HOME » MAYAWATI

Mayawati (மாயாவதி)

    இந்தியாவின் முதல் தலித் பெண் முதல்வர் மாயாவதி – அரசியலில் இவரது வளர்ச்சியும், வீழ்ச்சியும்!

    இந்தியாவை பொருத்தவரையில், திருமணமே செய்து கொள்ளாமல், தனக்கென்று தனி குடும்பம் இல்லாமல் தனி மனிதியாக பொது வாழ்க்கையில் ஈடுபட்டு மாபெரும் தலைவர்களாக வலம் வந்த பெண்களாக சிலரை குறிப்பிடலாம். தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, மேற்கு வங்க மாநிலத்தின் தற்போதைய முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் உத்தரப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வர் மாயாவதி உள்ளிட்டோர் இந்தப் பட்டியலில் முக்கியமானவர்கள்.

    இதில், மற்ற இருவரைக் காட்டிலும் மாயாவதியின் வளர்ச்சி மற்றும் வெற்றி தனித்துவம் மிகுந்தது. ஏனென்றால் மாயாவதி தலித் குடும்பத்தைச் சேர்ந்தவர். அது மட்டுமல்லாமல் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, அதிகாரப் பதவிகளை அடைந்தவர். சுருக்கமாக சொன்னால், ஒரு கால கட்டத்தில் பிரதமர் பதவிக்கு மாயாவதி வரக் கூடும் என்று எதிர்ப்பார்ப்பு இருந்தது.

    ஏழ்மையான, ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து உயர் பதவியை அடைந்தவர் என்றாலும், இந்திய அரசியல் தலைவர்களை பொதுவாக சூழ்ந்து கொள்ளும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு மாயாவதியும் விதிவிலக்கு அல்ல. அதேசமயம், உத்தரப் பிரதேச மாநிலத்தில் பல வளர்ச்சித் திட்டங்களையும், சமூகப் பாதுகாப்பு திட்டங்களையும் அவரது பதவிக் காலத்தில் செயல்படுத்தியிருக்கிறார்.

    பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியத் தலைவராக இருக்கும் மாயாவதி, அக்கட்சித் தொண்டர்களால் ‘சகோதரி’ (பேஹம்) என்று அன்போடு அழைக்கப்படுகிறார். அடிப்படையில் ஆசிரியராகப் பணியாற்றி வந்த மாயாவதிக்கு ஐஏஎஸ் அதிகாரியாக வர வேண்டும் என்ற கனவு இருந்தது. ஆனால், அதில் இருந்து தடம் மாறி அவர் அரசியலுக்குள் நுழைந்தது எப்படி, சாமானிய பெண்ணாக இருப்பினும் உத்தரப் பிரதேச மாநிலத்தின் முதல்வராக 4 முறை தேர்வானது எப்படி, தற்போதைய அரசியல் வீழ்ச்சி போன்ற பல தகவல்களை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

    வாழ்க்கை குறிப்பு

    கடந்த 1956ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் நாள், டெல்லியைச் சேர்ந்த பிரபு தாஸ் என்பவரின் மகளாகப் பிறந்தார் மாயாவதி. பிரபுதாஸ் இந்திய அஞ்சல் நிலைய பணியாளராக பணியாற்றினார். இவருக்கு மொத்தம் 9 குழந்தைகள். அதில் பெரும்பாலும் ஆண் பிள்ளைகளை தனியார் பள்ளியில் படிக்க வைத்த இவர், மாயாவதி உள்ளிட்ட அனைத்து பெண் குழந்தைகளையும் அரசுப் பள்ளியில் தான் படிக்க வைத்தார்.

    தந்தை அரசுப் பணியாளராக இருந்தாலும் கூட, தலித் பிரிவுகளில் ஒன்றான ஜாதவ் வகுப்பைச் சேர்ந்த மாயாவதியின் குடும்பத்தில் பெரிய அளவுக்கு வசதி எதுவும் இல்லை. இருப்பினும், விடா முயற்சியுடன் படித்து வந்த மாயாவதி 1983ஆம் ஆண்டில் டெல்லி பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பை நிறைவு செய்தார்.

    ஐஏஎஸ் கனவு

    ஐஏஎஸ் கனவுகளுடன் இருந்த மாயாவதி டெல்லியில் ஆசிரியராக தமது வாழ்க்கையை தொடங்கினார். இந்நிலையில், தலித் சமூகத்தைச் சேர்ந்த மாபெரும் அரசியல் தலைவரான கன்ஷி ராம், கடந்த 1977ஆம் ஆண்டில் மாயாவதியின் இல்லத்துக்கு வந்திருந்தபோது அவரது ஐஏஎஸ் கனவுகள் குறித்து தெரிந்து கொண்டார்.

