை இவருக்கு சூட்டியது.
ஃபிலிம்பேர் விருது
காதல் காட்சிகள் மூலமாக நிறைய ரசிகர்கள், ரசிகைகளின் மனதை மோகன் கொள்ளையடித்தார் என்ற போதிலும், திரைத்துறையில் அவர் விருதுகளை வாங்கி குவிக்கவில்லை. நிறைய படங்கள் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட போதிலும் அவை தேர்வாகவில்லை. இருப்பினும், 1982ஆம் ஆண்டு வெளியான பயணங்கள் முடிவதில்லை என்ற படத்திற்கு மட்டும் சிறந்த நடிகருக்கான ஃபிலிம்பேர் விருது கிடைத்தது.
ஒரே சமயத்தில் ஹாட்ரிக் வெற்றி
kஅடந்த 1985ஆம் ஆண்டில் இரண்டு நாட்களுக்குள் 3 படங்கள் மோகன் நடிப்பில் வெளியிடப்பட்டன. என்ன ஆச்சரியம் என்றால், அனைத்து படங்களும் செம்ம ஹிட் அடித்தது. தமிழ் சினிமாவில் வேறெந்த நடிகரும் இப்படியொரு சாதனையை இதுவரையில் நிகழ்த்தவில்லை. குறிப்பாக, மற்றொரு நடிகரின் படம் போட்டிக்கு வந்து விடும் என்ற எண்ணத்தில் பட வெளியீட்டை தள்ளி வைத்த கதைகள் தான் உண்டு. சிலர் போட்டிக்குப், போட்டியாகவும் வெளியிடுவார்கள்.
தன் படத்திற்கு தானே போட்டியாக இறங்கி அனைத்தையும் ஹிட் படங்களாக்கிய மோகனின் சாதனையை இன்றளவும் யாரும் செய்ய இயலவில்லை.
பொருத்தமான இளையராஜா
மோகனின் படங்கள் பெரும்பாலும் காதல் கதைக்களத்தை கொண்டவை என்ற நிலையில், அவரது படங்களுக்கு இசைஞானி இளையராஜாவின் இசை அப்படியே பொருத்தமாகிப் போனது. குறிப்பாக, 25 ஆண்டுகளைக் கடந்தும், ரசனைக்குரிய பாடல்களாக அவை இருக்கின்றன.
மௌன ராகம் படத்தில் வரும் திருமணத்திற்கு பிறகான காதல் காட்சிகளும், அதற்கு பொருத்தமான பாடல்களும் செம்ம ஹிட் அடித்தன. இன்னும் சொல்லப் போனால், பல ஆண்டுகளுக்குப் பின்னால், இந்தப் படத்தை மையமாக வைத்து, இயக்குநர் அட்லியின் இயக்கத்தில் ராஜா, ராணி திரைப்படம் வெளியாகி ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.
சூறாவாளி குறைந்தது
1977இல் தொடங்கி, 1999 வரையிலும் சுமார் 22 ஆண்டுகள் தமிழ் சினிமாவில் சூறாவளி போல சுழன்று கொண்டிருந்தார் மோகன். இதற்குப் பிறகு திரைத்துறையில் அவர் பெரிய அளவிற்கு ஆர்வம் காட்டவில்லை. சில காலம் ஒதுங்கியிருந்த நிலையில், கடந்த 2008, 2009 போன்ற ஆண்டுகளில் திரைப்படங்களில் நடித்தார். பின்னர் ஓய்வெடுத்த நிலையில், தற்போது 2022ஆம் ஆண்டில் ஹரா என்ற படத்தில் நடித்து வருகிறார்.