Mohammed Siraj (முகமது சிராஜ்)

    ஆட்டோ டிரைவரான தனது தந்தையின் கனவை நனவாக்கிய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ்!

    கிரிக்கெட் தான் வாழ்க்கை என்று தவம் போல நினைத்து இந்த விளையாட்டில் தீவிரம் காட்டி கடுமையாக உழைப்பவர்கள் நிச்சயம் தேசிய அணியில் இடம்பெற்று நாட்டுக்காக ஒருநாள் விளையாடியே தீருவார்கள். அப்படி தனது தந்தை மற்றும் தனது கனவை நனவாக்கி கொண்ட இந்திய கிரிக்கெட் வீரர்களில் முக்கியமானவர் வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ்.

    சாதாரண எளிய குடும்ப பின்னணியில் இருந்த உழைத்து மேலே வந்த முகமது சிராஜின் தந்தை ஒரு ஆட்டோ டிரைவர் ஆவார். சாதாரண ஆட்டோ டிரைவரின் மகனாக இருந்து கொண்டு நாட்டில் கிரிக்கெட் விளையாடும் லட்சக்கணக்கானோரின் உச்சக்கட்ட கனவாக இருக்கும் இந்திய அணியிலும் இடம் பெற்று நினைத்ததை சாதித்தவர் இந்த முகமது சிராஜ்.

    கடந்த 2020-ஆம் ஆண்டு கோவிட் தொற்றுக்கு மத்தியில் முகமது சிராஜ் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் சென்ற இந்திய அணியில் இடம்பெற்றார். ஆனால் எதிர்பாராவிதமாக ஹைதராபாத்தில் வசித்த இவரின் தந்தை முகமது கவுஸ் 53 வயதில் திடீர் உடல்நலக்குறைவால் காலமானார். இந்திய கிரிக்கெட் வீரராக தன்னை பார்க்க வேண்டும் என கடைசி வரை உழைத்த தந்தையின் உடலை கூட கடைசியாக அவரால் பார்க்க வர முடியாமல் போனது. காரணம் பெருந்தொற்று தீவிரமாக இருந்ததால் ஆஸ்திரேலியாவில் கோவிட் கட்டுப்பாடுகளும் தீவிரமாக இருந்ததே.

    தனது தந்தையின் இறுதி சடங்கில் பங்கேற்க முடியாதது தனக்கு மிகப்பெரிய துயரம் என்றாலும் “என் மகனே, நீ நம் நாட்டைப் பெருமைப்படுத்த வேண்டும்” என்ற என் தந்தையின் வார்த்தை தான் துக்கத்தை மறந்து ஆஸ்திரேலிய தொடரில் என்னை பங்கேற்க உதவியது என்று சிராஜ் கண்ணீர் மல்க கூறியது விளையாட்டின் மீது அவரும் மறைந்த அவரது தந்தையும் வைத்திருந்த வேட்கையை பறைசாற்றியது.

    பிறப்பு:

    முகமது கவுஸ் – ஷபானா பேகம் தம்பதியருக்கு முகமது சிராஜ் கடந்த 1994-ஆம் ஆண்டு மார்ச் 13 அன்று ஆந்திராவில் உள்ள ஹைதராபாத்தில் ஒரு இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை ஆட்டோ டிரைவராக இருந்தார். ஹைதராபாத்தில் அமைந்துள்ள நம்பல்லியில் உள்ள சஃபா ஜூனியர் கல்லூரியில் பள்ளி படிப்பை முடித்தாலும் கிரிக்கெட் மீதுள்ள ஆர்வத்தால் அதன்பிறகு படிப்பை தொடராமல் முழு நேரத்தையும் தனது கிரிக்கெட் திறமையை மெருகேற்ற செலவிட்டார்.

