Mohammed Shami (முகமது ஷமி)

    அதிவேகமாக 100 விக்கெட்டுகளை எடுத்த இந்திய வீரர்களில் முதலிடம் பிடித்த முஹம்மது சமி!

    கிரிக்கெட்டில் வேகப்பந்து வீச்சாளர் அல்லது ஸ்பின் பௌலர் என எப்படி இருந்தாலும், அவர்களுக்கு மிக முக்கியமான திறமை ஒன்று வேண்டும். அதாவது, இவர்களது பந்து எப்போது, எப்படி, எந்த திசையில் திரும்பும் என்பதை பேட்ஸ்மேன்கள் கணிக்க முடியாதபடி இருக்க வேண்டும்.

    குறிப்பாக, ஸ்விங் எனப்படும் திறமையை கையாண்டால் மட்டுமே பந்து கணிக்க முடியாத திசையில் பயணப்படும். அத்தகைய திறனை மிகுதியாகக் கொண்டவர் தான் இந்திய கிரிக்கெட் அணியின் பந்து வீச்சாளர் முகமது சமி. அதிலும், இவர் ரிவர்ஸ் ஸ்விங் உத்தியை கையாளும் திறமையான வீரர் ஆவார்.

    சர்வதேச அளவிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிவேகமாக 100 விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய வீரர்களில் முஹம்மது சமி இப்போதும் முதலிடத்தில் இருக்கிறார்.

    சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்த இவர், மிகுந்த போராட்டங்களுக்கு மத்தியில் கிரிக்கெட் உலகில் தடம் பதித்தார். குறிப்பாக, 15 வயதில் இருந்து கடுமையான பயிற்சிகளை செய்து உள்ளூர் அணிகளில் படிப்படியாக இடம்பிடித்து, அதன் பின்னர் சர்வதேச கிரிக்கெட் போட்டிக்குள் நுழைந்தவர்.

    தந்தையை போல மகன்

    உத்தரப் பிரதேச மாநிலம், அம்ரோஹா அருகேயுள்ள சஹாஸ்பூர் என்னும் கிராமத்தில், தௌசீஃப் அலி என்பவருக்கு பிறந்த 5 குழந்தைகளில் ஒருவர் தான் முஹம்மது சமி. கடந்த 1990ஆம் ஆண்டு செப்டம்பர் 3ஆம் தேதி பிறந்தார். தந்தை தௌசீஃப் அலி ஒரு ஏழ்மையான விவசாயி தான் என்ற போதிலும், இளமைக் காலத்தில் கிரிக்கெட் மீது அதிக பற்று கொண்டவர். குறிப்பாக, வேகப்பந்து வீச்சாளராக விளையாடி வந்தவர்.

    ஆக, தந்தையின் திறமை மற்றும் ஆர்வத்தை அப்படியே உள்வாங்கிக் கொண்ட முஹம்மது சமி, சிறுவயதிலேயே அபராமகாக பந்து வீச தொடங்கினார். இதைத் தொடர்ந்து 15ஆவது வயதில் பக்ருதீன் சித்திக் என்ற பயிற்சியாளரிடம் சேர்ந்து பயிற்சி பெற தொடங்கினார்.

    கொல்கத்தாவுக்கு புலம்பெயர்ந்தார்

    உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற கிரிக்கெட் தேர்வில் முஹம்மது சமி தேர்வாக முடியாத நிலையில், அங்கிருந்து அவர் கொல்கத்தாவுக்கு இடம்பெயர்ந்து, அங்குள்ள அணிகளில் சேருவதற்கு முயற்சி செய்தார். இதன் விளைவாக 19 வயதுக்கு உட்பட்டோர் அணியில் இடம்பிடித்து, அடுத்தடுத்த உள்ளூர் போட்டிகளில் விளையாடி வந்தார்.

    கங்குலி மூலமாக ரஞ்சி டிராபி அணியில் சேர்ந்த சமி

    கொல்கத்தாவில் இருந்தபோது ஈடன் கார்டன் மைதானத்தில், அப்போதைய இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் சவுரவ் கங்குலி பேட்டிங் பயிற்சி செய்வதற்காக பந்து வீசினார் முகமது சமி. அவரது திறமையைக் கண்டு பாராட்டிய கங்குலி, மேற்கு வங்க கிரிக்கெட் கிளப்பிற்கு இவரை பரிந்துரை செய்தார். இதைத் தொடர்ந்து 2010 – 11 ரஞ்சிக் கோப்பை தொடரில் இடம்பிடித்தார் முகம்மது சமி.

    ஐபிஎல் அணியில் முகமது சமி

    2011ஆம் ஆண்டில் ஐபிஎல் போட்டிகளுக்குள் நுழைந்த முகம்மது சமி, கொல்கத்தா அணி சார்பில் விளையாடினார். ஆனால், 2013ஆம் ஆண்டு வரையில் ஓரிரு போட்டிகளை தவிர பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்நிலையில் 2014ஆம் ஆண்டு டெல்லி அணியில் சேர்ந்து விளையாடினார். இதற்கிடையே இந்திய அணியிலும் வாய்ப்பு கிடைத்தது.

    2019ஆம் ஆண்டு முதல் பஞ்சாப் அணிக்காக விளையாடி வந்த சமி, தற்போது ஐபிஎல்-லில் புதிதாக உருவாகியுள்ள குஜராத் அணி சார்பில் விளையாடி வருகிறார்.

    சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்

    தான் தினசரி பயிற்சி செய்த அதே கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் சர்வதேச அளவிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் வாய்ப்பு முஹம்மது சமிக்கு கிடைத்தது. 2013ஆம் ஆண்டில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் பங்கேற்றார்.

    ஒருநாள் போட்டியில்

    முதன் முதலாக 2013ஆம் ஆண்டு ஜனவரி மாதம் டெல்லியில் பாகிஸ்தானுக்கு எதிரான சர்வதேச ஒருநாள் போட்டியில் களமிறக்கப்பட்டார் முகமது சமி. அந்தப் போட்டியில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். 2015ஆம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் தொடரிலும் பாகிஸ்தானுக்கு எதிராக அபரமாக பந்து வீசினார் சமி.

    9 ஓவர்களை வீசிய அவர் 35 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 2019ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில், ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 100 விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய வீரர் என்ற சாதனையை அடைந்தார். அந்த ஆண்டில் மிக அதிக விக்கெட்டுகளை எடுத்துவரும் இவர்தான்.

    குடும்ப பிரச்சனை

    குடும்பத்தில் வன்முறையில் ஈடுபட்டதாக முஹம்மது சமி உள்ளிட்ட பலர் மீது அவரது மனைவி 2018ஆம் ஆண்டில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் பல்வேறு பிரிவுகளின் கீழ் சமி மீது வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக இந்திய கிரிக்கெட் அணியில் அவர் தற்போது தேர்வு செய்யப்படவில்லை.