    அந்த சமயத்தில் மாயாவதியிடம், “நான் உன்னை மாபெரும் தலைவராக உருவாக்குகிறேன். அன்றைய தினம் ஒரு ஐஏஎஸ் அதிகாரி, எண்ணற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் உன்னுடைய உத்தரவுக்காக காத்திருப்பார்கள்’’ என்று கன்ஷி ராம் சொன்னாராம். அவர் விளையாட்டுக்கு சொன்னாரோ அல்லது தீர்க்கமாக கணித்துச் சொன்னாரோ தெரியவில்லை, அவர் சொன்னதைப் போலவே மாயாவதியின் வாழ்க்கை மாறிவிட்டது.

    பகுஜன் சமாஜ் கட்சி தொடக்கம்

    மாயாவதிக்கு அரசியலில் நுழையும் ஆர்வத்தை ஏற்படுத்தியவர் கன்ஷி ராம். அவரே மாயாவதியின் குரு ஆவார். 1984ஆம் ஆண்டில் கன்ஷி ராம் பகுஜன் சமாஜ் கட்சியை தொடங்கியபோது, மாயாவதியும் அதில் பங்கெடுத்துக் கொண்டார். எனினும் 2003ஆம் ஆண்டில் தான் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக மாயாவதி தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயம், 2006, 2014 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டு, அவரே பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவராக தொடர்ந்து நீடித்து வருகிறார்.

    நாடாளுமன்ற உறுப்பினராக…

    1985 மற்றும் 1987 ஆகிய ஆண்டுகளில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு மாயாவதி தோல்வி அடைந்தார். இருப்பினும், 1989ஆம் ஆண்டில் முதன் முதலாக மக்களவை உறுப்பினராக வெற்றி பெற்ற அவர், மீண்டும் 1998, 1999 மற்றும் 2004 ஆகிய ஆண்டுகளில் எம்பியாக தேர்வானார்.

    அதேபோன்று 1994, 2004 மற்றும் 2012 ஆகிய ஆண்டுகளில் மாநிலங்களவை எம்பியாக மாயாவதி தேர்வு செய்யப்பட்டார். 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போனால், பிராந்திய கட்சிகளின் ஆதரவுடன் பிரதமராகி விடலாம் என்ற கனவில் மாயாவதி இருந்தார். ஆனால், உத்டரப் பிரதேச மாநிலத்தில் பாஜக பெருவாரியாக வெற்றி பெற்ற நிலையில், அதற்குப் பிறகு பகுஜன் சமாஜ் கட்சியின் அரசியல் பயணம் இறங்கு முகமாகவே இருக்கிறது.

    நான்கு முறை முதல்வர்

    முதன் முதலில் 1995ஆம் ஆண்டில் உத்தரப் பிரதேச முதல்வராக பதவியேற்ற மாயாவதி, அந்தப் பதவியில் 4 மாதங்கள் மட்டுமே நீடித்தார். பின்னர் 1997ஆம் ஆண்டில் 6 மாதங்களும், 2002 – 2003 காலகட்டத்தில் 17 மாதங்களும் முதல்வர் பதவியில் இருந்தார். பகுஜன் சமாஜ் கட்சிக்கு தனிப்பெரும்பான்மை இன்றி, பிற கட்சிகளின் ஆதரவில் முதல்வர் ஆன நிலையில், இடைப்பட்ட காலத்திலேயே ஆட்சிகள் கவிழ்ந்தன.

    இருப்பினும் 2007ஆம் ஆண்டில் பகுஜன் சமாஜ் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற நிலையில் 5 ஆண்டுகாலம் முழுமையாக ஆட்சியை நிறைவு செய்தார்.

    ஊழல் குற்றச்சாட்டுகள்

    உத்தரப் பிரதேச முதல்வராக நெடுஞ்சாலைகள், மெட்ரோ ரயில் திட்டங்கள் உள்ளிட்டவற்றை மாயாவதி செயல்படுத்தினாலும் ஊழல் குற்றச்சாட்டுகள் என்னும் கறை அவர் மீதும் படிந்தது. குறிப்பாக மாயாவதியின் பிறந்த நாள் விழாவுக்கு கட்சியினர் அணிவிக்கும் பண மாலை, அவரது புகழை பரப்பும் வகையில் மாநிலமெங்கிலும் அரசு செலவில் வைக்கப்பட்ட சிலைகள், கட்சி சின்னமான யானைக்கு சிலைகள் என்று பலதரப்பட்ட விமர்சனங்களை மாயாவதி எதிர்கொண்டார். அதே சமயம் 2012ஆம் ஆண்டில் ஆட்சியை இழந்த பிறகு கடந்த 10 ஆண்டுகளாக குறிப்பிடத்தக்க தேர்தல் வெற்றி எதையும் பகுஜன் சமாஜ் கட்சி பெறவில்லை.