Mamata Banerjee (மம்தா பானர்ஜி)

    ‘வங்கத்து பெண் புலி’ மம்தா பானர்ஜியின் அரசியல் வரலாறு!

    ஆண்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வரும் அரசியலில் கொண்ட கொள்கையில் பிடிப்போடும், அதிரடி நடவடிக்கைகளில் துடிப்போடும் இருந்து மேற்கு வங்க மாநிலத்தின் அசைக்க முடியாத அரசியல் சக்தியாக போற்றி புகழப்படும் மம்தா பானர்ஜி அரசியல் வாழ்க்கையில் கடந்து வந்த பாதையை பற்றி விரிவாக பார்க்கலாம்…

    பிறப்பு மற்றும் கல்வித்தகுதி:

    மம்தா பானர்ஜி மேற்கு வங்காளத்தில் உள்ள கல்கத்தாவில் (இன்றைய கொல்கத்தா) இந்து பெங்காலி குடும்பத்தைச் சேர்ந்த ப்ரோமிலேஸ்வர் பானர்ஜி மற்றும் காயத்ரி தேவி தம்பதிக்கு 1955-ம் ஆண்டு ஜனவரி 5-ம் தேதி பிறந்தார். மருத்துவ சிகிச்சை இல்லாததால் மம்தா பானர்ஜியின் தந்தை அவரது 17 வயதிலேயே காலமானார். இதனால் இளம் வயதிலேயே அவரது குடும்பத்தை வறுமை சூழ்ந்தது.

    தேஷ்பந்து சிஷு சிக்ஷாலேயில் பள்ளிப் படிப்பை முடிந்த மம்தா பாஜர்ஜி, ஜொக்மயா தேவி கல்லூரியில் வரலாற்றில் இளங்கலைப் பட்டம் பெற்றார். மற்றும் கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய வரலாற்றில் முதுகலைப் பட்டம் பெற்றார். மேலும் அவர் ஸ்ரீ ஷிக்ஷாயதன் கல்லூரியில் கல்வியில் பட்டமும், கொல்கத்தாவில் உள்ள ஜோகேஷ் சந்திர சவுத்ரி சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பும் முடித்தார். புவனேஸ்வரில் உள்ள கலிங்கா இன்ஸ்டிடியூட் ஆப் இன்டஸ்ட்ரியல் டெக்னாலஜியில் இருந்து கெளரவ டாக்டர் பட்டமும், கல்கத்தா பல்கலைக்கழகத்தில் கவுரவ இலக்கிய முனைவர் பட்டமும் (டி.லிட்.) பெற்றார்.

    தேசிய மாணவர் காங்கிரஸ் அமைப்பில் தீவிரமாக ஈடுபட்டதன் விளைவாக 15 வயதிலேயே தீவிர அரசியலில் இறங்கினார். அப்போதே காங்கிரஸ் கட்சியின் மாணவர் பிரிவான சத்ர பரிஷத் யூனியனை நிறுவினார். இந்திய சோசலிஸ்ட் யூனிட்டி சென்டர் (கம்யூனிஸ்ட்) உடன் இணைந்த அகில இந்திய ஜனநாயக மாணவர் அமைப்பை தோற்கடித்து, கல்லூரியின் மாணவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    1975-ம் ஆண்டு அரசியல் போராளியான ஜெயப்பிரகாஷ் நாராயணை விமர்சிக்கும் வகையில் கார் மீது ஏறி மம்தா பானர்ஜி நடனமாடிய வீடியோ ஊடகங்கள் வாயிலாக வெளியாகி பரபரப்பு கிளப்பியது. இதன் மூலமாக மம்தா பானர்ஜி பலருக்கு அறிமுகமான, ஊடகங்கள் திரும்பி பார்க்கக்கூடிய முகமான மாறினார்.

    அரசியல் பயணம்:

    நீல நிற பார்டர் போட்ட வெள்ளை நிற காட்டன் புடவை, காலில் சாதாரண வெள்ளை நிற செருப்பு, கண்ணில் மூக்கு கண்ணாடி என பார்க்க மிகவும் எளிமையான தோற்றத்தில் இருந்தாலும் ‘அயன் லேடி’, ‘வங்கத்து பெண் புலி’, ‘வங்கத்து பெண் சிங்கம்’ என்றெல்லாம் பலரும் போற்றிப்புகழும் அளவுக்கு மிகவும் உறுதியான மனநிலை மற்றும் செயல்பாடுகளைக் கொண்டவர். அந்த உறுதிப்பாட்டைப் பெற மம்தா பானர்ஜி அரசியலில் கடந்து வந்த படிகள் ஏராளம்.