    கிரிக்கெட் வாழ்க்கை:

    டொமஸ்டிக்:

    சார்மினார் கிரிக்கெட் கிளப்பிற்காக கிரிக்கெட் விளையாடிய முகமது சிராஜ் தனது அபார பந்துவீச்சு காரணமாக மாநிலத்தின் 23 வயதுக்குட்பட்ட அணிக்கு தேர்வு செய்யப்பட்டார். பின் 2015-16 ரஞ்சி டிராபி போட்டியில் ஹைதராபாத் அணிக்காக சிராஜ் தனது முதல் தர போட்டியில் அறிமுகமானார். இதில் சிறப்பாக செயல்பட்டதை தொடர்ந்து அடுத்த ஆண்டு 2016-ல் சையது முஷ்டாக் அலி டிராபி போட்டியில் தனது டி20-ல் அறிமுகமானார்.

    இதற்கிடையே 2016-17 ரஞ்சி டிராபி போட்டியின் போது ஹைதராபாத் அணிக்காக பந்து வீசி 18.92 என்ற சராசரியில் 41 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட் வீழ்த்திய வீரராக உருவெடுத்தார். 2017-ஆம் ஆண்டு IPL போட்டிகளில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் ரூ.2.6 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். அடுத்த ஆண்டு ஜனவரி 2018-ல் 2018 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியால் வாங்கப்பட்டார். 2022 சீரிஸ் வரை பெங்களூரு அணி வீராகவே IPL-ல் சிராஜ் தக்க வைக்கப்பட்டுள்ளார்.

    இன்டர்நேஷ்னல்:

    இவரது சர்வதேச கிரிக்கெட் போட்டி அறிமுகத்தைப் பொறுத்த வரை கடந்த 2017-ஆம் ஆண்டு நவம்பர் 4 அன்று நியூசிலாந்திற்கு எதிரான டி20 போட்டியில் விளையாடியதன் மூலம் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அறிமுகமானார். செப்டம்பர் 2018-ல், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடருக்கான இந்தியாவின் டெஸ்ட் அணியில் அவர் இடம் பெற்றார், ஆனால் விளையாடவில்லை. சர்வதேச ஒருநாள் (அடிலெய்டு ஓவல் மைதானத்தில்) மற்றும் டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக முறையே ஜனவரி 15, 2019 மற்றும் டிசம்பர் 26, 2020 ஆகிய தேதிகளில் முதல் முதலில் களமிறங்கினார் முகமது சிராஜ். சிறந்த வேகப்பந்து வீச்சாளராக உருவெடுத்துள்ள முகமது சிராஜ் தனது செயல்திறன் மூலம் பல போட்டிகளில் இந்தியாவின் வெற்றிக்கு பங்களித்துள்ளார்.

    ஜனவரி 2021-ல், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரின் நான்காவது டெஸ்டின் போது, டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் ஐந்து விக்கெட்டுகளை சிராஜ் கைப்பற்றினார். பேட்ஸ்மேன்கள் எதிர்பாராத போது விரைவான சூப்பர் பவுன்சரை வீசுவதில் வல்லவரான சிராஜ், கடந்த 2020 IPL-ல் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டி ஒன்றில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு, ஐபிஎல் போட்டியில் அடுத்தடுத்து 2 மெய்டன் ஓவர்களை (4 ஓவர்கள் வீசி 2 மெய்டன்கள், 8 ரன்கள்) வீசிய முதல் பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்று அசத்தினார்.

    2020 ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக பந்து வீசி தன்னுடைய RCB அணிபிளே-ஆஃப் சுற்றுக்கு செல்ல உதவினார். சமீபத்தில் நடைபெற்ற வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் போட்டியில் விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் 2022-ம் ஆண்டு இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய பவுலர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

    தொடர்ந்து சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வரும் சிராஜ் தந்தைக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றும் வகையில் நாட்டுக்கு மேலும் பல பெருமை சேர்க்கும் வகையிலான சாதனைகளை படைப்பார் என்று அவரது ரசிகர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.