மதுரையை ஆட்டிவைத்த மு.க.அழகிரி… கடந்து வந்த அரசியல் பாதை!
கருணாநிதியின் மகனாக இளம் வயதிலேயே அரசியலில் கால் பதித்த மு.க. அழகிரி சந்தித்த சர்ச்சைகளும், பிரச்சனைகளும் ஏராளம். இளமைப் பருவம் முதல் அரசியலை விட்டு விலகியிருக்கும் இன்றைய காலக்கட்டம் வரை விளக்குகிறது இந்த சிறப்புத் தொகுப்பு…
குழந்தை பருவம்:
சென்னை கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில் முன்னாள் முதல்வரும், திமுகவின் முன்னாள் தலைவருமான மறைந்த கருணாநிதிக்கும் – தயாளு அம்மாளுக்கும் முதல் மகனாக 1951ம் ஆண்டு ஜனவரி 30ம் தேதி பிறந்தவர் மு.க. அழகிரி. கருணாநிதிக்கு தமிழ் எழுத்தாளர் அழகிரிசாமி மீது இருந்த ஈர்ப்பு காரணமாக தனது மூத்த மகனுக்கு ‘அழகிரி’ என பெயர் சூட்டினார். இவருக்கு செல்வி என்ற தங்கையும், மு.க.ஸ்டாலின், மு.க.தமிழரசு ஆகிய சகோதரகளும் உள்ளனர். சென்னை சேத்துப்பட்டில் உள்ள கிறிஸ்தவக் கல்லூரி உயர்நிலைப் பள்ளியில் படிப்பை முடித்த மு.க.அழகிரி, சென்னை பிரெசிடென்சி கல்லூரியில் வரலாற்று பாடத்தில் பட்டம் பெற்றுள்ளார்.
காந்தி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்ட மு.க. அழகிரிக்கும், கயல்விழி, அஞ்சுகச்செல்வி என்ற இரண்டு மகள்களும், துரை தயாநிதி என்ற மகனும் உள்ளனர். முரசொலி பத்திரிகையை கவனித்து கொள்வதற்காக 1980ம் ஆண்டு சென்னையில் இருந்து மதுரை வந்த இவர், இன்று வரை மதுரை சத்யசாய் நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். 1989ம் ஆண்டுக்குப் பிறகு மதுரையில் இவரது செல்வாக்கு பல மடங்கு அதிகரித்தது இதற்கு முக்கிய காரணமாகும்.
அரசியல் வாழ்க்கையும் சர்ச்சைகளும்:
தந்தை மு.கருணாநிதியின் வழியில் மிக இளம் வயதிலேயே அரசியலில் கால் பதித்த மு.க.அழகிரி, 1983ம் ஆண்டு முதல் மதுரையை திமுகவின் கோட்டையாக மாற பாடுபட்டவர். 2009ம் ஆண்டு திருமங்கலம் இடைத்தேர்தலில் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு திமுகவுக்கு வெற்றியைப் பெற்றுத் தந்ததால், அவருக்கு தென்மண்டல அமைப்பு செயலாளர் பதவியை கருணாநிதி வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து 2009ம் ஆண்டு மக்களவை தேர்தலில் திமுக சார்பில் மதுரையில் களமிறங்கிய மு.க.அழகிரி, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளரான மறைந்த பி.மோகனை விட ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 985 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இதனையடுத்து அவருக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைத்தது.
மத்திய அமைச்சரவையில், ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சராக 2009ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரை பதவி வகித்தார். அதன் பின்னர் 2013 மார்ச் 20 அன்று, மத்திய அரசுக்கு கொடுத்த ஆதரவை திமுக, வாபஸ் பெற்றதையடுத்து, மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
மு.க.ஸ்டாலினுக்கும் மு.க.அழகிரிக்கும் இடையிலான அரசியல் போட்டி அவ்வப்போது வெளியாகி கொண்டிருந்தது. மு.க.ஸ்டாலின் முக்கியத்துவம் பெறக்கூடிய சந்தர்ப்பங்களில் எல்லாம் மு.க.அழகிரி எதிரான கருத்துக்களை கூறி வந்தது திமுகவில் புயலைக் கிளப்பியது. இதனையடுத்து கட்சிக்கு விரோதமான செயல்களில் ஈடுபடுவதாக கூறி மார்ச் 25, 2014ம் ஆண்டு, திமுகவின் அடிப்படை உறுப்பினர் மற்றும் அமைப்புச் செயலாளர் பதவியில் இருந்து கருணாநிதியால் நீக்கப்பட்டார்.
2017ம் ஆண்டு திமுகவின் செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்ட போதும் எந்த கருத்தும் சொல்லாமல் அரசியலில் அமைதி காத்தார். 2018ம் ஆண்டு மு.கருணாநிதியின் மறைவிக்கு பின் 30 நாட்கள் கழித்து சென்னையில் தனது பலத்தைக் காட்டும் படியாக மாபெரும் பேரணியை நடத்திக் காட்டினார்.
அடுத்த இரண்டு ஆண்டுகள் அமைதியாக இருந்த மு.க.அழகிரி அரசியல் பயணத்தில் முக்கிய முடிவுகளை எடுப்பதாக கூறி பரபரப்பைக் கிளப்பினார். 2020ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் பாஜக தலைவர்களிடம் இருந்து மு.க.அழகிரிக்கு அழைப்பு வந்ததாக தகவல்கள் வெளியாகின. ரஜினியின் நண்பரான மு.க.அழகிரி அவர் கட்சி ஆரம்பித்தால் அதில் இணையலாம் என தகவல்கள் வெளியாகின. ஆனால் ரஜினி படத்தில் நடிக்க கூப்பிட்டால் சேர்ந்து நடிப்பேன் எனக்கூறி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
வழக்குகள்:
முன்னாள் தி.மு.க. அமைச்சர் தா. கிருட்டிணன், 2003 மே மாதம் 20ஆம் தேதி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், மு.க.அழகிரி உட்பட 13 பேர் மீது வழக்குத் தொடரப்பட்டது. ஆனால் சாட்சிகளும், ஆதாரங்களும் சரிவர இல்லாததால் மு.க.அழகிரி உள்ளிட்ட 13 பேரையும் 2008ம் ஆண்டு சித்தூர் நீதிமன்றம் விடுவித்தது. திருமங்கலம் இடைத்தேர்தலில் ஓட்டுக்கு பணம், மதுரை தினகரன் நாளிதழ் அலுவலக தாக்குதல் போன்ற விஷயங்களிலும் மு.க.அழகிரி பெயர் அடிபட்டது. 2011ம் ஆண்டு அதிமுக ஆட்சியின் போது, அழகிரியின் மகன் தயாநிதி மீது, கிரானைட் முறைகேடு வழக்கு தொடரப்பட்டது.