    1976-1980 வரை, மம்தா பானர்ஜி மேற்கு வங்கத்தின் மகிளா காங்கிரஸின் பொதுச் செயலாளராக பணியாற்றியுள்ளார். 1984 நடந்த நாடாளுமன்ற தேர்தலில், மேற்கு வங்கத்தில் உள்ள ஜாதவ்பூர் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி, மார்க்சிஸிட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினராக இருந்த சோம்நாத் சாட்டர்ஜியை தோற்கடித்தார். இதன் மூலம் இந்தியாவின் இளம் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவராக பெயர் பெற்றார்.

    இந்த வெற்றி கட்சியிலும் அவருக்கான முக்கியத்துவத்தை அதிகரித்தது, 1984ம் ஆண்டு இந்திய இளைஞர் காங்கிரஸின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றார். 1989ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில், அவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) மாலினி பட்டாச்சார்யாவிடம் தோல்வி அடைந்தார். ஆனால் அதன் பின்னர் 1991 நடந்த தேர்தலில் கொல்கத்தாவின் தெற்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி கண்டார். அதன் பின்னர் 1996, 1998, 1999, 2004 மற்றும் 2009 வரை நடந்த அனைத்து தேர்தல்களிலும் மம்தா பானர்ஜி வெற்றி மட்டுமே பெற்றுள்ளார்.

    1991-1996 வரை பி.வி. நரசிம்ம ராவ் ஆட்சியில் மத்திய அமைச்சரவையில் முக்கியப் பதவிகளை வகித்தார். மத்திய மனிதவள மேம்பாடு, இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுக்கான இணை அமைச்சராக பதவி வகித்துள்ளார்.

    மத்திய இணை அமைச்சராக 1993-ம் ஆண்டு மமதா பானர்ஜி இருந்தபோது மேற்கு வங்கத்தின் முதல்வராக ஜோதிபாசு இருந்தார். அப்போது மாற்றுத்திறனாளி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை எதிர்த்து அரசுக்கு எதிராக முதல்வர் அலுவலகத்தின் முன் தர்ணாவில் ஈடுபட்டார். அப்போது காவல்துறையினர் அவரை வலுக்கட்டாயமாக கைது செய்தனர். இதனால் கடும் அதிருப்தி அடைந்த மம்தா பானர்ஜி, 1993ம் ஆண்டு பதவியில் இருந்து விலகினார்.

    தொடர்ந்து மேற்கு வங்க பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சோமேந்திர நாத் மித்ராவுடனான அரசியல் கருத்து வேறுபாடு காரணமாக அக்கட்சியில் இருந்து விலகிய மம்தா பானர்ஜி, 1997 ஆம் ஆண்டு முகுல் ராயுடன் இணைந்து இந்திய திரிணாமுல் காங்கிரஸ் என்ற கட்சியை நிறுவினார்.

    1999-ல் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொண்ட மம்தா பானர்ஜி, முதல் முறையாக ரயில்வே பெண் அமைச்சராகப் பதவியேற்றார். அவர் 2000ஆம் ஆண்டில் தனது முதல் ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்தார், அப்போது 2000-2001 நிதியாண்டில் மட்டும் 19 புதிய ரயில்களை அறிமுகப்படுத்தினார் மற்றும் அவரது சொந்த மாநிலமான மேற்கு வங்காளத்திற்கு அளித்த பல்வேறு வாக்குறுதிகளையும் நிறைவேற்றி மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

    2001 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், தெஹல்கா இதழின் ‘ஆபரேஷன் வெஸ்ட் எண்ட்’ ஊழல் சர்ச்சையைத் தொடர்ந்து பாஜக கூட்டணியில் இருந்து விலகிய மம்தா, இந்திய தேசிய காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்தார்.

    செப்டம்பர் 2003ம் ஆண்டு மீண்டும் பாஜகவுடன் கூட்டணி வைத்து எந்த ஒரு இலாகாவும் இல்லாமல் கேபினட் அமைச்சராக பணியாற்றினார். 9 ஜனவரி 2004 முதல் 22 மே 2004 வரை நிலக்கரி மற்றும் சுரங்க அமைச்சராக பணியாற்றி வந்தார்.

    2004ம் ஆண்டு நடந்த தேர்தலில் மீண்டும் பாஜகவுடன் கூட்டணி வைத்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. இதனையடுத்து 2006ம் ஆண்டு நடந்த மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் தோற்கடிக்கப்பட்டார்.

    உண்ணாவிரதம், நந்திகிராம் கலவரம்:

    20 அக்டோபர் 2005 அன்று, மேற்கு வங்கத்தில் உள்ள புத்ததேவ் பட்டாச்சார்ஜி அரசு, நில கையகப்படுத்துவதற்கு எதிராக நந்திகிராம், சிங்கூர் பகுதிகளில் நடைபெற்ற போராட்டம் தேசிய அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த போராட்டத்தின்போது நிலம் கையகப்படுத்தப்படுவதற்கு எதிராக 26 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார். இதன் மூலம் தேசிய அளவில் கவனம் பெற்ற மம்தா பானர்ஜி, மேற்கு வங்க மக்கள் புகழும் வண்ணம் ‘வங்கத்து பெண் புலியாக’ உருவெடுத்தார்.

    2007 ஆம் ஆண்டில், மேற்கு வங்காள அரசுக்கு எதிரான போராட்டத்தை முறியடிக்க ஆயுதமேந்திய காவலர்கள் புர்பா மேதினிபூர் மாவட்டத்தின் கிராமப்புறப் பகுதியில் தாக்குதல் நடத்தினர். இந்தோனேசியாவை தளமாகக் கொண்ட சலீம் குழுமத்தால் உருவாக்கப்படும் சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்காக (SEZ) 10,000 ஏக்கர் (40 கிமீ2) நிலத்தை அபகரிக்க அரசாங்கம் திட்டமிட்டிருந்தது. அறிக்கைகளின்படி, குறைந்தபட்சம் 14 கிராமவாசிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர், 70 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர், இதனால் பெரிய அளவிலான மக்கள் போராட்டம் வெடித்தது.

    இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, மம்தா பானர்ஜி அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீல் ஆகியோருக்கு நந்திகிராமில் நடந்த வன்முறையை நிறுத்தக் கோரி கடிதம் எழுதிய மம்தா பானர்ஜி அரசைக் கடுமையாக விமர்சித்தார்.

    ‘திரும்ப வந்துட்டேன்னு சொல்லு’ – கெத்து காட்டிய மம்தா:

    2009 நடந்த நாடாளுமன்ற தேர்தலில், மம்தா பானர்ஜியின் கட்சி, தேசிய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியுடன் (UPA) கூட்டணி அமைத்தது. தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் ரயில்வே அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    இரண்டாவது முறையாக மத்திய ரயில்வே அமைச்சரான பிறகு, பெரிய நகரங்களை இணைக்கும் இடைநில்லா துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயில்கள் மற்றும் பெண்கள் மட்டும் செல்லும் ரயில்கள் உட்பட பல பயணிகள் ரயில்களை அறிமுகப்படுத்தினார்.

    அதன் பின்னர் 2003 – 2004, 2009 – 2011 ஆகிய ஆண்டுகளில் மத்திய அமைச்சராக இருந்தார்.

    முதல்வராக மம்தா பானர்ஜி:

    2011 மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் 34 வயதிலேயே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை (மார்க்சிஸ்ட்) தோற்கடித்த மம்தா பானர்ஜி, மேற்கு வங்காளத்தின் முதல்வராக பொறுப்பேற்றார்.

    முதல்வராக பதவியேற்றதும் 400 ஏக்கர் நிலத்தை சிங்கூர் விவசாயிகளுக்குத் திருப்பிக் கொடுத்தது, கோர்க்காலாந்து பிராந்திய நிர்வாகத்தை நிறுவினார் மற்றும் கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளில் சீர்திருந்தங்களை கொண்டு வந்தது.

    மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமையை மேம்படுத்தும் முயற்சியில், அவர் ஹவுரா, பாரக்பூர், துர்காபூர்-அசன்சோல் மற்றும் பிதான்நகர் ஆகிய இடங்களில் போலீஸ் கமிஷனர்களை உருவாக்கியது, கொல்கத்தா நகரின் பல்வேறு பகுதிகளுக்கும் சுதந்திர போராட்ட வீரர்கள் தியாகிகள் பெயரைச் சூட்டியது என பல்வேறு காரியங்களை செய்துள்ளார்.

    2016 மேற்கு வங்க சட்டசபை தேர்தலில், அவரது கட்சி 293 இடங்களில் 211 இடங்களை வென்றது. இதனால் இரண்டாவது முறையாக மேற்கு வங்க முதல்வராக பதவியேற்றார்.

    2021 மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில், அவரது கட்சி 294 இடங்களில் 213 இடங்களில் வெற்றி பெற்றது. இதன் மூலமாக தொடர்ந்து மூன்றாவது முறையாக மேற்கு வங்காளத்தின் முதல்வராக 5 மே 2021 அன்று பதவியேற்றார்.

    மேற்கு வங்காளத்தின் முதல் மற்றும் இன்றுவரை ஒரே பெண் முதல்வராக இருந்து வருகிறார். மேற்கு வங்கத்தில் தொடர்ந்து 3 முறை முதல்வராக பொறுப்பேற்றவர் என்ற பெருமையும் மம்தா பானர்ஜியையே சாரும். தற்போது இந்தியாவில் மம்தா பானர்ஜி மட்டுமே ஒரே ஒரு பெண் முதல்வராக ஆட்சி நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.